Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! - 6

இந்துலேகா.சி, படம்: ஆ.முத்துக்குமார்

பிசினஸ் திலகங்கள்! - 6
##~##

''ஒவ்வொரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடியும், ஒரு பொண்ணு இருப்பானு சொல்லுவாங்க. இங்க, என்னோட வெற்றிக்குப் பின்னாடி இருக்கறது... என் கணவர்'' என்று பெருமையோடு சொல்கிறார், ஜெயந்தி ஸ்ரீஹரி. சென்னை, மயிலாப்பூரில் 'ஆர்ச்சர்ட்’ எனும் பெயரில் 'ஜூஸ் அண்ட் ஸ்நாக்ஸ்' கடையில் ஆரம்பித்து, தற்போது கார்ப்பரேட் வளாகங்களில் உள்ள ஃபுட் கோர்ட்டில் உணவகம் நடத்தும் அளவுக்கு வெற்றிகரமாக முன் னேறியிருப்பவர்!

''என்னோட சொந்த ஊர் சிதம்பரம். படிச்சு முடிச்சதும், கல்யாணமாகி சென்னைக்கு வந்தாச்சு. கணவர் ஸ்ரீஹரி பிறந்தது, ஃபிரான்ஸ் நாட்டுல. அவருக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே அப்பா தவறிட்டார். அதனால, பையனோட சென்னையில செட்டில் ஆயிட்டாங்க அவங்கம்மா (டாக்டர் லஷ்மிகாந்தம்). அதாவது, என் மாமியார்!

விதம்விதமா சாப்பிடறதுனா, என் கணவருக்கு ரொம்ப இஷ்டம். அதேசமயத்துல, ஆரோக்கியமாவும் இருக்கணும்னு நினைப்பார். அதனால, 'நாமளே ஹோட்டல்... இல்லைனா ரெஸ்டாரன்ட் மாதிரி ஏதாச்சும் ஆரம்பிக்கணும்’னு சொல்லிட்டே இருப்பார். ஒரு கட்டத்துல ஒரு முடிவுக்கு வந்து, 98-ம் வருஷம், மயிலாப்பூர்ல, 'ஆர்ச்சர்ட்’ கடையை ஆரம்பிச்சோம். சின்ன இடத்துல ஜூஸ், சாண்ட்விச் மட்டும்தான் பண்ணிட்டிருந்தோம். அவருதான் முழுப் பொறுப்பு எடுத்திருந்தாரு. நான் அவருக்கு உதவியா இருந்தேன்.

பிசினஸ் திலகங்கள்! - 6

கடைக்குனு சில தனித்துவங்களை கடைபிடிச்சோம். ஜூஸுக்குப் பயன்படுத்துற தண்ணி மட்டுமில்ல, ஐஸ் கட்டிங்களுக்குகூட மினரல் வாட்டர்தான் பயன்படுத்தினோம். ஜூஸ்ல செயற்கை கலரோ, ஃபிளேவர்ஸோ சேர்க்க மாட்டோம். மாமியார் ஒரு டாக்டர்ங்கிறதால, இயல்பிலேயே எங்களுக்குப் பழகின சுத்தத்தை, தொழில்லயும் பின்பற்றினோம். 'அந்த கடை சுத்தமா இருக்கும்...’ங்கிற ஒரு விஷயத்துக்காகவே, வாடிக்கையாளர்கள் தேடி வர ஆரம்பிச்சாங்க. அப்புறம் கணவரோட சேர்ந்து, ஐ.டி, கார்ப்பரேட் கம்பெனி வளாகங்கள்ல ஃபுட் கோர்ட்ல, 'ஆர்ச்சர்ட்’ உணவகத்தை ஆரம்பிக்க முயற்சிகள் எடுத்தோம். எங்களோட மயிலாப்பூர் கடைக்கு வந்து பார்த்துட்டு அனுமதி கொடுத்தாங்க'' எனும் ஜெயந்தி, பிசினஸில் தான் சந்தித்த சவாலான காலகட்டத்தை பகிர்ந்தார்.

''கணவர், தான் பிறந்த ஊரான ஃபிரான்ஸுக்கு போகணும்னு, அவங்கம்மாவோட ஒரு மாசம் டிரிப் கிளம்பிட்டார். எனக்கு மயிலாப்பூர், பெருங்குடி ரெண்டு கடைகளைப் பார்த்துக்க வேண்டிய கட்டாயம். சவாலா எடுத்துக்கிட்டு களத்துல இறங்கினேன். முதல் வாரம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறம் மெனுவுல தைரியமான மாற்றங்களை எல்லாம் செய்யற அளவுக்கு முன்னேறிட்டேன்.

