ஃபேஷன் பிசினஸில் கலக்கும் கல்லூரி தோழிகள்கட்டுரை : இந்துலேகா.சி; படங்கள் : ஆ.முத்துக்குமார்

கல்லூரியில தோழிகளாக இருக்கறவங்க... காலத்தின் பயணத்தில் பிரியறதுதான் அதிகம். ஆனா. பிசினஸில் கைகோத்துட்டா... காலம்பூரா கலக்கலாம்!'' என்று புன்னகை பொங்குகிறார்கள், ஜானவி, ரஷ்மி!
'எகாட் க்ளோதிங்’ (Ekat Clothing) என்ற பெயரில் பெண்களுக்கான நவநாகரிக உடைகளை இணையத்தின் மூலம் விற்பனைக்கு வைக்கும் இந்த
##~## |
''எட்டாவது படிக்கும்போதே, ஃபேஷன் டிசைனிங் கனவு ஆரம்பிச்சாச்சு. செட்டிநாடு ஸ்கூல்ல ஃபேஷன் டிசைனிங் தொடர்பான ஒரு எலெக்டிவ் கோர்ஸ் இருக்குங்கறதுக்காகவே, அதுவரைக்கும் படிச்சிட்டிருந்த ஸ்கூல்ல இருந்து, மாறி அங்க வந்துட்டேன். ப்ளஸ் டூ முடிச்சு, என்.ஐ.எஃப்.டி-யில (National Institute of Fashion Technology) ஃபேஷன் டிசைனிங் சேர்ந்தேன்'' என்ற ஜானவியை இடைமறித்து, ''எனக்கும் ஜானவிக்கும் ஒரே மாதிரி டேஸ்ட். அதுதான் ஒரே காலேஜ்ல ஒரே டிபார்ட்மென்ட்ல சந்திக்க வெச்சுதுனு நினைக்கிறேன்!'' என்று உள்நுழைந்தார் ரஷ்மி.
''காலேஜ்ல... ஸ்கெட்ச் பண்றது, மெட்டீரியல் தேர்வு செய்யறது, கட் பண்றது, தைக்கிறது, லேட்டஸ்ட் டிரெண்ட், மார்க்கெட்டிங்னு எல்லா விஷயத்துலயும் நிறைய தெளிவு கிடைச்சுது. அப்போவெல்லாம் ஜானவியோட ஸ்டைல் ஆஃப் டிசைன் எனக்கும்... நான் பண்றது அவளுக்கும் ரொம்ப பிடிக்கும். ஒரே மாதிரியான டேஸ்ட் இருந்தாலும், டிரெஸ் வடிவமைக்கறதுல நிறைய வித்தியாசம். ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் செய்யறதுக்கு, அதுதான் காரணம். ஒரே டேஸ்ட்டுங்கறதால பெருசா எந்த பிரச்னையும் எங்களுக்குள்ள வராது. டிசைனிங் வேறவேற மாதிரி இருக்கறதால, வெரைட்டியும் கொடுக்க முடியுமே!'' என்று தங்களின் நட்பு மற்றும் தொழில் பொருத்தத்தை அழகாகச் சொன்னார் ரஷ்மி.

'எல்லாமே காலேஜுல கத்துக்கிட்டாலும், களத்துல இறங்கறப்ப மார்க்கெட்டிங், கஸ்டமர் ஹேண்டலிங் இப்படி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுருக்கணுமே..! அதனால வேற வேற டிசைனிங் நிறுவனங்கள்ல ஒரு வருஷம் தனித்தனியா வேலை பார்த்தோம். 'நம்மால் முடியும்’ங்கற தன்னம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் இந்த 'எகாட் க்ளோதிங்’ நிறுவனத்தை ஆரம்பிச்சோம். இதோட சிறப்பு... இண்டோ-வெஸ்டர்ன் காஸ்ட்யூம். அதாவது இந்தியத் துணி வகைகளான பட்டு, சில்க் காட்டன் மாதிரி மெட்டீரியல்ல, வெஸ்டர்ன் ஸ்டைல் டிரெஸ் டிசைன்


