மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம் - சிவகங்கை !

தொழிற்சாலைகள் வரவேண்டும் ! பானுமதி அருணாசலம்,படங்கள்: சாய்தர்மராஜ்.

##~##

'மருதுசீமை’ என பெருமையோடு அழைக்கப்படும் ஊர் சிவகங்கை. வீரப்பெண்மணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பிறந்த மண் என்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர். இந்த ஊரில் இருக்கும் வளங்கள் என்னென்ன, என்னென்ன தொழில்கள் இங்கே நடக்கின்றன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள சிவகங்கை சீமையை ஒரு ரவுண்டு அடித்தோம்.

மிகவும் வறட்சி மிகுந்தப் பகுதியாக இருக்கும் சிவகங்கை மக்களின் பொருளாதாரம், நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த ஊரின் ஐ.ஓ.பி. வங்கியின் மேனேஜர் பெருமாளிடம் கேட்டோம். ''விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்களுக்குப் பெரிய அளவில் நீர் ஆதாரம் ஏதும் கிடையாது. திருபுவனம் பகுதிக்கு மட்டும் வைகையிலிருந்து தண்ணீர் குறைவான அளவில் கிடைக்கிறது. கடலை, எள் வகைகள், மஞ்சள் பயிர்கள் விளைகிறது. போர்வெல் பயன்பாடுகூட குறைவாகவே இருக்கிறது. அதனால் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புகூட இங்கிருக்கும் மக்களால் செய்ய முடியவில்லை. எனவேதான் இங்கிருக்கும் இளைஞர்கள் படித்து முடித்ததும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். மிச்சமிருக்கும் நபர்களும் தங்கள் கைவசம் இருக்கும் விவசாய நிலங்களை விற்றுவிட்டு, தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இந்த ஊரில் சொல்லிக் கொள்ளும்படி தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததினால் வேலை வாய்ப்பு என்பது சுத்தமாக இல்லை. சமீபத்தில் திருமயத்தில் பி.ஹெச்.இ.எல். யூனிட் தொடங்கியதால் அதனைச் சார்ந்த சார்பு யூனிட்கள் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் வர வாய்ப்பிருக்கிறது. இங்கு அதிகளவில் கிரானைட் கிடைக்கிறது. ஆனால், அதை பயன்படுத்தி எந்தவித தொழிற்சாலையும் வரவில்லை. விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் சர்க்கரை ஆலைகளும் சரியான நேரத்தில் கரும்புக்கு உரிய பணத்தைக் கொடுப்பதில்லை எனச் சொல்கிறார்கள்.

ஊர் ஜாதகம் - சிவகங்கை !

இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக சிறு தொழில் கள் வளர்ச்சியடைந்து வருகிறது. நாங்களும் விவசாயம் சாராத பண்ணைகள் அமைக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதன் முக்கிய நோக்கமே இளைஞர்கள் ஊரைவிட்டு வெளியில் போகாமல் இந்த மாவட்டத்திலே தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான்.

வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த மாவட்டத்தில் மட்டும் 6,000 கோடி ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வேலை வாய்ப்பிற்கும் பல முயற்சிகளை செய்து வருகிறோம். முக்கியமாக, காளான் வளர்ப்பை செய்ய பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். அவர்களும் ஆர்வத்துடன் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில வருடங்களில் விவசாயம் இல்லாத சுயதொழில்கள் அதிகளவில் இங்கு பெருகும்'' என்று நம்பிக்கையுடன் பேசினார்.

சிவகங்கையில் அதிகமாகக் கிடைக்கும் மூலப்பொருள் கிராஃபைட். விமானங்களிலும், அணு உலை ரியாக்டர்களில் எண்ணெய் பசை உடைய பொருளாகப் பயன்படுகிறது. கார்பன் பிரஸ்கள், ரீஃபாக்டரி பிரிக்ஸ் உள்ளிட்டவைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. புதுப்பட்டி, குமரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 600 ஏக்கர் வரை கிராஃபைட் கிடைக்கிறது. அதாவது, மூன்று மில்லியன் டன் என அளவிடுகிறார்கள். இவ்வளவு கிராஃபைட் கிடைத்தும் அதைப் பயன்படுத்தி, இன்னும் தொழிற்சாலைகள் வராமல் இருப்பது குறித்து வருத்தத்தோடு பேசினார் கடன் ஆலோசகர் (ஆர்.பி.ஐ.) கிருஷ்ணன்.

