Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! - 8

வேலை, க்ளிக் க்ளிக்... லாபம், பளிச் பளிச்!இந்துலேகா.சி

##~##

''லாபம் அதிகம் தரும் தொழிலைவிட, மனசுக்கு திருப்தி தரும் தொழில்தான் என்னோட சாய்ஸ்!'' என்று சிரித்துக்கொண்டே சொல்லும் ஸ்வாதி சேகரன், ஒரு கேமராவுடன் தன் திறமையையும் முதலீடாகப் போட்டு, சென்னையில் போட்டோகிராஃபி தொழிலை ஆரம்பித்து, இன்று மடமடவென முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்!

''சென்னை, எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லூரியில பி.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா; பெங்களூருவுல எம்.எஸ்சி., மாஸ்டர் இன் கம்யூனிகேஷன் இதையெல்லாம் படிச்சு முடிச்சேன். பி.எஸ்சி-யில போட்டோகிராஃபியும் ஒரு பாடமா இருந்ததால, அப்போதிருந்தே புகைப்படக் கலை ஆர்வம் பத்திக்கிச்சு'' எனும் ஸ்வாதி, தனி நபராக புகைப்படக் கண்காட்சியையும் நடத்தியிருக்கிறார்.

''காலேஜ் படிக்கும்போதே 'ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி’ங்கற தலைப்புல, ஃபிலிம் ரோல் கேமராவில் எடுத்த புகைப்படங்களாக தேர்ந்தெடுத்து கண்காட்சியில் வெச்சேன். நிறைய பாராட்டுகள் கிடைச்சுது. என் ஆர்வமும் இன்னும் அதிகமாச்சு.

பிசினஸ் திலகங்கள்! - 8

மாஸ்டர் டிகிரி படிச்சுட்டு இருக்கும்போது, புராஜெக்ட்டுக்காக பெங்களூருவைச் சேர்ந்த விளம்பரத் துறை புகைப்படக்காரர் கிரிஷானுசேட்டர்ஜிகிட்ட இன்டர்ன்ஷிப் பண்ணினேன். அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். படிப்பு முடிச்சதும் ஒரு வருஷம் விளம்பரத் துறையில் வேலை பார்த்தேன். எனக்கு அந்த வேலை பிடிச்சுருந்தாலும், கேமராவை ரொம்பவே மிஸ் பண்ணினேன். என்கூட வேலை பார்த்த கிரியேட்டிவ் டைரக்டர் ஜெய்ஷங்கர், நான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்த்துட்டு, 'உன் ஆர்வம் போட்டோகிராஃபினா அதை நோக்கியே போ. இங்க தேங்காதே’னு உற்சாகப்படுத்திட்டே இருப்பார். ஒரு கட்டத்தில் அந்த வார்த்தைகளோட உண்மை என்னை முழுசா உள்வாங்கினப்போ, பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டு, போட்டோகிராஃபி தொழிலை கையில எடுத்துட்டேன். அம்மா சப்போர்ட் பண்ணினாலும், அப்பாவுக்கு இஷ்டமில்லை. ஆனாலும், அவர் மறுப்பு ஏதும் சொல்லல'' என்று சொல்லும் ஸ்வாதி, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு முழுவீச்சில் போட்டோகிராஃபி பிசினஸை ஆரம்பித்துள்ளார்.

''முதல் வேலையா... தொடர்புகளை அதிகப்படுத்தறதைத்தான் கையில எடுத்தேன். காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், பழைய ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ், உறவினர்கள் எல்லாரும் புது தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. அவங்களை எல்லாம் அணுகி, என்னையும் நான் ஆரம்பிச்சுருக்கும் தொழிலையும் அறிமுகப்படுத்திக்கிட்டு, வாய்ப்பு கொடுக்க மறந்துடாதீங்கனு சொல்லி வெச்சேன். 'லேடி போட்டோகிராஃபரா?'னு ஆச்சர்யமானவங்க, உற்சாகப்படுத்தும் விதமா வாய்ப்புகளைக் கொடுக்க, ஆரம்பிச்சாங்க.

