குடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்!
பிசினஸ் தந்திரங்கள்!
கம்பெனிகள் ஜெயித்த கதை
##~## |
மாரிகோ. இந்தியாவின் முன்னணி எஃப்.எம்.சி.ஜி. பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம். உலக அளவில் தனது பிராண்டுகளுக்கான சந்தையைக் கையில் வைத்துள்ளது. தொழில்முனைவரான ஹர்ஷ் மாரிவாலா தன் தொழிலில் ஃபேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜியை 1988-ம் ஆண்டிலேயே கொண்டுவந்துவிட்டார்.
அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு வர அவர் வெளியாட்களை அனுமதிக்கும். அதேசமயத்தில், தகுதியில்லாத குடும்ப உறுப்பினர்களை அப்படியே தொழிலுக்கு கொண்டுவருவதுமில்லை. குறிப்பிட்ட ஒரு பதவிக்கு வர ஒரு குடும்ப உறுப்பினர் விரும்புகிறார் என்றால், அதற்கென வரையறுக்கப்பட்டுள்ள தகுதியில் 80 சதவிகித தகுதியாவது அவருக்கு இருக்கவேண்டும். அதாவது, வெளிநபர்களோடு ஒப்பிடுகையில் தகுதி குறைவில்லாதவராக இருக்க வேண்டும். ஆனால், பணிக்குச் சேருவது, பதவி உயர்வு போன்றவற்றில் முன்னுரிமை உண்டு.
உதாரணமாக, குடும்ப உறுப்பினர் ஒருவர் மார்க்கெட்டிங் துறை பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்புகிறார் எனில், அது சார்ந்த கல்வித் தகுதி அவருக்குக் கட்டாயம் இருக்கவேண்டும். அந்தக் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கான துறை ஒதுக்கப்படும். அதில் நீங்கள் வேலை பார்த்து படிப்படியாக பதவி உயர்வு பெறுவதன் மூலமே உயர் பொறுப்பை அடைய முடியும்.

அதேசமயத்தில், அவருக்கான ரிப்போர்ட்டிங் பாஸ் வெளிநபராக இருப்பார். வெளிநபர்கள் 15 வருடங்களில் உயரிய பொறுப்பை அடையலாம் என்றால், குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அவரது திறமையைப் பொறுத்து ஐந்து வருடங்களில் பதவி உயர்வு கிடைக்கும்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், குடும்பம் செய்துவரும் தொழிலில் ஈடுபட விரும்பவில்லை எனில், சொந்தமாக தொழில் தொடங்க ஒருமுறை நிதி உதவி செய்வார்கள். ஹர்ஷ் மாரிவாலாவின் மகன் ரிஷப் மாரிவாலா தனியாக தொழில் தொடங்கி நடத்தி வருவதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தனியாகத் தொடங்கும் தொழில், அந்தக் குடும்பத் தொழிலுக்கான துணைத் தொழிலாக இருக்கலாம். ஆனால், போட்டித் தொழிலாக இருக்கக்கூடாது. இப்படி தயாராகும் துணைப் பொருட்களை குடும்ப நிறுவனத்துக்கே விற்பனை செய்யலாம் என்றாலும், தரம், பண விவகாரங்களில் பொதுவான நடைமுறை என்னவோ, அதுவே அவருக்கும். குடும்ப உறுப்பினர் என்பதால் வெளிநிறுவனத்தைவிட அவருக்கு முன்னுரிமை தரப்படும்.
இந்த பிசினஸை சரியாகச் செய்ய முடியவில்லை எனில், மீண்டும் நிதி உதவி செய்யமாட்டார்கள். குடும்பத் தொழிலிலிருந்து வெளியேறிவிட்டு, மீண்டும் குடும்பத் தொழிலுக்குள் வரும்போது, வெளிநபர்களுக்கு என்ன நடைமுறையோ அதுபோலத்தான் மீண்டும் பணியமர்த்தப்படுவார். கிட்டத்தட்ட வெளிநபர்களைக் கையாள்வதைப் போலத்தான் குடும்ப உறுப்பினர்களையும் கையாள்கிறது மாரிகோ நிறுவனம். தமிழகத்தின் முருகப்பா குழுமமும் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களும் இதே வழிமுறையைக் கையாளுவதால்தான் தலைமுறைகள் கடந்த பின்னும் சந்தையில் நிலைத்துநிற்க முடிகிறது.

