Published:Updated:

குடும்பமா... வேலையா? - 10

ஒரு நாள் ஆக்ஸிஜன்... ஆறு நாள் உற்சாகம்!பி.ஆரோக்கியவேல், ஓவியம்: பாரதிராஜாஸ்டெப்ஸ்

##~##

மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர் 

கிழ்ச்சி பொங்கும் மனைவியாக இருக்க வேண்டும். பாசமான குழந்தைகளுக்குத் தாயாக விளங்க வேண்டும். நோய், நொடியில்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க யோகா, வாக்கிங், தியானம் செய்ய வேண்டும். வாய்க்கு ருசியாகவும்... அதேவேளையில், உடலுக்கு ஆரோக்கியமாகவும் சமைத்து, குடும்பத்தோடு சாப்பிட வேண்டும். உலகம் வளர்ச்சியடையும் அதே வேகத்தில் புதிய மாற்றங்களை அரவணைத்துக் கொண்டு, வேலை செய்யும் இடத்தில் அனைவரின் ஒத்துழைப்போடும் வெற்றிகளை எட்டும் ஓர் அதிகாரியாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் சாதித்த சந்தோஷத்தில் வீட்டுக்குத் திரும்பும்போது மனதுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்க வேண்டும். பயணங்களின்போது நிறைய படிக்க வேண்டும்.

- இத்தனைக்கும் ஒரு பெண்ணால் ஆசைப்பட முடியுமா என்கிற கேள்விக்கு, தங்கள் வாழ்க்கையில் இருந்தே உதாரணங்களை முன் வைத்து, பெண்கள் பலரும் இங்கே பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் நிற்கிறார் சந்தா கோச்சார்.

'நம்நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி' என்கிற பெருமையை மட்டுமல்ல, 'பொதுத்துறை வங்கிகளுக்கே முன் உதாரணமாக செயல்படும் வங்கி' என்கிற அடையாளத்தோடு திகழும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார். இது, இவருடைய நிகழ்காலம். ஆனால், கடந்தகாலம்..?

சமூக ஏணியில், பெண்களைப் பல படிகள் கீழே வைத்திருக்கும் வழக்கம் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்ப்பூர்தான் சந்தா கோச்சரின் சொந்த ஊர். ராணியாக இருந்தாலும் சரி, ராஜமாதாவாக இருந்தாலும் சரி... தலையில் முக்காடு போடும் வழக்கம் மாறாத ஊர். குழந்தைத் திருமணங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறுமிகளாக இருக்கும்போதே திருமணம் செய்துவிடும் வழக்கம் இன்றும்கூட இங்கே உண்டு. அப்படிப்பட்ட ஊரில் வசிக்கும் ஒரு குடும்பத்தில், மூன்று குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர்தான் சந்தா.

குடும்பமா... வேலையா? - 10

கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்த அப்பாவின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடந்தது. சந்தாவுக்கு 13 வயது இருக்கும்போது அப்பா திடீரென்று இறந்து போக... குடும்பமே நிலைகுலைந்தது. மூன்று குழந்தைகளோடு மும்பையில் குடியேறினார் அம்மா. தையல் தொழிலை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டியதுடன், மூன்று பிள்ளைகளையும் தொடர்ந்து படிக்க வைத்தார்.

சந்தா, எம்.பி.ஏ வரை படித்து முடித்த கையோடு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் 'மேனேஜ்மென்ட் டிரெய்னி' என்கிற வகையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் வங்கியின் அன்றைய தலைவர் கே.வி.காமத் முன்பாக சென்று, தான் செய்த புதுமைகளைப் பட்டியலிட்டார் சந்தா. அனைத்தையும் கேட்டு முடித்த காமத், 'யாரிடம் அனுமதி வாங்கி இதையெல்லாம் செய்தீர்கள்?’ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டார். கொஞ்சமும் யோசிக்காமல், 'யாரிடமும் கேட்கவில்லை. வங்கியின் வளர்ச்சிக்கும் நற்பெயருக்கு நல்லது என்று முடிவெடுத்து நான்தான் இதை எல்லாம் செய்தேன்’ என்று சந்தா சொல்ல... ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் புருவங்கள் உயர்த்தினார் காமத்.

'வரப்புயர நீருயரும். நீருயற நெல் உயரும்’ என்பது போல... சந்தா, வேலைக்குச் சேர்ந்தபோது சில நூறு கோடிகளாக இருந்த வங்கியின் வியாபாரம், அதன்பின் படுவேகமாக பல ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது. வங்கியின் வளர்ச்சிக்கு முன் வரிசையில் நின்று பணியாற்றியதால்... சந்தாவும் மளமளவென முன்னேறினார். மேனேஜ்மென்ட் டிரெய்னியாக தன்னை வேலைக்குச் சேர்த்த 'பீஷ்ம பிதாமகர்’ கே.வி.காமத் அமர்ந்திருந்த அந்தத் தலைமைப் பதவியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தமர்ந்தார் சந்தா.

