நாணயம் ஜாப் : நெகட்டிவ் உணர்ச்சிகள் வேண்டாமே!
##~## |
இன்று மாற்றங்களின் தொகுப்பாக திகழ்கிறது தொழில் உலகம். மாற்றங்களின் சதவிகிதமும், வீச்சும் அபரிமிதமாகவும் இருக்கிறது. தொழில்நுட்பம், நிர்வாக உத்திகள், மார்க்கெட் நிலவரம், பொருளாதார நிலைபாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு தினந்தோறும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
இம்மாற்றங்களை சரிவர புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒருவர் தனது வேலைதிறனை வளர்த்துக்கொண்டால், பணியிடத்தில் எப்போதும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்றால், பதில் எதிர்மறையாகதான் இருக்கும். காரணம், வேலை சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை மட்டும் சரிவர புரிந்துகொண்டால் மட்டும் போதாது; பணியிடத்தில் தன்னோடு வேலை செய்யும் ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்குணர்ந்து அவர்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே வெற்றிகரமான ஊழியராக தன்னை ஒருவர் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
பணியிடத்தில் பிறரோடு பேசுவதற்கும் உறவாடுவதற்கும் நாம் பெரும் நேரத்தை எடுத்துக்கொள்கிறோம். சக ஊழியர்களோடு சுமுகமாக பழகும் திறமைதான் நிர்வாகிகளின் வெற்றிக்கு வித்தாக அமைகிறது. அந்தத் திறமைதான் எமோஷனல் இன்டலிஜென்ஸ் (Emotional intelligence) என்று அழைக்கப்படுகிறது.

மனித மனம் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கியது. அன்றாடம் ஊழியர்களிடையே சிந்தனைப் பரிமாற்றம் நடக்கும். அதே சமயத்தில், தன் உணர்ச்சிகளையும் பிறரது உணர்ச்சிகளையும் தெளிவாக அடையாளம் கண்டு அவைகளை சரிவர கையாள்வதும் மிக முக்கியம். தெரிவிக்காதச் சிந்தனைகளாலும் வெளிப்படுத்தாத உணர்ச்சிகளாலும் மனித உறவில் விரிசல்கள் ஏற்பட வழிவகுக்கும். வேலையில் கவனம் சிதறுவதற்கும் செயல்திறன் குறைவதற்கும் காரணமாக அமைந்துவிடும். குழு உணர்வும் (Team Spirit),, குழுவின் செயல்பாடும் (Teamwork) பாதிக்கப்படும்.
மனிதனின் மனம் அன்பு, ஆனந்தம், கருணை, நிம்மதி, திருப்தி, ஆர்வம் போன்ற பாசிட்டிவ் உணர்ச்சிகளையும்; கோபம், பொறுமை, துயரம், பழிவாங்குதல், பயம் போன்ற நெகட்டிவ் உணர்ச்சிகளையும் உள்ளடங்கியது. இத்தகைய உணர்ச்சிகளை அடையாளங்கண்டு அதனை சுயகட்டுப்பாட்டோடு திறமையுடன் கையாளுவதில்தான் மனித உறவின் வெற்றி ரகசியம் இருக்கிறது. தன் உணர்ச்சிகளை மட்டுமின்றி, தன் பணியிடத்திலும் அதற்கு அப்பாலும், அன்றாடம் பழகும் மனிதர்களிடமும் அவ்வப்போது மாறுபடும் உணர்ச்சிகளை அடையாளங்கண்டு அதனை சரியாக கையாளவேண்டும்.

