இந்துலேகா.சி

##~## |
'எவ்வளவு முதல் போட்டால், எவ்வளவு லாபம் எடுக்கலாம்' என்றுதான் அனைவரும் யோசிப்பார்கள். ஆனால், நாம் செய்யும் தொழிலால் இந்த சமூகத்துக்கும் ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா, 'கால் ஆட்டோ’ பிசினஸில்!
சென்னைவாசிகள், கைதட்டி ஆட்டோவை அழைப்பதை கைவிட்டு, 'கால்’ செய்து டாக்ஸியை புக் பண்ணும் காலம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் வருமானம் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்களுக்காகவே 'ஆட்டோ ராஜா’ என்கிற பெயரில் புது யோசனையைப் பிடித்திருக்கும் ஐஸ்வர்யா, லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. முடித்தவர்.
''எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில பி.எஸ்சி. சோஷியாலஜி படிச்சுட்டிருக்கும் போது, புராஜெக்ட்டுக்கு என்ன பண்ணலாம்னு நிறைய யோசனைகள். அப்போ பேப்பர்ல ஆட்டோ டிரைவர் ஒருத்தர் பத்தி நெகட்டிவ்வா நியூஸ் வந்திருந்தது. உடனே பக்கத்துல இருந்தவங்க எல்லாம், 'இந்த ஆட்டோ டிரைவருங்களே இப்படித்தான்...’னு பொதுவான வாக்குமூலம் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு ஆட்டோ அனுபவங்கள் பொதுவா நல்லதாவே அமைஞ்சுருந்ததால... ஆட்டோ டிரைவர்களையே புராஜெக்ட் ஹீரோக்களா எடுத்துட்டு, அவங்களால ஏற்படுற பொதுவான பிரச்னைகள் என்னன்னு பொதுமக்கள்கிட்டயும், ஆட்டோ டிரைவர்களோட தின வருமானம், செலவு, டாஸ்மாக்ல அவங்க தொலைக்கிற பணம், குடும்பம்னு நிறைய விஷயங்களை நேரடியா சர்வே எடுத்தேன். இதன் மூலமா பல ஆட்டோ டிரைவர்களும், அவங்களோட குடும்பங்களும் எனக்கு சிநேகமானாங்க.

நான் சேகரித்த உண்மைகளை வெச்சு, 'ஆட்டோ டிரைவர்களோட வாழ்க்கை முறை ஏன் கவலைக்கிடமா இருக்கு... அதை சரி பண்ண என்ன பண்ணலாம்’ங்கிறத 'லைஃப் ஆஃப் ஆட்டோ ரிக்ஷா டிரைவர்ஸ்’ங்கிற பெயர்ல புராஜெக்ட்டா சமர்பிச்சேன். அதைப் பார்த்த என் கல்லூரிப் பேராசிரியர், 'இதோட நிறுத்திடாம, ஆட்டோ டிரைவர் களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, களத்தில் இறங்கி பிராக்டிகலா வொர்க் அவுட் ஆகுற மாதிரி ஏதாவது பண்ணலாமே...’னு சொல்லி உற்சாகப்படுத்தினார்.
21 வயசுல, ஐ.ஏ.எஸ். கனவோட படிச்சுட்டிருந்த எனக்கு, இதுக்கு மேல என்ன பண்றதுனு புரியல. அந்த சமயம் ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிட்டியில எம்.எஸ்சி. படிக்க வாய்ப்பு கிடைக்க, பறந்துட்டேன். படிப்பு முடிஞ்சு திரும்பின நேரம், சென்னை யைச் சேர்ந்த அனுபவ் என்பவர், என் புராஜெக்ட்டை ஆன்லைனில் பார்த்துட்டு, போன் செய்தார். ஆட்டோ டிரைவர்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு ரொம்ப ஆர்வமா, அக்கறையா இருந்தார். எல்லாரையும் மாதிரி மதிப்பெண்களுக்காக புராஜெக்ட்டை சமர்பிச்சதோட இல்லாம, அடுத்த ஸ்டெப் ஏதாச்சும் பண்ணணும்னு நெனச்சுட்டிருந்த எனக்கு, அனுபவ் பெரிய சப்போர்ட்டா இருந்தார்.
