Published:Updated:

பிஸினஸ் திலகங்கள்! - 2

பளீரிடும் பசுமை பிஸினஸ்!இந்துலேகா. சி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

##~##

 திரும்பிய இடமெல்லாம், கண்களைக் குளிர வைக்கும் பசுமை. மனதை மயக்கும் நறுமணத்துடன் கூடிய அழகழகான பூக்கள்... அதைச் சுற்றி சுற்றி ரீங்காரமிடும் வண்டுகள், பட்டாம்பூச்சிகள்... என ஹைடெக் பிருந்தாவனம் போல காட்சியளிக்கிறது... 'ஹரித்தரங்’ நாற்றுப்பண்ணை. சென்னையின் பிஸியான ஏரியாவான தி.நகரில்தான் இந்த செடிகள் விற்பனையகம்!

அங்கிருந்த பூக்களைப் போலவே ரொம்ப ஃபிரெஷ்ஷாக வரவேற்றார், அதன் நிறுவனர் ரஷ்மி சுனில். ''சொந்த ஊர் கேரளா. படிச்சதெல்லாம் பெங்களூரு. என் கணவர், சுனில் ரொம்ப பிஸியான வக்கீல். ஆனாலும், இந்த பிஸினஸை சக்ஸஸ்ஃபுல்லா நடத்தறதுக்கு... அவர்தான் காரணம்'' மிக இயல்பாக அறிமுகப்படுத்திக் கொண்ட ரஷ்மி, தொடர்ந்தார்.

''கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் பிஸினஸ் அனுபவம்லாம் கிடையாது. சொல்லப்போனா, வொர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸ்கூட கிடையாது. படிப்பு முடிச்சதும் கல்யாணம், குழந்தைனு லைஃப் நல்லா போயிட்டிருந்தது. என்னோட புகுந்த வீடு ஒரு பிஸினஸ் குடும்பம். கிட்டத்தட்ட நாப்பது வருஷத்துக்கு முன்னயே மாமனாரும், மாமியாரும் 'எம்.டி.ராஜன் பூஞ்சோலை’னு ஃபார்ம் நடத்தியிருக்காங்க. சும்மா இருக்கப் பிடிக்காத நான், ரொம்ப ஆர்வமா எங்க ஃபேமிலி பிஸினஸ்ல ஈடுபட ஆரம்பிச்சேன்.

பிஸினஸ் திலகங்கள்!  - 2

எதையும் முழு ஈடுபாட்டோட பண்ணுவேன். அதைப் புரிஞ்சுக்கிட்ட கணவர், 'நீ எதாச்சும் பிஸினஸ் பண்ணேன்’னு சொல்லிட்டே இருந்தார். மைண்ட்ல அது எப்பவுமே ஓடிட்டிருந்துச்சு. ஒரு முறை வெளிநாட்டுக்கு போயிருந்தப்போ, ஒரு ஷோரூம்ல பூச்செடிகளை அழகா கிஃப்ட் பேக் பண்ணி வெச்சுருந்தாங்க. பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு. சென்னை வந்ததும், வீட்ல எல்லார்கிட்டயும் 'கிஃப்ட் அ பிளான்ட்’ கான்செப்ட்ல பிஸினஸ் பண்ணலாமா’னு கேட்டேன். மாமனார் - மாமியார்... ரொம்ப ஹேப்பி. உடனே களத்துல இறங்கிட்டேன்'' படபடவென பேசிய ரஷ்மி, பிஸினஸ் பற்றி விளக்கினார்.

''எந்த ஃபங்ஷனுக்கு போனாலும் கிஃப்ட் கொடுக்கற கலாசாரம் பெருகிட்டு வர்றதால... செடிகளை கிஃப்ட்டா கொடுக்கற இந்த கான்செப்ட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்னு நினைச்சேன். ஆனா, ஆரம்பிச்ச பிறகுதான் தெரிஞ்சுது... நம்ம மக்களோட ரசனையைப் பத்தி. அதாவது, எந்த கிஃப்டையுமே... பளபள கவர்ல சுத்தின பாக்ஸ்ஸ எடுத்துட்டு போனாதான் பெருமையா இருக்கும்னு நினைக்கறவங்க நம்ம மக்கள். அதைவிட்டு, கறுப்பு கலர் ஷீட்ல சுத்திஇருக்கற செடியை யார் மதிப்பாங்க. அதனால, அவங்க போக்குலயே போக நினைச்சேன். அழகழகான, வெரைட்டியான செடிகளையும், கூடவே கிரியேட்டிவான அழகான பூத்தொட்டிகளையும் ஷோரூம்ல தனித்தனியா வெச்சேன். கஸ்டமரோட தேவைக்கும் ரசனைக்கும் ஏத்த மாதிரி... எந்த செடியையும், தொட்டியையும் செலக்ட் பண்ணலாம். அதை நாங்க கிஃப்ட்டா ரெடி பண்ணி கொடுத்துடுவோம்.

பிஸினஸ் திலகங்கள்!  - 2

இதுதான் பட்ஜெட்னு இல்லாம... எல்லா பட்ஜெட்டுக்கும் ஏத்தமாதிரி செடிகளும், தொட்டிகளும் எப்பவும் ஸ்டாக் இருக்கும். என்னோட இந்த ஐடியாவால பிஸினஸ் சூடு பிடிக்க ஆரம்பிச்சுது. அதே டைம்ல எல்லார்கிட்டயும் 'கோ க்ரீன்’, 'ஈக்கோ ஃப்ரெண்ட்லி புராடக்ட்ஸ்’ விஷயத்துல ஒரு அவேர்னஸ் வர ஆரம்பிச்சுது. அது என்னோட பிஸினஸுக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருந்ததால... டாப் கியர்ல போயிட்டு இருக்கு. கிஃப்ட் பிளான்ட்ஸ் தவிர, இன்டோர் அண்ட் அவுட்டோர் செடிகளையும் விற்பனை செய்றேன். கஸ்டமர் வாங்குற செடிகளுக்கு ஏத்தமாதிரி பராமரிப்பு முறைகளையும் சொல்லிடுவேன். அவங்களுக்குத் தேவையான உதவிகளையும் செஞ்சுடுவேன். அதுதான் திரும்பத் திரும்ப கஸ்டமர்களை என்னைத் தேடி வரவழைக்குது.

எங்க ஃபார்ம்ல பெரும்பாலும் சுற்றுச்சுழல் அக்கறையோட தயாராகற பொருட்கள்தான் இருக்கும். டெரகோட்டா, தேங்காய் ஓடு, மூங்கில் மூலம் செய்த தொட்டிகளும், கிராஃப்ட் அயிட்டங்களும் நிறையவே இருக்கு. இதையெல்லாம் டிசைன் பண்றதுக்காகவே ஆர்ட்டிஸ்ட் இருக்கார். ஏன்னா... எல்லாமே இயற்கை சார்ந்த பொருளா இருக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை'' எனும் ரஷ்மியிடம்,

''அதென்ன... ஹரித்தரங்?'' என்றோம்.

''இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு... 'க்ரீன் வேவ்’ அதாவது, 'பசுமை அலை’னு அர்த்தம்'' என்றார், செழுமையாக சிரித்தபடி!

சாதனைகள் தொடரும்...