Published:Updated:

குடும்பமா... வேலையா? - 6

ஸ்டெப்ஸ்

குடும்பமா... வேலையா? - 6

''அத்தனைக்கும் ஆசைப்படு என்பதைப்போல... மகிழ்ச்சியான குடும்பம் வேண்டும்; தந்தையை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் அல்லாமல், அப்பாவாகவும் இருந்து நல்ல படிப்பையும் உலகம் குறித்த புரிதலையும் கொடுக்க வேண்டும்; அதற்கு வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்க வேண்டும்; வேலையில் அடுத்தடுத்த படிகளுக்கு முன்னேற பம்பரம் போன்று எப்போதும் சுழன்று உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், 'இதெல்லாம் ஒரே நேரத்தில் எப்படி சாத்தியம்?' என்று ஒரு நிமிடம்கூட நின்று நான் யோசித்ததில்லை!'' என்று சொல்லும் ரேணுகா ராம்நாத், குடும்பத்தையும்

##~##
வேலையையும் தராசின் இரண்டு தட்டுகளைப்போல எப்போதும் சமமாக பாவிக்கக் கூடியவர்... சாதிக்கவும்கூடியவர். அத்தகைய வித்தை கைவரப்பெற்ற ரேணுகா, அதையெல்லாம் தன் வார்த்தைகளிலேயே சொல்லக் கேட்போமா..!

 ''மிகப்பெரிய நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தன்னுடைய துணை நிறுவனமாக 'ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சர்' என்கிற மற்றொரு பெரும் நிறுவனத்தைத் துவக்கி, என்னை எம்.டி-யாகவும் நியமித்திருந்த காலம் அது. நான்கு, ஐந்து நிறுவனங்களிடமிருந்து  பல ஆயிரம் கோடிகளை வாங்கி... சில நூறு கோடிகளாகப் பிரித்து, நாற்பது, ஐம்பது நிறுவனங்களில் முதலீடு செய்து, பணத்தைப் பெருக்கி முதலீட்டாளர்களுக்கு திருப்பிக் கொடுப்பதுதான் வேலை. இதை நம்பி பல்லாயிரம் கோடிகளை யார் கொடுப்பார்கள்... என்ற தேடலில் நானும் சக ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டோம். சாப்பாடு, ஓய்வு என்று எல்லாவற்றையும் மறந்து, ஒரு நாளைக்கு 12, 13 மணி நேரம் அலைந்து திரிந்தோம். ஆனால்... பெரிய ரிசல்ட் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பளமும், நிறுவனம் நடத்தும் செலவும் அதிகமாகிக் கொண்டே போனது. மேலிடத்தில் இருந்து கேள்விகள் வருவதற்கு முன்... நிறுவனத்தை தூக்கி நிறுத்திவிட வேண்டுமே என்கிற பதைபதைப்பில் இருந்தேன்.

நாம் எதைத் தேடுகிறோமோ... அதை தீவிரமாக ஒருமுக சிந்தனையுடன் தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. நமது சிந்தனை, செயல், பேச்சு... என்று எல்லாம் நம் இலக்கை நோக்கிக் குவியும்போது... வெற்றிக்கான பாதை நிச்சயம் நம் கண்ணில் படும். ஒரு நாள் 'எக்னாமிக்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. எல்.ஐ.சி-யில் 18 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தேங்கிக் கிடப்பதாக வந்த அந்தச் செய்தியை சக ஊழியர்களிடம் காட்டி, 'இது ஒரு நல்ல வாய்ப்பு. நழுவ விடக்கூடாது’ என்று சொல்லி, அதேவேகத்தில் எல்.ஐ.சி-க்கு ஒரு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பினேன்.

ஒரு வாரத்துக்குப் பிறகு ஊழியர் ஒருவர், 'மேடம், நமது திட்ட அறிக்கையை நிராகரித்துவிட்டார்கள்' என்று சொல்லி சோகமான முகத்துடன் ஒரு கடிதத்தை நீட்டினார். எல்.ஐ.சி அனுப்பியிருந்த அக்கடிதத்தை படித்துவிட்டு மெல்லிய குரலில் 'ஃபென்டாஸ்டிக்!’ என்றேன். அவர், குழப்பதோடு என்னைப் பார்த்தார். 'யெஸ். நமது திட்டத்தை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால்.... நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நம்முடைய திட்ட அறிக்கையை யாரோ ஒருவர் தீவிரமாகப் படித்துதான் நிராகரித்திருக்கிறார். அவரை சந்தித்து இது எப்படி வெற்றியடையும் என்பதை விளக்க முடியும்!’ என்றேன்!

அதன்படியே குறிப்பிட்ட அதிகாரியை சென்று பார்த்தபோது, அடுத்த வாரம்... அடுத்த வாரம் என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். இரண்டரை ஆண்டுகள் எல்.ஐ.சி-க்கு நடையாக நடந்தோம். இடைப்பட்ட காலத்தில் எல்.ஐ.சி-க்கு ஐந்து தலைவர்கள் மாறிவிட்டார்கள். நாங்களோ தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டே இருந்தோம். எப்போதாவது அலுவலகத்தில் இருந்து சோர்வான முகத்தோடு வீட்டுக்கு வந்தால்... 'என்னம்மா இன்னிக்கு எல்.ஐ.சி மீட்டிங் நல்லா போகலியா?’ என்று என் மகள் கேட்கும் அளவுக்கு அது, என் வாழ்க்கையின் ஓர் அங்கமானது. இறுதியில் எல்.ஐ.சி-க்கு எங்கள் திட்டத்தின் மீதும், எங்கள் நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை வந்து, பெரும் பணத்தை முதலீடு செய்ய முன்வந்தது. அதன்பிறகு நடந்த எல்லாமே 'ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சர்’ சரித்திரம்!