பிறரோடு கருத்து வேறுபாடு (Difference of opinion) ஏற்படும்போது நம்மோடு பணிபுரியும் பிறரின் உணர்ச்சிகளையும் உறவு பாதிக்காத வகையில் திறமையோடு கையாளவேண்டியது அவசியம். தொழிலுலகில் மட்டுமல்ல, மற்ற எந்த துறையிலும் உச்சத்தை எட்டிப்பிடித்தவர்களின் திறமைகளைப் பட்டியலிட்டால் எமோஷனல் இன்டலிஜென்ஸ்தான் முதல் இடத்தைப் பிடிக்கும். காரணம், அவர்கள் உயரத்தை எட்டுவதற்கு பெரும் உதவியாக இருந்தது அந்தத் திறமை மட்டுமே.
ஹே கன்சல்டன்ட்ஸ் (Hay consultants) என்ற பிரசித்திபெற்ற பன்னாட்டு தொழில் ஆலோசனை நிறுவனத்தின் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு என்னவெனில், ''ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் வேலையில் சேருவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் வயது, அதன் கொள்கை, லாபவிகிதம், வளர்ச்சி, பங்குச் சந்தையில் மதிப்பு, வேலை பாதுகாப்பு, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், சம்பளம் போன்ற பலவித விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய விரும்பினாலும், தன் உயர் அதிகாரியிடம் நல்லுறவு இல்லாததாலும் கசப்பு உணர்வு ஏற்பட்டுவிட்டதாலும் தங்களின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறார்கள்'' (People join the organisation but leave the boss).
பணியிடத்தில் வேலை செய்வோர் அனைவரிடத்திலும் நல்லுறவு காப்பது நம் வேலையின் பாதுகாப்பையும், வளர்ச்சியையும், பணியிடத்தில் மகிழ்ச்சியையும் உறுதிபடுத்தும்.
வேலையில் அடுத்தடுத்து மேல்மட்டத்துக்கு போகும்போது எமோஷனல் இன்டலிஜென்ஸை நாம் வளர்த்துகொள்ள வேண்டும். தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு இந்தத் திறமை மிகவும் முக்கியமானது. அவருக்கு அனைத்து தொழில்நுட்பங்களும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதேசமயத்தில், அனைத்து ஊழியர்களையும், அலுவலர்களையும் அரவணைத்து ஊக்கப்படுத்தி ஒரு குழு உணர்வை நிறுவனத்தின் அனைத்துமட்டத்திலும் வளர்க்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டுள்ள கேலப் (Gallup) என்ற பன்னாட்டு தொழில் ஆலோசனை நிறுவனம், பணியிடத்தில் ஊழியர்கள் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் பணியாற்றுகிறார்களா என்பதை அறிய மனித உறவுகள் சம்பந்தப்பட்ட சில கேள்விகளை முன்வைக்கிறது. உங்கள் மேலதிகாரி உங்களை ஒரு மனிதராக மரியாதையாக நடத்து கிறாரா? உங்களின் கருத்துக்கள் அவரால் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதா? கடந்த ஆறு மாதத்தில் உங்களின் வளர்ச்சியைப் பற்றி யாராவது நிறுவனத்தில் உங்களிடம் பேசினார்களா? உங்களின் திறமையான செயல்பாட்டை கடந்த ஒரு வாரத்தில் யாராவது பாராட்டினார்களா? போன்றவை அதில் அடங்கும்.

மனித உறவு மதிப்பற்றது. இந்தப் பரந்த உலகத்தில் நாம் ஒரேஒரு மனிதனாக இருக்கலாம். அதேசமயத்தில், நாம் ஒருவரே பிறருக்கு ஓர் உலகமாகவே தோன்றலாம். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் நம் மனித தொடர்புகள்தான் நமது ஒட்டுமொத்த சொத்து (Network is Networth). ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நம் கண்ணால் நேரடியாக ஒரு தடவைகூட பார்க்காத நிழல் மனிதர்களிடம் நாம் இன்டர்நெட் மூலம் உறவாடும் நேரத்தையும், ஆர்வத்தையும்விட அதிகமாக நாம் அன்றாடம் பணியிடத்திலும், அதற்கு வெளியிலும் உறவாடும் நிஜ மனிதர்களிடம் நாம் காட்டவேண்டும்.
பாராட்டு என்பது மனிதனின் மிக ஆழமான தேவை. ஒரேஒரு நல்ல சொல்லை பயன்படுத்தி அந்தத் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம். உறவுகள் பலப்படுவதற்கு அதுவே மிகச் சிறந்த உரமாக அமையும்.