'கால் ஆட்டோ' ஆரம்பிக்கலாம்னு தீர்மானம் பண்ணி, 'ஆட்டோ ராஜா’னு கம்பெனி பேரை பதிவு பண்ணிட்டோம். ஆனாலும், ஆட்டோ டிரைவர்களை புரொஃபஷ னலா மாத்த முடியுமானு சந்தேகம். சென்னை, கண்ணகி நகர்ல இருக்கற கவர்ன் மென்ட் ஹவுஸிங்போர்ட் குடும்பங்களோட எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். அங்க நிறையபேர் ஆட்டோ டிரைவர்கள்தான். அங்க இருந்தே 'ஆட்டோ ராஜா’வை ஆரம்பிச்சேன்!' என ஆரம்ப நினைவுகளைப் பகிர்ந்தவர், அந்த ஆட்டோ ஓட்டுநர்களிடமும், அவர்கள் குடும்பத்தினரிடமும் 'கால் ஆட்டோ’ கான்செப்டை பற்றி எடுத்துச் சொல்லி, முதல் கட்டமாக 13 'ஆட்டோ ராஜா'க்களை (ஆட்டோ டிரைவர்களை இப்படிதான் அழைக்கிறார்) வைத்து 'கால் ஆட்டோ’ சர்வீஸை ஆரம்பித்துள்ளார்.
''கஸ்டமர்ஸ் ஆட்டோ வேணும்னு கால் செய்தா, அந்த ஏரியால இருக்கிற 'ஆட்டோ ராஜா’வுக்கு சவாரி கொடுப்போம். ஆட்டோ கட்டணத்துடன் எங்க கம்பெனிக்கான சர்வீஸ் சார்ஜும் சேர்த்து வாங்கிப்போம். கஸ்டமர் சரியான நேரத்துல அவங்க சேர வேண்டிய இடத்துக்கு, எந்த பயமும் இல்லாம, பாதுகாப்பா போய் சேர்ந்துடுவாங்க. கஸ்டமர் ஆட்டோவுல ஏறி உக்காந்த உடனே, அந்த ஆட்டோ ஓட்டுற டிரைவரோட பெயர், படிப்பறிவு, திறமை இப்படி எல்லா தகவல்களும் கஸ்டமர் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணிடுவோம். இதனால கஸ்டமருக்கும் அந்த ஆட்டோ ஓட்டுநர் மேல மரியாதை வருது, அவரும் நம்மள்ல ஒருத்தர்னு சகஜமா பேச ஆரம்பிச்சுடுவாங்க'' என்ற ஐஸ்வர்யா தொடர்ந்து,
''தினமும் 200 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை கொடுத்து வாடகை ஆட்டோ ஓட்டுறவங்கதான் நிறைய பேர். லோன் மூலமா சொந்த ஆட்டோ வாங்க நினைச்சாலும் சீட்டு, தண்டல், கந்துவட்டினு போய் விழறாங்க. தின சம்பாத்தியத்தைவிட, வட்டி அதிகம் கட்ட வேண்டியிருக்கும். அதனால எங்க 'ஆட்டோ ராஜா’க்களுக்கு, சொந்த ஆட்டோ வாங்க, குறைந்த வட்டிக்கு 25 பர்சன்ட் ஆரம்பத் தொகை கொடுக்கிறோம். 'ஆல் இண்டியா பேங்க் ஆபீசர்ஸ் சங்க' உதவியோட, மீதி 75 பர்சன்ட் தொகை லோன் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்றோம்.
எங்க 'ஆட்டோ ராஜா’க்களுக்கு தினசரி குறைஞ்சது 100 ரூபாயாவது சேமிக்கணும், கடனை வாங்கி ஆடம்பரச் செலவு செய்யுறதை நிறுத்தணும், கஸ்டமர்கள்கிட்ட மரியாதையாவும் அக்கறையாவும் நடந்துக்கணும்னு நிறைய விஷயங்களை கத்துக் கொடுக்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் ஒப்பந்தத்தின் பேரில் இலவச மருத்துவ பரிசோதனை, குறைந்த செலவில் சிகிச்சை, குடிப்பழக்கம் இருக்கறவங்களுக்கு அதில் இருந்து மீளும் பயிற்சி இப்படி நிறைய புரோகிராம்ஸ் செய்றோம்.
