Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! - 3

புது பொருள்... புது கம்பெனி... தூக்கி நிறுத்தும் ஐடியா ராணி!இந்துலேகா.சி, படங்கள்: பா.கார்த்திக்

##~##

 ''எம்.காம், எம்.பி.ஏ... இதெல்லாம் முடிச்ச நான்... 'கையில சம்பாத்தியமும் வேணும்; அதேசமயம், குடும்பம், குழந்தையைத் துளிகூட அக்கறை குறையாம பார்த்துக்கணும்'னு நினைச்சேன். அதனால, வேலைக்குப் போற எண்ணத்தை கைவிட்டு பிசினஸ்ல இறங்கினேன். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சுட்டேன்''

- பெருமையுடன் சொல்பவர்... லதா கிருஷ்ணா. புதிதாக அறிமுகமாகும் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் 'ப்ரமோ’ தொழிலில் இவர் செமகில்லி!

''நாங்க அஞ்சு சிஸ்டர்ஸ், ரெண்டு பிரதர்ஸ். பொண்ணு, பையன்னு வித்தியாசமில்லாம எல்லாரையுமே நல்லா படிக்க வெச்சாங்க எங்க பெற்றோர். பத்தொன்பது வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. கணவர் கிருஷ்ணா, கப்பல் கேப்டன். பத்து மாசம் கடல்... ரெண்டு மாசம் வீடுனு இருப்பார். 'பொண்ணு காவ்யாவை பாத்துக்கறது போக, மீதி நேரம் எல்லாம் வீணாப்போகுதே'னு கவலைப்பட்டுட்டே இருந்தேன். பிசினஸ்ல குதிச்ச பிறகு... அதெல்லாம் பறந்துடுச்சு.

பிசினஸ் திலகங்கள்! - 3

மார்க்கெட்ல புதுசா வந்திருக்குற பொருள், கம்பெனி... இதையெல்லாம் மக்கள் கவனத்துக்கு கொண்டு போறதுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, எந்த வகையிலெல்லாம் விளம்பரம் பண்ண முடியுமோ... அதை எல்லாம் சரியா பிளான் பண்ணி, செய்து கொடுக்கறதுதான் என் வேலை. ஜப்பான், 'நேஷனல் லிப்போ’ கம்பெனி தயாரிப்பான எலெக்ட்ரிக் குக்கரை, தமிழ்நாட்டுல அறிமுகப்படுத்தற வேலையைத்தான் முதல்ல கையில எடுத்தேன். 'எலெக்ட்ரிக் குக்கர்... ரைஸ் குக்கர் ரெண்டுமே ஒண்ணுதான்'னு நம்ம ஊர் பெண்கள் நெனைச்சுட்டிருந்த காலகட்டம் அது. ரெண்டும் வேறவேறனு புரிய வெக்கறது பெரும்பாடா இருந்துச்சு. ஒரு சவாலா எடுத்துக்கிட்டு சாதிச்சேன்.

பிறகு, பிரீமியர் எலெக்ட்ரிக் குக்கர்.... இதைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு, பிரீமியர் ஷோரூம்கள்ல வேலை பார்க்கற பெண்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். இதன் மூலமா என்னென்ன உணவுகளைத் தயாரிக்க முடியும்னு செய்து பார்த்து, குக்கரோட சேர்த்துக் கொடுக்கறதுக்கான ரெசிபி புக்கையும் தயார் பண்ணி கொடுத்தேன். குக்கரோட விற்பனையை உயர்த்த இந்த முயற்சி நல்லாவே கைகொடுத்துச்சு. ஐ.எஃப்.பி வாஷிங் மெஷின் 'ப்ரமோ’வுக்காக... காலேஜ் பசங்க 500 பேருக்கு வாஷிங் மெஷின் பத்தி கிளாஸ் எடுத்து... சிட்டி ஃபுல்லா இருக்குற எழுபத்தஞ்சு ஐ.எஃப்.பி அவுட்லெட்களுக்கும் அனுப்பி, வாடிக்கையாளர்களுக்கு செய்முறை விளக்கம் கொடுக்க வெச்சேன்'' நிறுத்தி நிதானமாகப் பேசும் லதா, 'யுரேகா ஆட் ஏஜென்ஸி’, 'ஐரீஸ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி’ என இரண்டு நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

பிசினஸ் திலகங்கள்! - 3

''புதுசா துணிக்கடை திறக்கறாங்கனா, நிறைய மாடல்ஸை வெச்சு, அந்த ஷோரூம்லயே ஃபேஷன் ஷோ நடத்துறது; பிளே ஸ்கூல் திறப்பு விழா அன்னிக்கே குழந்தைகளுக்கு மாறுவேடம், டிராயிங், டான்ஸ்னு போட்டிகள் நடத்தி பரிசு கொடுக்கறது... இப்படி மக்களோட கவனத்தை

பிசினஸ் திலகங்கள்! - 3

ஈர்க்கறதுக்கான வேலைகளை 'ஐரீஸ் ஈவென்ட் மேனேஜ்மென்ட்' மூலமா செய்றோம். பேனர், போஸ்டர், பிட் நோட்டீஸ், ஹோர்டிங்ஸ், பிரஸ் ரிலீஸ், பத்திரிகை விளம்பரம் மாதிரியான வேலைகளை 'யுரேகா ஆட் ஏஜென்ஸி' மூலமா செய்றோம்.

ஆரம்பிச்சு பதிமூணு வருஷமாகிடுச்சு. ரெண்டு பிசினஸையும் சரிசமமா வளர்த்தெடுத்துட்டிருக்கேன். மூணு பியூட்டி பார்லர்கள்கூட வெச்சுருந்தேன். சரிவர கவனிக்க முடியாததால, அதை விட்டுட்டேன். என்னோட கஸ்டமருக்கு குறைச்சலான வாக்குறுதிகளைத்தான் கொடுப்பேன். ஆனா, அதைவிட அதிகமா செஞ்சு கொடுப்பேன். அதனால எங்கிட்ட ஒரு முறை வந்த க்ளையன்ட்ஸ்... என்னை விட்டு விலகுறதேஇல்லை'' என்று நம்பிக்கை பேசும் லதா,

''இது எல்லாத்தையும் வெற்றிகரமா நடத்தறதுக்கு முக்கிய காரணமே... என் ஆபீஸ் டீம்தான். கூடவே கணவர், மாமியார், மகள்னு மூணு பேரோட ஒத்துழைப்பும். கோடிக்கணக்குல டர்ன் ஓவர் பண்ணணும்னு எதிர்பார்க்கல. குறைந்த கஸ்டமர், அளவான வருமானம், செய்யுற தொழில்ல திருப்தி... இதுவே போதும்னு நினைக்கிறேன். அந்த வகையில சொந்தக் கால்ல நிக்கறேன்னு நினைக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

- சொல்லும்போதே அவர் கண்களில் பெருமை மின்னுகிறது!

சாதனைகள் தொடரும்...