போட்டோகிராஃபியை பொறுத்தவரை கல்யாணம், விளம்பரம்... இல்லைனா, மாடலிங்னு இந்த மூணுல ஏதாவது ஒரு ஏரியாவில்தான் கவனம் செலுத்துவாங்க. எனக்கு மூணு ஏரியாவிலுமே ஆர்வம் இருந்ததால, எல்லாத்தையுமே எடுத்து செய்தேன். என்னோட முதல் வாடிக்கையாளர், 'ஷில்பி பொட்டிக்’. அதுக்கப்புறம் 'தர்ஷினி பொட்டிக்’, 'நம்ம வீடு வசந்தபவன்’, சோப்பு, ஷாம்பு போன்ற கமர்ஷியல் விளம்பரங்கள்னு கடகடனு வாய்ப்புகள் குவிஞ்சுது. என்னோட புராஜெக்ட்டுகளை எல்லாம் ஃபேஸ்புக்ல போட, அதுக்கப்புறம் மேடம் ஆல்வேஸ் பிஸிதான்!'' எனச் சொல்லிச் சிரிக்கும் ஸ்வாதி,

பிசினஸ் திலகங்கள்! - 8

''எவ்வளவுதான் பிஸியா இருந்தாலும், கமிட் ஆன ஒவ்வொரு வேலையையும் ரொம்ப சின்ஸியரா பண்ணிக் கொடுப்பேன். இதுதான் என் வளர்ச்சிக்கு முதல் காரணம். சமயத்துல, 'எங்க புராஜெக்ட் விளம்பரத்துக்கு இப்படித்தான் போட்டோ வேணும்’னு கஸ்டமர்கள் கேட்டு வாங்குவாங்க. சிலர், என்னோட ஐடியாவுக்கே விட்டுடுவாங்க. நம்ம இஷ்டத்துக்கு கிரியேட்டிவ்வா செய்து கொடுக்கிற வேலையில கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஏன்னா, ஒரு சின்ன தப்புனாலும், அதுக்கு நாமதான் பொறுப்பு இல்லையா?'' என்று அக்கறை பொங்கச் சொல்கிறார்!

தொடர்ந்த ஸ்வாதி, ''கல்யாண போட்டோ எடுக்குறதுக்கு உடலளவுல நிறைய கஷ்டப்படணும். ஒரு இடத்துல நிக்காம, ஓடிட்டே இருக்கணும். 'உன்னைவிட அதிக வெயிட்டா இருக்கும்போல இந்த கேமரா... எப்படிக்கா தூக்கிட்டு ஓடுறே’னு விசேஷ வீட்டில் ஆச்சர்யமா கேட்டு பாராட்டுவாங்க. இப்போ திருமண வீடுகள்ல போட்டோ எடுக்கறதுக்கு, ஆண் போட்டோகிராஃபரைவிட பெண்களைத்தான் விரும்புறாங்க. மணப்பெண் புகைப்படங்களை கம்ஃபர்டபிளா எடுக்க முடியுமே, அதனாலதான்.

பிசினஸ் திலகங்கள்! - 8

ஆண்டாண்டு காலமா ஆண்களே பார்த்திட்டிருந்த ஒரு துறையில், பெண்கள் கால் எடுத்து வைக்கும்போது ஆரம்பத்தில் சந்தேகமாத்தான் பார்ப்பாங்க. நம்ம வேலையை ஒழுங்கா செஞ்சு திறமையை நிரூபிச்சுட்டா, பெண்ணுங்கிற காரணத்துக்காகவே நம்மளை அதிகமா கொண்டாவும் செய்வாங்க'' என்று மைனஸை ப்ளஸாக மாற்றும் வித்தையை அனுபவத்திலிருந்தே எடுத்துச் சொன்னார்.

நிறைவாக பேசிய ஸ்வாதி, ''லேட்டஸ்ட் உபகரணங்கள், சாஃப்ட்வேட், டெக்னிக் எல்லாத்துலயும் அப்டேட்டடா இருக்கணும். அதுக்கப்புறம் ஆரம்பகால முதலீடு குறைவா இருந்தாலும், போகப் போக தொழில்ல அதிகமான முதல் போட வேண்டியிருக்கும். ஏன்னா, இந்தத் துறையில் நவீன சாதனங்கள் வந்துட்டே இருக்கும். அதையெல்லாம் நமக்கு வரும் வருமானத்திலேயேகூட சரிகட்டிக்கலாம். ஒரு மாசம் பெரிய பட்ஜெட் வேலை வந்ததுனா, அடுத்த மாசம் சின்ன பட்ஜெட் வேலை கிடைக்கும். மொத்தத்துல, 'ஓய்வெடுக்க முடியலையே'னு வருத்தப்படுற அளவுக்கு வாய்ப்புகள் வந்துட்டே இருக்கும்!''

- இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு 'வெல்கம்’ சொல்லும் நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார்!

சாதனைகள் தொடரும்...