Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! - 11

ஹவுஸ் முதல் பிளவுஸ் வரை... இந்துலேகா.சி

''ஓர் ஆணோட வெற்றிக்குப் பின்னாடி, ஒரு பெண் இருக்கறதா சொல்வாங்க. ஒரு பெண்ணான என் வெற்றிக்குப் பின்னாடி... பொறந்த வீடு, புகுந்த வீடுனு என் குடும்பமே இருக்கு!'' என்று முகம்கொள்ளா சிரிப்புடன் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பிரவீணா பிரபு.

ஆர்க்கிடெக்ட், ஃபேஷன் டிசைனர், திருமணங்களுக்கான ஸ்பெஷல் வளையல் தயாரிப்பாளர், இன்டீரியர் டிசைனர், வாஸ்து நிபுணர், ஸும்பா இன்ஸ்ட்ரக்டர் என்று இவரின் முகங்கள் பல!

பிசினஸ் திலகங்கள்! - 11

''சென்னை, சத்யபாமா கல்லூரியில பி.டெக்., எம்.பி.ஏ., எம்.ஆர்க்.... அண்ணாமலை யுனிவர்சிட்டியில் கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மென்ட் டிப்ளோமா, 'ரியல் எஸ்டேட் அண்ட் வேல்யுவேஷன்’-ல எம்.எஸ்சி. எல்லாம் முடிச்சேன். இடையில்... நான், அம்மா, தங்கைனு எங்களுக்கு எல்லாமுமா இருந்த அப்பா தவறின நேரம்... சத்யபாமா காலேஜ்லயே வேலை கிடைச்சு சேர்ந்துட்டேன். தங்கச்சியை மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா அனுப்பினேன்.

'கல்யாணமே வேணாம்... தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சுட்டு, அம்மாவுக்கு துணையா இருந்துடலாம்’னு நினைச்சேன். அம்மாவும், தங்கச்சியும்தான் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்திட்டே இருந்தாங்க. என்னுடைய மாமனார் முதல் முறை எங்கிட்ட போன்ல பேசும்போது, 'என் பையனுக்கு அம்மா இல்ல... உங்கம்மாவை அவனோட அம்மாவா பார்த்துப்பான்’னு சொன்னதுக்காகவே, அவரோட போட்டோவைக்கூட பார்க்காம, கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டேன். வாழ்க்கையில எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட், என் கணவர்தான்'' எனும் பிரவீணா, நான்கு வயதுப் பெண் குழந்தை அவந்திகாவுக்கு அம்மா என்றால்... நம்பமுடியவில்லை.

''கம்பெனி புராஜெக்ட்டுக்காக அவர் கனடா போக வேண்டியிருந்தது. நான், இங்க வேலை பார்த்துக்கிட்டே, எம்.ஆர்க் படிச்சுட்டு இருந்தேன். என்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தனியா கிளம்பிட்டார். கோல்டு மெடலோட படிப்பை முடிச்சுட்டு, நானும் கனடா போயிட்டேன். குழந்தை பொறந்த அப்புறம், கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன். அதனால சும்மா இருக்கப் பிடிக்காம, 'ஸும்பா' (ஏரோபிக்ஸ் போல ஒரு வகை உடற்பயிற்சி) கிளாஸுக்குப் போக ஆரம்பிச்ச நான், ஒரு கட்டத்துல புரொஃபஷனல் ஸும்பா இன்ஸ்ட்ரக்டர் சர்டிஃபிகேட் வாங்கிட்டேன்.

பிசினஸ் திலகங்கள்! - 11

ஒரு கட்டத்துல சென்னைக்கே திரும்பிட்டோம். அப்பப்ப ஆர்க்கிடெக்ட் வேலை பண்ணிட்டிருந்த என்னை, 'முழு நேரமா செய்யலாம்'னு ஊக்கப்படுத்தினார் கணவர். என் பேரோட, தங்கச்சி நிஷா பேரை சேர்த்து... 'பிரனேஷ் ஆர்க்கிடெக்ட் கம்பெனி’யை ஆரம்பிச்சு, கல்லூரிகள், ஸ்டார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், ஹைடெக் போட்டோ ஸ்டூடியோ, மேரேஜ் ஹால், அபார்ட்மென்ட், பங்களானு நிறைய வேலைகள் பண்ணிட்டிருக்கேன். வாஸ்து சாஸ்திரத்திரப்படி கட்ட விரும்புறவங்களுக்கு அதையும் செய்துதர்றேன்'' என்றவரின் பட்டியல், இன்னும் நீள்கிறது.