ஆட்டோ ராஜாக்களின் மனைவி, சகோதரிகளுக்கு தகுதிக்கு ஏற்றவாறு ஏதாவது வேலை அல்லது கைத்தொழில் கற்றுக்கொடுக்கவும் உதவுறோம். கூடவே, தற்காப்புக் கலையையும் கற்றுத்தர ஏற்பாடு செய்கிறோம். குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் வசதியின்மையால் படிப்பை பாதியிலேயே விட்ட குழந்தைகளுக்கு படிப்பைத் தொடரவும், இலவச டியூஷன் மற்றும் ஆர்ட்ஸும் சொல்லித் தர்றோம்.
ஆரம்பிச்ச ஒரு மாசத்துல 50 'ஆட்டோ ராஜா’க்கள் சேர்ந்தாங்க. இப்போ மொத்தம் 500 பேர் இருக்காங்க. ஓரளவுக்கு பெரிய முதலீடோட ஆரம்பிச்ச இந்த பிசினஸ்ல, இப்போதைக்கு லாபம் குறைச்சலா இருந்தாலும், மனசுக்கு ஒருவித திருப்தி இருக்கு. அதேசமயத்துல 'ஆட்டோ ராஜாக்கள்’ அதிகமாக ஆக இந்த கான்செப்ட், பிசினஸ் நல்லா சூடு பிடிக்க ஆரம்பிச்சுடும் என்ற நம்பிக்கையும் இருக்கு'' என்றவர், அடுத்து சொன்ன விஷயம், ஹைலைட்!

''கூடிய சீக்கிரத்துல, பெண் ஆட்டோ ஓட்டுநர்களை மட்டும் வெச்சு, 'ஆட்டோ ராணி’ கான்செப்டை ஆரம்பிக்க, டி.வி.எஸ் கம்பெனியோட சேர்ந்து ஒப்பந்தம் போடறதுக்கு பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு. அதுக்காக நிறைய பெண்களுக்கு பயிற்சியும் கொடுத்திட்டிருக்கோம்!'' எனும் ஐஸ்வர்யாவுக்கு, 'ஆட்டோ ராணி’களின் ஆட்டோக்களுக்கு மட்டும் அரசு சம்மதத்துடன் மஞ்சள் நிறத்தை மாற்றி, புது நிறம் கொடுக்கும் யோசனை உள்ளதாம்.
கலக்குங்க மேடம்!
அஞ்சே மாசத்துல சொந்த ஆட்டோ!
'ஆட்டோ ராஜா'க்களில் ஒருவரான பாக்கியராஜ், ''இது நானும் ஒரு ராஜானு சொல்லிக்கறதுக்கு ரொம்பவே பெருமையா இருக்குங்க. எனக்கு சொந்த ஊர், கடலூர். சென்னைக்கு வந்து 12 வருஷமாச்சு. ஆரம்பத்துல வாடகை ஆட்டோதான் ஓட்டிட்டிருந்தேன். தினசரி வருமானத்துல வாடகைக்கே பாதி போயிடும். சவாரியே சரியில்லாத நாட்கள்ல கடன் வாங்கிகூட ஆட்டோ வாடகை கொடுத்திருக்கேன். இதனால குடும்பத்தையும் பசங்களையும் கவனிக்க முடியாம தடுமாறியிருக்கேன். பசங்களை படிக்க வைக்கவும் முடியாது. ஆனா, இப்ப, ஏழு மாசத்துக்கு முன்னதான் 'ஆட்டோ ராஜா' பத்தி கேள்விப்பட்டு அதுல சேர்ந்தேன். சரியா அஞ்சே மாசத்துல சொந்த ஆட்டோ ஓட்டிட்டிருக்கேன்னா பாத்துக்கோங்க. இதுக்காக ஐஸ்வர்யா மேடத்துக்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்!