பண்றது. வெஸ்டர்ன் துணி வகைகள்ல, இண்டியன் ஸ்டைல் எம்ப்ராய்டரி, ஆரி மாதிரியான வேலைப்பாடுகளை செய்றதுதான். எங்களோட டார்கெட்... 18 - 30 வயதுப் பெண்கள்! 18 வயசு டீன் ஏஜ் கேர்ள்ஸுக்கு ஃபங்கியா, மாடர்னா, நிறைய ஓபன் கட்ஸ் கொடுத்து ஃபிரீக்கியா டிசைன் பண்ணுவோம். 20 வயசுக்கு மேல கொஞ்சம் ஸட்டிலா, சிம்பிள் ஓபன் கட்ஸ், ரொம்ப ஃபிரீக்கியா இல்லாம கொஞ்சம் மெஜெஸ்டிக்கா டீசன்ட் லுக்ல டிசைன்ஸ் இருக்கும்''
- இடைவெளி விட்டார் ஜானவி.
''ஆனா, பொட்டீக் மாதிரி நாங்க கஸ்டமைஸேஷன் கார்மென்ட்ஸ் பண்றதில்ல...'' என்ற ரஷ்மி,
''அதாவது இந்த மெட்டீரியல்ல, இந்த டிசைன் வேணும்னு கேட்கறவங்களுக்குப் பண்ணித் தர்றதில்ல. எங்ககிட்ட இருக்கிற டிசைனர் கார்மென்ட்ஸ் மட்டும்தான். தேவைப்பட்டா, கஸ்டமர்களுக்குத் தேவையான அளவுல ஆல்டர் செய்து கொடுப்போம். அதையும் மீறி சில கஸ்டமர்கள் பிடிச்ச டிசைன் கேட்டா, எங்ககிட்ட இருக்குற மெட்டீரியல்களைக் காட்டி, அதுல தேர்வு செய்ற மெட்டீரியல்ல, நிறைய மாற்றங்கள் செய்து, டிசைன் பண்ணுவோம்'' என்றவர், தன் பேச்சை சீரியஸாக கவனித்துக் கொண்டிருந்த ஜானவியிடம், 'தெளிவா பேசுறேனா..?’ என்று கண்களாலேயே உறுதிபடுத்திக்கொண்டு தொடர்ந்தார்...
''ஒவ்வொரு மெட்டீரியலிலும் ஒரு டிரெஸ் தச்சு, நாங்களே பயன்படுத்திப் பார்த்து, குவாலிட்டி டெஸ்ட் பண்ணின பிறகுதான், அந்த மெட்டீரியல்ல டிசைன் பண்ணுவோம். ஒவ்வொரு ஆடையோடவும் சரியான வாஷ் கேர் டிப்ஸும் கொடுத்துடுவோம். டிசைன் பண்றதுக்கு முன்ன சீஸன், டிரெண்ட் எல்லாத்தையும் கவனத்துல வெச்சுதான் பண்ணுவோம். இப்போ பார்த்தீங்கனா

பிரைட் அண்ட் போல்டு பிரின்ட்ஸ், சம்மரி கலர்ஸ், கிராஃபிக் பிரின்ட்ஸ் இதெல்லாம் தான் டிரெண்டுல இருக்கு'' என்று ரஷ்மி டிப்ஸ் சொல்ல...
''மெட்டீரியல், மெஷினரிக்கு மட்டும் முதலீடு செய்துட்டு, கடின உழைப்பையும் போட்டு பிசினஸை ஆரம்பிச்சுட்டோம். ஆன்லைன்லதான் இப்போதைக்கு விற்பனை. வெளி நிகழ்ச்சிகள்ல ஸ்டால் போடுறோம். இது எங்களுக்கு கஸ்டமர்களை நேரடியா சந்திக்கறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர்றதால, அவங்களோட விதவிதமான ரசனையையும் புரிஞ்சுக்க முடியுது.
சில விஷயங்கள்ல உறுதியா இருக்கோம். அதாவது, மார்க்கெட்ல ஏற்கெனவே இருக்கற டிசைனை செய்ய மாட்டோம். எங்களோட டிசைன்களையும் ரிபீட் பண்ண மாட்டோம். எங்க தயாரிப்புகளோட இன்னொரு சிறப்பு... காலையில போடற அதே டிரெஸ்ஸுக்கு சில ஸ்பெஷல் அக்சஸரீஸ் போட்டு, பார்ட்டி உடையா மாத்தி சாயந்திரமும் போட்டுக்க முடியும். ஆபீஸ் போயிட்டு அப்படியே ஈவ்னிங் ஒரு பார்ட்டியையும் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடலாம்!' என்று துறுதுறுக்கும் கண்களுடன் பேசினார் ஜானவி.
''இப்போ தனியா ஷோரூம் வைக்கறதுக்கு இடம் பார்த்துட்டு இருக்கோம்!''
- சந்தோஷமும் பூரிப்பும் தோழிகளின் முகத்தில்!
சாதனைகள் தொடரும்...