தலைமுறை வளரவளர தொழிலில் நிலைக்க முடியாது என்கிறபோது, இவர்கள் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இந்த ஃபேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜிதான். இதன் முக்கிய அம்சமே தொழிலையும் குடும்பத்தையும் பிரித்துப் பார்க்கச் செய்வதுதான். குடும்ப உறுப்பினர்களுக்குள் சிக்கல் வந்தாலும், தொழிலைத் தொய்வில்லாமல் கொண்டு செல்வதுதான் இதன் அடிப்படை.
குடும்பத்தினர் தொடர்ந்து தொழிலை நடத்திச் செல்ல என்ன செய்யவேண்டும்; என்ன செய்யக்கூடாது; செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என குடும்பத்தினருக்கு தெளிவாக வரையறுத்துக்கொடுப்பது இந்தத் தொழில் தந்திரம்தான்.
குடும்ப உறுப்பினர்கள் தொழிலை மேற்கொள்வதற்கு ஒரு சட்டதிட்டத்தை வகுத்துக்கொள்வதும், அதற்கேற்பதான் செயல்படவேண்டும் என்பதுவும் தெளிவாக வரையறுக்கப்படுகிறது. அதாவது, அரசமைப்புச் சட்டத்தைபோல, இந்தச் சட்டத்தையும் கறாராக கடைப்பிடிக்க வேண்டும்.
குடும்பத் தொழிலை முழுக்கமுழுக்க புரபஷனல்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுவது சரியான விஷயமாக இருக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. காரணம், குடும்ப உறுப்பினர், புரபஷனல் ஆகிய இருவரும் ஒரே தொழிலை வேறுவேறு கோணத்தில் பார்த்து செயல்படுத்துகிறவர்கள்.
ஒரு நிறுவனம் லாபகரமாக இயங்கினால், எனக்கு லாபம் என்றுதான் வெளிநபர் நினைப்பார். ஒரு நிறுவனம் நஷ்டம் அடைகிறது என்றாலும் அவருக்கு நஷ்டமில்லை என்றால் தொடர்ந்து இருப்பார். நிறுவனத்துக்கு லாபம், ஆனால் அவருக்கு ஆதாயமில்லை என்றாலோ அல்லது நிறுவனத்துக்கும் நஷ்டம் அவருக்கும் நஷ்டம் என்றாலோ அவர் தொடர்ந்து வேலையில் இருக்கமாட்டார்.

ஆனால், குடும்ப உறுப்பினர்களின் பிணைப்பு இப்படிப்பட்டதல்ல. அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்றாலும், நிறுவனத்துக்கு நஷ்டம் என்றாலும் பிணைப்பை விட்டுக்கொடுக்கப்பதில்லை. ஏனென்றால், அது அவர்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது. அந்தத் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கும். இப்படியான பிணைப்பு வெளிநபர்களுக்கு கிடையாது.
இரண்டாவது, முடிவுகளை எடுப்பதில் குடும்ப உறுப்பினர்களுக்கும் வெளிநபர்களுக்கும் உள்ள வேறுபாடுகள். குறிப்பாக, குறுகிய காலத்தில் நல்ல பலனை தரும் ஒரு முடிவு என்றாலும், நீண்டகால நோக்கில் பலனைத் தராது அல்லது நஷ்டத்தைக் கொண்டுவரும் என்றால் குடும்ப உறுப்பினர் அந்த முடிவை எடுக்கமாட்டார். ஆனால், வெளிநபர்கள் அந்த முடிவை மேற்கொள்வார்கள். ஏனென்றால், வெளிநபர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அதே நிறுவனத்தில் நீடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல, நிறுவன வளர்ச்சிக்கு என வெளிநபர்கள் முன்வைக்கும் யோசனைகளும், யுக்திகளும்கூட நீண்ட காலத்தில் நல்ல விளைவுகளைத் தருவதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
இப்படியாக குடும்பத் தொழில் நிலைத்து நீடித்து நிற்பதற்கு ஃபேமிலி மேனேஜ்டு ஸ்ட்ராடஜி அவசியம் என்பதைப் புரிந்துகொண்ட பல தொழில் குடும்பங்கள் இப்போது அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கி யுள்ளன. ஆனால், குடும்பத்துக்குள் நேருக்கு நேர் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்த வேலைகளை செய்துவிட வேண்டும். அதாவது, அடுத்து யார் தலைமை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்பது குறித்து முன்னோக்கிய திட்டமிடல் அவசியம். தலைமுறை மாற மாற குடும்பம் பிரிந்தாலும், சந்தையில் தொழில் நிலைத்து நிற்கவேண்டுமெனில் இதைச் செய்தாக வேண்டும்.
ஒரு காலத்தில் புகழ்பெற்ற மோதி குரூப், டி.சி.எம் (டெல்லி குளோத்திங் மில்ஸ்) போன்ற குடும்பத் தொழில் நிறுவனங்கள் இப்போது சந்தையில் இருக்கும் இடமே தெரியவில்லை. இதற்கான காரணம் இந்த ஸ்ட்ராடஜியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளாததே!
(வியூகம் வகுப்போம்)