''இயல்பிலேயே எனக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ். சொந்தக்காரப் பெண் ஒருத்தியோட திருமணத்துக்காக... புடவை, பிளவுஸ், லெஹெங்கானு ஃபுல் செட் டிசைன் பண்ணி கொடுத்தேன். அப்படியே அவளோட ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்கனு பலரும் அவங்களுக்கும் டிசைன் பண்ணித் தரச் சொன்னாங்க. டிசைனை ஸ்கெட்ச் செய்து, தேவையான கலர்ல மெட்டீரியல் வாங்கி, எம்ப்ராய்டரி வேலை செய்பவர்கள், டெய்லர்கள் இவர்களிடமெல்லாம் கொடுத்து வாங்கிடுவேன். ஃபேஷன் டிசைனும் ரொம்ப நல்லா போனதால, 'பிரனேஷ் ஆர்க்கிடெக்ட்’ கம்பெனியில ஒரு பகுதியைப் பிரிச்சு, என் குழந்தை அவந்திகா பேர்ல 'அவந்திகா டிசைன் ஸ்டூடியோ’ ஆரம்பிச்சுட்டேன். இப்போ இன்னொரு ஷோரூம் திறக்கறதுக்கு இடம் பார்த்துட்டிருக்கேன்''

பிசினஸ் திலகங்கள்! - 11

- தன் திறமையால், தன்னுடைய தொழில்களில் அதிவேகமாக வளர்ந்துவரும் பிரவீணாவின் 'பிரனேஷ்’-ல் 7 பேரும், 'அவந்திகா’வில் 13 பேரும் வேலை செய்கிறார்கள். சீக்கிரமே தன்னுடைய ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தில் ஒரு பகுதியாக, 'லாரென்ஸா இன்டீரியர் டிசைனிங்’ எனும் நிறுவனத்தை, நண்பர் மதுவுடன் இணைந்து ஆரம்பிக்கவிருகிறார் பிரவீணா. 'நானும் ஒரு பிசினஸ் பண்ணுறேன்’ என்றில்லாமல், ஒவ்வொரு பிசினஸிலும் புது யுக்திகளைக் கையாள்வதே இவரின் சிறப்பு.

''அவந்திகாவோட ஸ்பெஷல் என்னனா, ரெடிமேடா இல்லாம... கல்யாணப் பொண்ணுக்கு பிரத்யேகமா புடவை ரெடி பண்றோம். அதாவது பொண்ணோட நிறத்துக்கு ஏற்ற புடவை கலர், அவங்களோட உருவத்துக்கு ஏற்ற மெட்டீரியல், டிசைன்னு எல்லாத்தையும் முடிவு பண்ணி, ஸ்கெட்ச் முடிச்சு, தயாரிக்கிறோம். பிளவுஸ் டிசைனிங்கும் ரொம்ப யுனிக்கா இருக்கும். கஸ்டமர் கேட்டா, நாங்களே புடவையை நெய்தும் தருவோம். அதேமாதிரி, புடவையோட மெட்டீரியல் டிசைன்லயே கல்யாண வளையல்களும் தயாரிச்சுத் தர்றோம். இதுக்கு சில்க், ரா சில்க், வெல்வெட் மாதிரியான துணி வகைகள் மட்டும்தான் பயன்படுத்துவோம்'' என்ற பிரவீணா, அடுத்து சொல்லப்போகும் விஷயத்துக்கு, பெண்களிடம் வரவேற்பு நிச்சயம்.

''ஃபேஷன்ல... 'மல்ட்டி சாரி’னு ஒரு கான்செப்ட். அதாவது, ஒரு புடவையை முந்தானை தனியா, நடுப்பகுதி தனியா, உள்பக்கம் தனியானு, மூணு பகுதியா, உள்பக்கம்... வெளிப்பக்கம் வேற வேற கலர் அண்ட் டிசைன்ல ரெடி பண்ணியிருக்கேன். இதை எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி அட்டாச் பண்ணி கட்டிக்கலாம். ஒவ்வொரு முறை கட்டும்போதும், வேறவேற புடவை கட்டுற ஃபீல் இருக்கும். மூணு பகுதிகளையும் தனித்தனியா துப்பட்டா மாதிரியும் யூஸ் பண்ணிக்கலாம்'' என ஆர்வத்துடன் தான் உருவாக்கியதை விளக்கிய பிரவீணா, தொடர்ந்து,

''அதேமாதிரி, சீக்கிரமே ஆரம்பிக்க இருக்கற 'லாரென்ஸா இன்டீரியர்' நிறுவனத்தோட ஸ்பெஷல், 3டி இன்டீரியர். அதாவது உங்க வீட்டு வாட்ரோப் கதவுல, 3டி எஃபெக்ட்ல ஆளுயரத்துக்கு உங்க போட்டோ, உங்க கட்டிலோட தலைப்பகுதியில் கணவர் மற்றும் உங்களோட சின்ன வயசு முதல் இப்போ வரையுள்ள போட்டோக்கள் 3டி-யில், கிச்சன்ல உங்க பாட்டி, அம்மா எல்லாம் 3டி புகைப்படங்களில்... வீட்டுக்கே ஒரு லைவ்லினெஸ் வந்துடும்ல..!''

- படபடவென பேசி முடித்தார் பிரவீணா.

சூப்பர்ல!

சாதனைகள் தொடரும்...