மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம் - திண்டுக்கல் !

பாரம்பரியத் தொழில்களை காப்பாற்றுங்கள்!க.அருண்குமார்,படங்கள்: வீ.சிவக்குமார்.

##~##

திண்டுக்கல் என்றவுடனேயே பலரும் சட்டென நினைப்பது பூட்டுதான். பூட்டுத் தொழில் மட்டுமின்றி, நூற்பாலைகள், நெசவுத் தொழில், தோல் பதனிடும் தொழில் என பல தொழில்கள் இருக்கிறது இந்த ஊரில்.  சிறுமலை வாழை மற்றும் பலாப் பழம், ஒட்டன்சத்திரம் காய்கறி, நிலக்கோட்டை பூ என திண்டுக்கல்லைச் சுற்றி விவசாயிகளின் உழைப்பால் விளைந்தப் பொருட்கள் பல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குத் தினமும் ஏற்றுமதியாகி வருகின்றன.  

இந்த ஊரின் பொருளாதாரம் சிறப்பான முன்னேற்றம் காண, தொழில் துறையில் இந்த ஊர் சிறந்து விளங்க இன்னும் என்னென்ன வசதிகளும் திட்டங்களும் கொண்டுவரவேண்டும் என திண்டுக்கல்லில் ஓட்டல் நடத்திவரும் ராஜ்குமாரிடம் கேட்டோம்.

'திண்டுக்கல்லில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை எங்கே ஆரம்பித்து, எங்கே முடிப்பது என்று தெரியாமல் எல்லா இடங்களிலும் தோண்டிப் போட்டுவிட்டனர். இதை நான்கு மண்டலமாகப் பிரித்து அதில் ஒவ்வொன்றாக எடுத்து முடித்து இருக்கலாம். ஆனால், எல்லா மண்டலங்களிலும் தோண்டிப் போட்டதால், ஊரே ஸ்தம்பித்துப்போய் நிற்கிறது. இரண்டு வருடங்களில் முடிந்திருக்கவேண்டிய இந்த வேலை, ஆறு வருடங்களாகியும் இன்னும் முடியவில்லை. திட்டம் முழுதாக முடிய இன்னும் எவ்வளவு வருஷம் ஆகுமோ!

இரண்டாவதாக, திண்டுக்கல்லுக்கும் சென்னைக்கும் இடையேயான ஒரு வழி ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றவேண்டும். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையைச் செப்பனிடும் பணியை விரைந்து முடித்தால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகாமல் தவிர்க்க முடியும். மேலும், கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்றவேண்டும். இப்படி மாற்றுவதால் கொடைக்கானலுக்கு இன்னும் விரைந்து செல்லமுடியும். திண்டுக்கல்லில் ஒரு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அவசியம் தேவை' என்றார் நிறைவாக.

ஊர் ஜாதகம் - திண்டுக்கல் !

திண்டுக்கல்லில் தொழில் வளர்ச்சி அடைய இன்னும் என்னென்ன செய்யவேண்டும் என வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமியிடம் பேசினோம்.

'திண்டுக்கல்லுக்குப் பூட்டு மற்றும் இரும்புப் பெட்டி செய்வது பாரம்பரியமான தொழில். இப்போது அந்தத் தொழிலை மிகவும் சிரமப்பட்டு சாதாரண அளவிலேயே செய்கிறார்கள். காரணம், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு 'மார்க்கெட்டிங்’ செய்ய முடியவில்லை. இந்தத் தொழிலை முன்னேற்ற அரசு சரியான மானியம் அளிக்கவேண்டும். மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பூட்டுகள் வருகையும் இத்தொழில் நலிவடைய முக்கிய காரணம். ஆனால், திண்டுக்கல் பூட்டுகள் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் பூட்டுகளைவிட தரமானவை.