குடும்பமா... வேலையா? - 6

வெற்றியை இப்படி இரண்டு பத்திகளில் சொல்வதால், ஒரு சாதாரண பெண்ணுக்கு ஏற்படும் எந்த சிரமங்களும் எனக்கு வரவே இல்லை என்று சொல்லவில்லை. பகலும், இரவும் மாறி மாறி வருவது போல... பாராட்டும், விமர்சனங்களும்; ஏற்றமும், இறக்கமும்; வெற்றியும், தோல்வியும் மாறி மாறித்தான் வந்தன. என்னதான் ஆயிரமாயிரம் கோடிகளில் புரண்டு கொண்டிருந்தாலும்... சொந்தப் பணம் என்பது என்னிடம் சுமாரான அளவுதான் இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பை துவங்கப் போன சமயம், 'வெளிநாட்டில் போய் படிக்கப் போகிறேன்!’ என்றான் மகன். அவன் தேர்ந்தெடுத்த நாடு, கல்லூரி, கோர்ஸ் அனைத்துமே உயர்தரமானது என்பதால்... படிப்புச் செலவுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டது. 'என் அப்பா இருந்திருந்தால் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்திருப் பாரே..!’ என்று அவன் நினைத்து, மனதளவில் கஷ்டப்படக் கூடாது என்று, அது நாள் வரை உழைத்துச் சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் திரட்டி வெளிநாட்டுக்கு அனுப்பினேன்.

அதைத் தொடர்ந்த நாட்களில்... 'அம்மா, இந்தப் பணத்தை சம்பாதிக்க நீ எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டாய்!’ என்று கேட்டாள், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என் மகள். '20 ஆண்டுகள்!’ என்றேன். 'நான் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கல்லூரியில் சேர வேண்டுமே... அதற்குள் இன்னொரு கோடி ரூபாயை உன்னால் சம்பாதித்துவிட முடியுமா?’ என்று கேட்டாள். அந்தக் கேள்வி என்னை உலுக்கியது. அதனால், முன்னைவிட சுறுசுறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்தேன்.

குடும்பமா... வேலையா? - 6

ஆனால், நினைப்பது எல்லாம், நாம் திட்டமிடும் அதே பாதையிலும் வேகத்திலும் நடந்துவிடுமா என்ன? ஐ.சி.ஐ.சி.ஐ-யில் எனக்கு சோதனையான காலகட்டம் வந்தது. எந்த ஒரு நிறுவனத்தை இரவும் பகலும் என் சிந்தனையில் சுமந்தேனோ, எந்த ஒரு நிறுவனத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஆதாரத்தை திரட்டினேனோ, எந்த ஒரு நிறுவனத்துக்காக முத்து போன்ற 200 ஊழியர்களை பட்டை தீட்டினேனோ... அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு நாள் விலக வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. வேலையை விட்ட அந்த தினத்தன்று ஆபீஸில் இருந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன், அமெரிக்காவில் இருக்கும் என் மகனுக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல, 'அம்மா. நீ இத்தனை வருடம் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டாய். நாளையில் இருந்து நீ ஒரு சுதந்திரப் பறவை. உனக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை நீ தாத்தா, பாட்டியோடு நல்ல ஓட்டலுக்கு சென்று கொண்டாடு!’ என்றான். நான் இதை வீட்டுக்கு வந்து அவன் பாட்டியிடம் சொன்னபோது, 'வேலை கிடைத்தால்தான் எல்லோரும் பார்ட்டி கொண்டாடுவார்கள்! வேலை போனால் யாராவது கொண்டாடுவார்களா?!’ என்று சோகமாகக் கேட்டார்.

அடுத்த நாள் விடிந்தபோது... நான் போவதற்கு ஆபீஸ் இல்லை. செய்வதற்கு வேலையும் இல்லை. தெரிந்த வங்கித் தலைவர்களிடமும், தொழிலதிபர்களிடம் பேசலாம் என்றால்... அவர்களின் போன் நம்பர்கூட என்னிடம் இல்லை. செக்ரெட்டரி, பி.ஏ என்று அவர்களின் உதவியோடு மட்டுமே அத்தனை பேரிடமும் பேசிக் கொண்டிருந்த என் செல்போனைக்கூட வங்கியில் ஒப்படைத்துவிட்டேன். இதுநாள்வரை பயன் படுத்தி வந்ததும் வங்கியின் இ-மெயில்தான் என்பதால், எனக்கு உதவி செய்யக் கூடியவர்கள் என்று நான் நினைத்த யாருடைய மின்னஞ்சல்களும் என்னிடம் இல்லை. திடீரென்று என் வாழ்க்கை மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்துவிட்டதைப் போல ஓர் உணர்வு.''

- யோசிப்போம்...