தன் தலைமையில் வங்கி 30% வளர்ச்சி கண்டு கொண்டிருந்த சமயம், 'பல வங்கிகளையே வேரோடு சாய்க்கக்கூடிய மிகப்பெரிய பொருளாதார சூறாவளி வரப்போகிறது’ என்பதை முன்கூட்டியே கணித்தார். இது, அடித்தளத்தை பலப்படுத்த வேண்டிய நேரம் என்பதை உணர்ந்தவர், 'வளர்ச்சி தேவையில்லை’ என்று அறிவித்து, வங்கியை ஸ்திரப்படுத்தும் வேலைகளில் கவனம் செலுத்தினார். 'இவருக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?’ என்று பலரும் கேலி செய்தனர். ஆனால், காலத்தே இவர் எடுத்த நடவடிக்கைகளைப் போல உலகின் பல நிதி நிறுவனங்கள் சீரமைப்பு வேலைகளை மேற்கொள்ளத் தவறியதால், வீசிய பொருளாதார சூறாவளியில் அவை இருந்த இடம் தெரியாமல் போயின.

ஆம், 2008-ம் ஆண்டு வீசிய அந்தப் பொருளாதார புயல்... உலகளாவிய தொடர்பு கொண்ட வங்கி என்று பொதுமக்களிடையே பெயர் இருந்ததினால்... இந்த நிறுவனத்தையும் பாதித்தது. 'ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி திவால் ஆகிவிட்டது' என்று ஊர் முழுக்க வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. கலக்கமடைந்த வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புகளை அந்த வங்கியிலிருந்து எடுத்துவிடுவதற்காக போட்டிப் போட்டுக்கொண்டு ஏ.டி.எம் மற்றும் வங்கிக் கிளைகள் என முற்றுகையிட்டனர். ஆனால், சந்தாவின் சமயோசிதமான யுக்திகளால் அதையெல்லாம் தாக்குப் பிடித்தது வங்கி! 'நீங்கள் கேள்விப்பட்டது எல்லாம் வதந்திதான்!’ என்பதை வார்த்தைகளில் சொல்வதைவிட, செயல் மூலமே புரிய வைக்க முடிவு செய்தார். சிறு வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணம் கைக்கு கிடைத்துவிட்டால் நிம்மதிஅடைந்துவிடுவார்கள், வங்கியைப் பற்றி அவர்களுக்கு வந்த வதந்தி பொய் என்று நிரூபணம் ஆகிவிடும் என்று முடிவெடுத்து, இரவோடு இரவாக எல்லா ஏ.டி.எம்-களுக்கும் நூற்றுக்கணக்கான டிரக்குகள் மூலமாகப் பணத்தை அனுப்பி வைத்தார். பல ஊர்களில் வங்கிகளை இரவு நேரங்களில்கூட திறந்து வைக்க உத்தரவிட்டார். இவருடைய யுக்தி, பலமாகக் கைகொடுத்தது. சந்தாவின் நடவடிக்கைகளை விமர்சித்தவர்கள் எல்லாம் வாய்விட்டுப் பாராட்டினார்கள்.

இப்படிப்பட்ட அசகாய வேலைகளை எல்லாம் செய்யும் சந்தா... இதற்காக தன் குடும்பத்துக்கான நேரம், அதற்கான தன்னுடைய பங்களிப்பு போன்றவற்றில் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். பிள்ளைகளுக்கு சினிமா என்றால் பிடிக்கும் என்பதால், அவருக்கும் சினிமா பிடிக்கும். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தானும் குழந்தையாக மாறி, பிள்ளைகளோடு இந்தி மசாலாப் படங்களை எல்லாம் வாய்விட்டு சிரித்து ரசிப்பார். பெண்ணுக்கு ஷாப்பிங் பிடிக்கும் என்பதால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மால் மாலாக ஏறி இறங்கி சளைக்காமல் ஷாப்பிங் செய்வார்.

மகள் ஆர்த்தி இப்போது பி.இ முடித்து எம்.பி.ஏ படிக்கிறார். மகன் அர்ஜுன், பத்தாம் வகுப்பு படிக்கிறார். கணவர் சொந்தமாக பிஸினஸ் செய்கிறார். ஆக, குடும்பத்தில் நான்கு பேரும் எப்போதுமே பிஸிதான். என்றாலும், விடுமுறை நாட்களில் அனைவரும் ஒன்று சேரும்போது வீட்டையே திருவிழாவாக மாற்றிவிடுவார்கள். இது, ஏழு நாட்களுக்கு ஒரு முறைதான் என்றாலும், அந்த ஒரு நாளில் சுரக்கும் உற்சாகம்... அடுத்து வரும் ஆறு நாட்களுக்கான ஆக்ஸிஜன்!

- யோசிப்போம்...