ஊர் ஜாதகம் - சிவகங்கை !

''கரும்பு நன்கு வளர்ந்தாலும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் பணம் கொடுக்காததால் விவசாயிகள் கரும்பு பயிரிடவும் தயங்குகிறார்கள். இதுவரை சுமார்

27 கோடி ரூபாய் அளவுக்கு சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளுக்குப் பணம் வராமல் இருக்கிறது. இளையான்குடி பகுதியில் மஞ்சள் அதிகமாக விளைகிறது. இங்குள்ள விவசாயிகள் கடன் வாங்கினால் சரியான நேரத்தில் கடனைத் திருப்பி தருகின்றனர். சுயஉதவி குழுக்களுக்கு வழங்கிய கடன்களும் இதுவரை 95 சதவிகிதம் திரும்பக் கிடைத்துள்ளது. ஏதாவது தொழில் செய்து முன்னேறவேண்டும் என துடிக்கும் மக்களுக்கு அரசு இன்னும் பல பயிற்சிகள் கொடுத்து அவர்களை தொழில்முனைவோர் ஆக்கலாம்'' என்றார்.

1985-ம் வருடத்தில் சிவகங்கையை மாவட்ட தலைமையிடமாக மாநில அரசு அறிவித்தது. கிட்டத்தட்ட 28 வருடங்கள் கடந்தும் ஒரு மாவட்டத்துக்குத் தலைமையான ஊர் அடைய வேண்டிய வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. இதுகுறித்து சிவகங்கை நகராட்சியின் தலைவர் அர்ச்சுணனிடம் கேட்டோம்.

ஊர் ஜாதகம் - சிவகங்கை !

''இந்த ஊர் உருவாகி 300 வருடங்கள் இருக்கும். சுமார் 50,000 மக்கள் தொகையைக்கொண்ட ஊர். அந்தக் காலத்தில் ஜமீன் தலைமையிடமாகத் திகழ்ந்தது சிவகங்கை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி வர்த்தகம், தொழில் வளம் இல்லை. 1985-ல் மாவட்ட தலைமையிடமாக மாறியபிறகுதான் அரசு அலுவலகங்கள் இங்கு வரத் தொடங்கியது. இன்னும் பெரிய அளவுக்கு முக்கிய நகரங்களுக்கு சாலைகளோ, ரயில் வசதிகளோ வரவில்லை. தற்போதுதான் மானாமதுரை முதல் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை வரபோகிறது. ஒரு வருடத்திற்கு முன்புதான் அகல ரயில்பாதை திட்டம் வந்தது. இங்கிருந்து மதுரை 40 கி.மீ. என்பதால் மதுரையை நோக்கி வேலைக்குப் போவதும் அதிகமாக இருக்கிறது. தொண்டி துறைமுகம் வந்தால் எங்கள் ஊர் நன்கு வளர்ச்சி காணும்.

நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகமாகத் தேவைப்படுகிறது. பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவேண்டும்; தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் வந்தால் நன்றாக இருக்கும். மருத்துவக் கல்லூரி வந்தபிறகு அதைச் சார்ந்து சிவகங்கை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொறியியல் கல்லூரி இன்னும் வரவில்லை.

எந்தவித தொழிற்சாலைகளும் கிடையாது. அதனால் கிளஸ்டர் வடிவில் தொழில்களைக் கொண்டு வரவேண்டும். சிறு தொழில்களை அதிகமாகக்கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறோம்.