திண்டுக்கல்லில் நிறைய நூற்பாலைகள் உள்ளன. இங்குத் தயார் செய்யப்படும் நூல்கள் துணிகளாக மாறி சாயமிட வடமாநிலங்களுக்குச் செல்லும் நிலைமையே காணப்படுகிறது. இதை களைய திண்டுக்கல்லில் ஒரு டெக்ஸ்டைல் பார்க்கை கொண்டுவரவேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் ஜவுளித் துறையில் திண்டுக்கல் பேர்பெற்று விளங்கும்'' என்றார் நம்பிக்கையுடன்.

ஊர் ஜாதகம் - திண்டுக்கல் !

திண்டுக்கல்லில் ஆகா ஃபுட்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர் கி.கங்காதரனுடன் பேசினோம்.

'கோவை என்றால் தொழில், மதுரை கோயில் நகரம், திருச்சி காவிரி டெல்டா, ஈரோட்டில் ஜவுளி மற்றும் போர்வை, நாமக்கல் என்றால் கோழி இறைச்சி மற்றும் கோழிமுட்டை என தனக்கென அடையாளங்களைப் பெற்றுள்ளன. ஆனால், திண்டுக்கல்லுக்கு இது போன்ற அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சிறுமலை வாழைப்பழம் மற்றும் திண்டுக்கல் பூட்டு, தோல் பதனிடும் தொழில் ஆகியவை அழிவை நோக்கிதான் சென்று கொண்டுள்ளது. இதை மீட்டு புனரமைக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊர் ஜாதகம் - திண்டுக்கல் !

திண்டுக்கல்லின் பல பகுதிகளிலும் பூ விளைச்சல் அதிகம். இங்கிருந்து பல ஊர்களுக்குப் பூக்கள் ஏற்றுமதியாகின்றது. மேலும், பூக்களில் இருந்து பெறப்படும் நறுமணப் பொருட்களைக்கொண்டு பொருட்கள் தயாரிக்க உடனடியாகத் திட்டம் தேவை. இதற்கான திட்டத்தை மாநில அரசாங்கம் தீட்டுவதோடு, தேவையான நிதியை ஒதுக்கவேண்டும்.

சிறுமலையை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றவேண்டும். அதற்கு அரசு சிறுமலையில் ஒரு தங்கும் விடுதியோ பொழுதுபோக்கு அம்சங்களையோ அமைத்துத் தரவேண்டும். கொடைக்கானலைக்காட்டிலும் சிறுமலை, திண்டுக்கல் நகருக்கு மிக அருகில் உள்ளது. சிறுமலையைச் சுற்றுலாத்தலமாக அறிவித்து முறையாகப் பராமரிக்கும்பட்சத்தில் அதனை ஒட்டிய மாவட்டத் தலைநகரமான திண்டுக்கல்லும் வளர்ச்சியடையும்.

வத்தலகுண்டு, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்கள் காய்கறிக்கு நல்ல சந்தையாக உள்ளன. இங்கிருந்து மாநிலம் முழுமைக்கும், வேற்றுமாநிலங்களுக்கும் காய்கறி ஏற்றுமதியாகின்றன. இத்தொழிலை மேலும் வளப்படுத்த காய்கறி வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவேண்டும். அய்யலூரில் தக்காளி விளைச்சல் அதிகம். தக்காளி மற்றும் காய்கறிகள் அழுகிப் போவதைத் தவிர்க்க முறையான குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தரவேண்டும்.

மேலும், ஏற்கெனவே அரசால் அமைக்கப்பட்ட குளிர்பதனக் கிடங்குகளில் முறையான பராமரிப்பு இல்லாதக் காரணத்தால் சரியாகச் செயல்படாத நிலை காணப்படுகிறது. இவை முறையாகச் செயல்படுவதற்கான நடவடிக்கையை அரசு அவசியம் எடுக்கவேண்டும். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டை சுகாதார ரீதியாக மேலும் வளப்படுத்தவேண்டும். மேலும், ஒட்டன்சத்திரத்தில் புதியதாகக் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை அங்காடி உபயோகத்திற்கு வராமலேயே உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊர் ஜாதகம் - திண்டுக்கல் !

