மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம் - சேலம்

புறநகர் பேருந்து நிலையம் வேண்டும் ! வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்.

##~##

இரும்பு, பாக்ஸைட், மைக்கா போன்ற கனிம வளங்கள் நிறைய கிடைக்கும் சேலம் இன்றைக்கு தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரமாக வளர்ச்சி கண்டிருக்கவேண்டும். ஆனால், போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இந்த நகரம் செல்லவேண்டு மெனில், இன்னும் என்னென்ன விஷயங்கள் தேவை? என்பதைத் தெரிந்துகொள்ள இந்நகரத்தின் பல தரப்பினரையும் சந்தித்தோம்.

நாம் முதலில் சந்தித்தது, ஸ்டீல் தொழில் அதிபர், ஈசன் எழில் விழியனை. அடிப்படை விஷயங்களில் இருந்து ஆரம்பித்தார் அவர். ''ஒரு நகரம் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான வசதிகளைச் செய்துதருவது ஒருபக்கம் என்றால், நகரைத் தூய்மையாக வைத்திருப்பதும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் உடனடித் தேவையாக இருக்கிறது. மாநகராட்சி இதை தொடர்ச்சியாகச் செய்துதர வேண்டியது அவசியம். மேலும், தற்போதைய பேருந்து நிலையத்தை நகரத்திற்கு வெளியே கொண்டு சென்றால்தான் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கிடைக்கும். இதுதவிர, செயல்படாமல் உள்ள விமானப் போக்குவரத்து சேவையையும் சேலத்துக்குக் கொண்டுவர வேண்டும். எங்களது தொழில் தேவைகளையும் தாண்டி ஏன் இந்த கோரிக்கைகளை வைக்கிறோம் என்றால், இந்த அடிப்படை வசதிகள் எல்லாமே தொழில் வளர்ச்சிக்கு பக்க பலமானவை.

தொழிற்துறை வளர்ச்சியில்கூட இரும்பு உருக்கு நிறுவனங்கள், பட்டறைத் தொழில்கள் சேலத்தில் அடுத்தகட்ட உதவிகளை எதிர்பார்த்து இருக்கின்றன. இதுதவிர, மோட்டார் உதிரிபாகம் உற்பத்தி நிறுவனங்கள் கொண்டுவரலாம். அதற்கான இடவசதி மற்றும் தொழிற்துறை சப்போர்ட்டுகளை அரசாங்கம் எங்களுக்கு கொடுக்கவேண்டும்'' என்றார்.

ஊர் ஜாதகம் - சேலம்

அவர் சொன்னதுபோல சேலம் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தற்போதைய பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றிவிட்டு, புறநகர பேருந்து நிலையத்தை நகரத்திற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும் என்கின்றனர் மக்கள். அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாவது இந்த கோரிக்கை நிறைவேறினால், இந்த நகரம் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிடும்.

ஊர் ஜாதகம் - சேலம்

நாம் அடுத்ததாக சந்தித்தது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாஸ்கர் என்பவரை. ''தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சியாக இருக்கிறது சேலம். ஆனால், எந்தத் திட்டம் என்றாலும், மதுரை, கோவை என்று யோசிக்கிறார்கள். குறிப்பாக, மதுரையை மையமாக வைத்து உயர்நீதிமன்ற கிளை, கோவையை மையமாக வைத்து தொழில் உற்பத்தி நிலையங்கள் என பிற மாநகராட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவ்வளவு ஏன், திரைப்படத் துறையில் முக்கிய இடத்தை வகித்த சேலத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படக் கல்லூரி கொண்டுவரலாமே! அதையும் உடனடியாகக் கொண்டுவர முடியவில்லை என்றாலும், அந்தத் துறையில் சேலத்திற்கு உள்ள சிறப்பைப் போற்றும் வகையில் சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் ஒரு கிளையை கொண்டுவரலாமே..!

மேலும், சேலம் மாவட்டத்திற்குள் இருக்கும் காவிரி ஆற்றை திருமணிமுத்தாறு ஆற்றோடு இணைத்தால் சேலம் நகரின் குடிநீர் தேவைகள் மற்றும் நிலத்தடி நீர் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் டைடல்  பார்க் பணிகள் விரைத்து முடிக்கப்படவேண்டும். மேலும், சேலத்தின் கல்வி வசதியை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கவேண்டும்'' என்றார் அவர்.

