மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

புறநகரில் வீட்டுமனை வாங்க இருக்கிறேன். கார்னர் மனையின் விலை மற்ற மனையைவிட 25% அதிகமாகச் சொல்கிறார்கள். வாங்கலாமா?

- பரந்தாமன், தஞ்சாவூர்.

##~##
டி.பார்த்தசாரதி,
பார்த்தசாரதி அசோஷியேட்ஸ், சார்டர்டு அண்ட் என்ஜினீயர்ஸ்.

''பொதுவாக சாதாரண மனைக்கும் கார்னர் மனைக்கும் விலை வித்தியாசம் இருக்கும். காரணம், கார்னர் பிளாட் என்கிறபோது காற் றோட்ட வசதி நன்றாக இருக்கும். மேலும், உங்களுக்கு சாலையைப் பார்த்திருக்கும் பகுதியும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பிற்காலத்தில் இந்த மனையைப் பிரித்து விற்பனை செய்வது எளிது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் இருக்கும் மனைகள் எனில் சாதாரண மனையைவிட 10%, தென்கிழக்கு, வடமேற்கு மனைகள் எனில் 10-15% வரை விலை அதிகமாகச் சொன்னால் தாராளமாக வாங்கலாம். அதற்குமேல் அதிகமாகச் சொன்னால் பேரம் பேசவும்.''

கேள்வி - பதில்

மகன் வாங்கிய கல்விக் கடனை நான் கட்டி வருகிறேன். அதற்கு நான் வரிச் சலுகை பெற முடியுமா?

- நாராயணன், சோழிங்கநல்லூர்.

-பி.எஸ். ஸ்ரீதர், சார்டர்டு அக்கவுன்டட்.

''வரிவிலக்கு பெறும்போது கல்விக் கடன் யார் பெயரில் இருக்கிறதோ, அவர்தான் பெறமுடியும். அதன்படி உங்கள் மகனுக்கு கல்விக் கடன் வாங்கியபோது அந்தக் கடன் பெற்றோராகிய உங்கள் பெயரில் வாங்கியிருந்தால் மட்டுமே நீங்கள் வரிச் சலுகை பெறமுடியும். வருமான வரிச் சட்டம் 80(இ)-ன்படி அரசின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் குறிப்பிட்ட படிப்புகளுக்கு வாங்கிய கடனை பெற்றோர் திரும்பச் செலுத்தினால் அதற்கு வரி விலக்கு பெற முடியும். தந்தை அல்லது தாய் இருவரில் யாராவது ஒருவர் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வரி விலக்கை பெறமுடியும்.'

கேள்வி - பதில்

''எனக்கு வயது 48. என்னிடம் 80,000 ரூபாய் தொகை உள்ளது. இதனை ஐந்து வருடங்கள் முதலீடு செய்ய நினைக்கிறேன். பாதுகாப்பான முதலீட்டுக்கு ஆலோசனை கூறவும்.''

- குமரகுரு, திருப்பூர்.

விவேக் கார்வா, நிதி ஆலோசகர்.

''உங்களுக்கு இரண்டு வகையான முதலீட்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, உங்களிடம் இருக்கும் 80,000 ரூபாயை பாதியாகப் பிரித்து 40,000 ரூபாயை ஹெச்.டி.எஃப்.சி.

மன்த்லி இன்கம் பிளானிலும் (குரோத் ஆப்ஷன்), மீதமுள்ள 40,000 ரூபாயை ரிலையன்ஸ் மன்த்லி இன்கம் பிளானிலும் (குரோத் ஆப்ஷன்) ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். இவை பேலன்ஸ்ட் ஃபண்டுகள் என்பதால் ரிஸ்க் குறைவு. சுமார் 12-14% வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி இல்லை என்றால், 60,000 ரூபாயை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டிலும், மீதமுள்ள 20,000 ரூபாயை ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். இதுவும் ரிஸ்க் குறைவான முதலீடுதான்.''    

'கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு வரி சேமிக்கும் நோக்கத் தோடு இரண்டு யூலிப் பாலிசிகளை எடுத்தேன். ஒரு பாலிசியில் 30 ஆயிரம் கட்டினேன். இப்போது 28,785 ரூபாயாக இருக்கிறது. இன்னொரு பாலிசியில் 75 ஆயிரம் கட்டினேன். இப்போது 78,782 ரூபாயாக இருக்கிறது. எனவே, இந்த பாலிசிகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா?

- சல்மா, மெயில் மூலமாக.

ராமகிருஷ்ணன்.வி.நாயக், முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல்.

''யூலிப் பாலிசிகளில் முதல் மூன்று வருடங்களில் நிர்வாகக் கட்டணம், இன்ஷூரன்ஸ் கவரேஜ் கட்டணம், பிரீமிய ஒதுக்கீட்டுக் கட்டணத்துக்கென கணிசமான தொகையை பிடித்துக் கொள்வார்கள். இதனால், முதல் மூன்றாண்டுகளில் குறைந்த அளவு பணமே முதலீடாகும். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இக்கட்டணங்கள் குறையும். குறைந்தது 10 வருடங்கள் வரை தொடர்ந்து பிரீமியம் கட்டி வந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.''

கேள்வி - பதில்

''எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 1000 ரூபாய் ரிலையன்ஸ் குரோத் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். தற்போது இதே ஃபண்டில் கூடுதலாக மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியுமா?''

- சித்திகா, மயிலாடுதுறை.

ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா டீம்.

''உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் கள் இருக்கின்றன. முதல் வழி, தற்போதைய எஸ்.ஐ.பி.யை ரத்து செய்துவிட்டு, புதிதாக இரண்டாயிரம் ரூபாய்க்கு எஸ்.ஐ.பி. துவங்குவது. அடுத்த வழி, இப்போதுள்ள எஸ்.ஐ.பி. முறையை அப்படியே தொடர விட்டுவிட்டு, தனியாக ஆயிரம் ரூபாய்க்கு புதிய எஸ்.ஐ.பி. தொடங்குவது. இரண்டாவது வழி சுலபமானதாக இருக்கும்.'

கேள்வி - பதில்

''வெவ்வேறு இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்களில் மூன்று டேர்ம் பாலிசிகள் எடுத்திருக்கிறேன். ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் மூன்று பாலிசிகள் மூலமாக குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்குமா?''

- பாலாஜி, கூடலூர்.

ஹரிஹரன், நிதி ஆலோசகர்.

''நீங்கள் வெவ்வேறு இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்களில் எத்தனை பாலிசி எடுத்திருந்தாலும் உங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்கும். நீங்கள் மூன்று பாலிசியையும் ஒரே நேரத்தில் எடுத்திருந்தால் கிளைம் கிடைப்பதில் சிக்கல் இல்லை. வெவ்வேறு ஆண்டுகளில் எடுத்திருந்து, அந்த பாலிசி விவரங்களை ஏஜென்டுகளிடம் தெரிவிக்காமல் இருந்தால், உங்கள் வருமான விகிதத்தைவிட மிக அதிக தொகைக்கு பாலிசி எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழ வாய்ப்புண்டு. அப்போது உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டின் அளவும் குறைய வாய்ப்புண்டு. பொதுவாக, ஆண்டு வருமானத்தைபோல் 10 மடங்கு அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதற்குமேல் என்கிறபோது கேள்வி எழத்தான் செய்யும்.''