சிறுமலை வாழைப்பழம், பூட்டுத் தொழில் ஆகியவை இன்று இழுத்து மூடப்பட்டுவிடாமலும் அதை சிட்கோ மூலமாகவோ, தொழில் முன்னேற்ற கழகம் மூலமாகவோ புனரமைப்பு செய்யவேண்டும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும், சுயஉதவிக் குழுக் களுக்கு அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுபோல், இந்தப் பூட்டு மற்றும் சிறுமலை வாழைப்பழம் ஆகியவற்றை உற்பத்தி செய்வோரை ஒருக்கிணைத்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி இத்தொழிலை புனரமைக்க வேண்டும்'' என்றார்.

''மதுரையை அடுத்து திண்டுக்கல்லில்தான் நெசவாளர்கள் அதிகம். அவர்களில் பலர் வேலையிழந்து குடும்பம் குடும்பமாக வேறுதொழிலுக்கு மாறி வருகிறார்கள். இந்த ஊர் நெசவாளர்கள் தயாரிக்கும் சேலைகள் மும்பை, சூரத், புவனேஸ்வர் போன்ற இடங்களுக்குச் செல்கின்றன. நல்ல தரம் கொண்ட காரணத்தாலேயே  இவற்றுக்கு இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது. இப்படிப்பட்ட நெசவுத்தொழில் அழிவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும்.  

இவ்வளவு பெரிய திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் ஒரு சட்டக் கல்லூரி கிடையாது. அரசு இதற்கு முறையான நடவடிக்கை மேற்கொண்டு ஒரு சட்டக் கல்லூரியைத் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கவேண்டும். மத்திய அரசின் பள்ளியான கேந்திர வித்யாலயா தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் செயல்பாடு மற்றும் முக்கியத்துவத்தை மக்கள் உணரக்கூடிய எந்த ஒரு தாக்கத்தையும் மக்கள் மத்தியில் அது ஏற்படுத்தவில்லை.

ஊர் ஜாதகம் - திண்டுக்கல் !

திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது திண்டுக்கல் பேருந்து நிலையம். இங்கு இடவசதி நிறைய இருந்தாலும் பேருந்து நிலையத்தின் நாலாபுறங்களிலும் ஒரே சிறுநீர் நாற்றம். சரியான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். தவிர, இந்தப் பேருந்து நிலையத்திற்கு சரியான நுழைவாயிலோ அல்லது வெளியேறும் வாயிலோ கிடையாது. பேருந்து எந்தப் பகுதியின் வழியாகவும் உள்ளே வரலாம்; எந்தப் பகுதி வழியாகவும் வெளியேறலாம்.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலைமைக் காணப்படுகிறது. பேருந்து நிலையத்தில் ஒரு டூவீலர் ஸ்டாண்ட்கூட கிடையாது. அதேபோல் பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள லாட்ஜ் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பொதுமக்களுக்குப் பயன்படாமல் அனைத்து சமூகவிரோதச் செயல்பாடுகளும் நடைபெறும் இடமாக உள்ளது. நகர வளர்ச்சியே கேள்விக்குள்ளாகி இருக்கும்  நிலையில் திண்டுக்கல் நகரத்தை மாநகராட்சி ஆக்குவது எந்த வகையில் சரி?'' என்றார் பொறியாளரும் அகில இந்திய கட்டுநர் சங்க முன்னாள் தலைவரும் ஏ.பி.சி. பாலிடெக்னிக் முதல்வருமான மணிவண்ணன்.

விவசாயம், தொழில் என பல்வேறு துறைகளில் தானே முண்டியத்து முன்னுக்குவரும் திண்டுக்கல் தொழிலாளர்களுக்கு அரசு சலுகைகள் பல வழங்கி, அவர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஆவன செய்தால் பல்வேறு துறைகளில்

முதன்மை மாவட்டமாகத் திண்டுக்கல் ஜொலிக்கும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.