சேலம் என்றாலே வெள்ளித் தொழில்தான் அடையாளமாக இருந்தது ஒரு காலத்தில். தற்போது நலிவடைந்த தொழிலாக மாறிவிட்ட இத்தொழிலை மீண்டும் மேம்படுத்த என்ன வழி என, வெள்ளி பட்டறை தொழில் அதிபர் ஜெயபிரகாஷைச் சந்தித்துக் கேட்டோம்.

ஊர் ஜாதகம் - சேலம்

''மக்களிடையே வெள்ளியின் மீதான மோகம் குறையவில்லை என்றாலும், வெள்ளி விலை காரணமாகத்தான் எங்கள் தொழில் நசிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆன்லைன் டிரேடிங்கில் வெள்ளியையும் கொண்டுவந்த பிறகுதான் இந்த நிலைமை. சேலத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தத் தொழிலை செய்து வருகிறோம். இரண்டு கிலோ வெள்ளி கிடைத்தாலும் அதை ஆன்லைன் டிரேடிங்கில் போட்டுவிடுகின்றனர். இதனால் வெள்ளித் தொழிலாளிகளின் வாழ்க்கை படுமோசமான நிலைக்கு போய்விட்டது. இதைத் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார்.  

இதுதவிர, ஜவ்வரிசி உற்பத்தி தொழிலும் சேலத்தில் பலருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசிகள் பெரும்பாலும் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்த விற்பனை இடைத்தரகர்கள் மூலம் நடப்பதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக பேச்சும் உள்ளது. இதனால் இந்த விற்பனையை ஓப்பன் டென்டராக விடவேண்டியது அவசியம் என்கின்றனர் இத்தொழில் செய்பவர்கள்.  

மேலும், சேலத்தில் விளைவிக்கப்படும் மாம்பழம், தக்காளி போன்றவை சீஸன் நேரங்களில் சரியான விலை கிடைப்பதில்லை என்பதால் மிக மலிவாகவோ அல்லது குப்பைகளில் கொட்டவேண்டிய நிலையோ இருப்பதால் விவசாயிகள் பாதிப்படையும் நிலை உள்ளது. இதற்கேற்ப சேலத்தில் உணவு பதப்படுத்தும் கிடங்கு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்கின்றனர் பலரும்.

நாம் அடுத்ததாக கைத்தறி பட்டு விற்பனை செய்துவரும் ஜெய்ஸ்ரீயைச் சந்தித்தோம். ''தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், தொழிற்துறை என்று எடுத்துக் கொண்டால், மிகவும் பின்தங்கிதான் இருக்கிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களும் பாரம்பரிய சிறப்பு கொண்டவை.    

ஊர் ஜாதகம் - சேலம்

சேலம் பகுதியின் ஓர் அங்கமாகத் திகழும் அம்மாப்பேட்டை பகுதி மக்களின் முக்கிய தொழிலே கைத்தறி உற்பத்திதான். ஆனால், அரசு மற்றும் தனியார் கைத்தறி சங்கங்கள் இருந்தாலும் கைத்தறிக்கான நூல்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. உடையாப்பட்டியில் பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் சேலம் கூட்டுறவு நூற்பாலையைத் திறந்து, அதன்மூலம் நூல் வழங்கினால் பல ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடையும். இதுதவிர, சேலத்தில் உயர் சிகிச்சைக் கொண்ட தரமான மருத்துவமனைகள் போதுமான அளவு கிடையாது. பொழுதுபோக்கு பூங்கா, குழந்தைகளுக் கான விளையாட்டு பூங்கா போன்ற வசதிகளும் சேலத்தில் குறைவுதான். ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு, பக்கத்தில்தான் இருக்கிறது என்றாலும் நகரத்திற்கு என்று இந்தத் தேவைகள் அவசியமாக இருக்கிறது'' என்றார்.

விவசாயம் மற்றும் தொழிற்துறை என இரண்டு வகைகளிலும் தன்னிறைவாக இருப்பதுதான் சேலத்தின் சிறப்பு. அடுத்த கட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் நகரத்திற்கு இந்த வகையில் வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டியது அவசியம்.