மேலும் மஞ்சளும், பருத்தியும் அதிகமாக விளைகிறது. இதனை இன்னும் அதிகப்படுத்த முயன்று வருகிறோம். சிவகங்கையில் மத்திய அரசின் நறுமணப் பொருட்கள் ஆணையம் கொண்டு வந்தார்கள். சுற்றியிருக்கும் ஊர்களி லிருந்து மஞ்சள், ஏலக்காய் போன்ற பொருட்களை வாங்கி பதப்படுத்தி, சந்தைப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு அது அடிக்கல் நாட்டிய துடன் கிடப்பில் கிடக்கிறது.

ஊர் ஜாதகம் - சிவகங்கை !

அதிகப்படியான நிலங்கள் இருப்பதால் புதிதாகத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.  அரசு அதிகப்படியான கவனத்தை எங்கள் மாவட்டத்தில் செலுத்தவேண்டும்'' என்றார்.

மருத்துவக் கல்லூரி வந்தபிறகு ஊரில் ரியல் எஸ்டேட் நிலவரமும், வீட்டு வாடகையும் அதிகரித் திருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யும் மாலிக்-கைச் சந்தித்தோம். ''நீங்கள் சொல்வதுபோல் மருத்துவக் கல்லூரி வந்தபிறகு அதன் பெயரைச் சொல்லி நிலத்தின் மதிப்பை அதிகரித்து வருகின்றனர். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் ஊர் இது. ஒரு சென்ட் 50,000 ரூபாய்க்கு மேல் போனாலே விற்பது கடினமாக இருக்கிறது. நகரத்தின் மத்திய பகுதியில் சதுரடி 1,000 ரூபாய்க்கு விலை போகிறது. ஏதாவது, தொழிற்சாலை வந்தால் மட்டுமே இந்த நகரம் வளர்ச்சி காணும். தொண்டி துறைமுகம் வந்தால் சிவகங்கையின் வளர்ச்சி  அதிகரிக்கும்'' என்றார் அவர்.

மானாமதுரை, காரைக்குடி, இளையான்குடி திருப்பத்தூர் தாலுகாக்களை உள்ளடக்கியது சிவகங்கை மாவட்டம். இந்த மாவட்டத்தில் சிறுதொழில் எப்படி இருக்கிறது என சிவகங்கை மாவட்டத்தின் சிறு தொழில்கள் கூட்டமைப்பின் செயலாளர் கே.டி.கண்ணப்பனிடம் கேட்டோம்.

''இந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரே முக்கிய வளம் கிராஃபைட்தான். இங்கிருந்து ஆந்திரா, ராஜஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறது. ஆனால், இங்கேயே இதற்கு ஒரு தொழிற்சாலை நிறுவவேண்டும் என பலதரப்பட்ட கோரிக்கைகள் வைத்தும் நடைபெறவில்லை. அரசியல்வாதிகள் தலையிட்டு தீவிர முயற்சி எடுத்தால் தொழிற்சாலை வர வாய்ப்பிருக்கிறது. இங்கு நிறைய நிலங்கள் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி நிறுவனங்கள் வரவேண்டும்.

எப்படி தொழில் செய்யவேண்டும் என நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். எனினும், 90 சதவிகித இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுதான் சம்பாதிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் உள் கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் மட்டுமே அனைத்துத் தரப்பினரும் முயற்சி செய்து வளர்ச்சி காணமுடியும்'' என்றார்.

சிவகங்கை மாவட்டத் தலைமை யிடம் என்றாலும்கூட, பக்கத்தில் இருக்கும் காரைக்குடியில்கூட பணப்புழக்கம் அதிகமாகவும், நல்ல வளர்ச்சியும் இருக்கிறது. சிவகங்கையில் மட்டும் சுமார் 16 வங்கிகளின் கிளைகள் இருக்கின்றன. ஆனால், இத்தனை வங்கிகள் இருந்தாலும் பணப்புழக்கமும், தொழில் வளமும் பெரிதாக இல்லை என்பது இந்த ஊர் மக்களின் புலம்பலாக இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் சில திட்டங்கள் வந்திருக்கிறது, பெயரளவில். எனினும், அரசு நினைத்தால் மட்டுமே இந்த ஊரை மேலும் வளர்ச்சி காணவைக்க முடியும்.