ராத்திரி, பகல்னு ஷிஃப்ட் முறையில் வேலை செய்யும் ஐ.டி பணியாளர்களுக்கு, வயிற்றுக்கு சரியான சாப்பாடு கிடைக்காது. அதனால, அவங்களுக்கு ஜூஸ், சாண்ட்விச் மட்டும் பத்தாதுனு பாரம்பரிய உணவான சுண்டல், ராகி கூழ், ராகி தோசை, அவல் உப்புமா, ராகி இட்லி, ராகி முறுக்கு, மோர், பணியாரம், முளைக்கட்டுன பயறுனு சத்தான உணவு வகைகளை மெனுல சேர்த்தேன். கூட்டம் கூட்டமா வந்து ருசிச்சு சாப்பிட்டவங்க, ஐ.டி கம்பெனிகளுக்கு வர்ற வெளிநாட்டு விருந்தினர்களையும் ஆர்வமா கூட்டிட்டு வந்து, நம்ம உணவு கலாசாரத்தை பெருமையா சொல்லி, சாப்பிட வெச்சாங்க.

டூர் முடிஞ்சு வந்ததும், 'தனியா என்ன பண்ணுவியோனு பயந்துட்டு இருந்தேன். ஆனா, ஆச்சர்யப்பட வெச்சுட்டே! சரி, நீ இனி ஓய்வெடுத்துக்கோ’னு சொன்னார் கணவர். 'இது ரொம்பப் பிடிச்சுருக்கு...’னு சொல்லி, மயிலாப்பூர் அவருக்கு, பெருங்குடி எனக்குனு பிரிச்சுக்கிட்டோம்!''

- சிரித்துக் கொண்டே சொன்ன ஜெயந்தி, தொடர்ந்தார்...

பிசினஸ் திலகங்கள்! - 6

''உணவகத்தில் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லாம இருந்தது. அதாவது, மேனேஜர்ல இருந்து, சமைக்கிறவர், சர்வ் பண்றவர்னு எல்லாருமே ஆண்கள். கஸ்டமர் வர்ற நேரத்துல டீ குடிக்கப் போயிடறது, சொன்ன வேலையை பொறுப்பா செய்யாதது, ஒவ்வொரு திங்கள்கிழமையும் ரொம்ப லேட்டா வர்றதுனு இருந்தாங்க. இதுக்கெல்லாம் தீர்வா, பெருங்குடியில என் பொறுப்புல இருக்கிற கடைக்கு எல்லா வேலைகளுக்கும் பெண்களை நியமிச்சேன். 'கிச்சன்ல சுத்தம், கஸ்டமர்களுக்கு ஆரோக்கியம்'ங்கிற எங்க குறிக்கோளை உணர்ந்து, இந்த பெண்கள் எல்லாமே பொறுப்பா நடந்துக்குறாங்க. இப்போ எல்லோரும் குடும்பம் மாதிரி பழக ஆரம்பிச்சுட்டோம். எங்கயாச்சும் வெளியூர் போனா, அவங்களுக்கு சின்னச் சின்ன பரிசுப்பொருட்கள் வாங்கி வர்றது, உடம்பு சரியில்லைனா லீவும் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுக்கிறது, ஜூன் மாசம் பசங்களோட ஸ்கூல் ரீ-ஓபனிங் சமயம் ஃபீஸ் கட்ட உதவியா இருக்கறதுனு என்னால முடிஞ்ச உதவிகளை செய்வேன். இதெல்லாம் அவங்களை கூடுதல் பொறுப்பாக்கிட, நான் இல்லைனாலும் தங்களோட சொந்த தொழில் மாதிரி பாத்துக்கறாங்க!'' என்று தன் பணியாட்களைப் பெருமையுடன் பேசிய ஜெயந்தி, தொழில் வெற்றி சூத்திர ரகசியத்தை உடைத்தார்...

பிசினஸ் திலகங்கள்! - 6

''பாரம்பரிய உணவுகள் யூத்துக்கும் பிடிக்க என்ன செய்யலாம்..? அவல் உப்புமாவுல உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி கலந்து கொடுப்போம். சாயந்திர ஸ்நாக் ஸுக்கு ராகி முறுக்கோட குலோப் ஜாமூனும் கொடுப்போம். குலோப் ஜாமூன் சாப்பிடுறவங்க, 'சாப்பிட்டுத்தான் பார்ப்போமே...’னு ராகி முறுக்கை ஒரு கடி கடிச்சு, அப்புறம் அந்த ருசிக்குப் பழகிடுவாங்க.  ராகி முறுக்கை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. எதையும் டேபிள் டெகரேஷனோட வசீகரமா பறிமாறுவோம். பீட்சா, பர்கர் மட்டுமே பழகிய யூத்ஸ், இங்க வந்து இதெல்லாம் சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா ஃபாஸ்ட் ஃபுட்ல இருந்து விலகற ஆச்சர்யமும் நடக்கும். 'மேடம், நான் 90 கிலோ இருந்தேன். உங்க மெனு, என்னை அஞ்சு கிலோ குறைச்சுருக்கு. உங்க நோட்டீஸ் போர்டுல என் பெயரை போட்டு எழுதி வைக்கட்டுமா?’னு உரிமையோட கேட்பாங்க. கலெக்ஷனைவிட, இதான் உண்மையான வெற்றி!''

- பெருமிதம் ஜெயந்தி முகத்தில்.

சாதனைகள் தொடரும்...