Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! - 12

க்ளையன்ட்களின் வளர்ச்சி... வெற்றிக்கான எனர்ஜி!இந்துலேகா.சி

சின்னதோ... பெரியதோ... பிசினஸை ஆரம்பித்துவிட்டால் மட்டும் போதாது. நஷ்டம் இல்லாமல் லாபகரமாக நடத்துவதற்குத் தேவையான நெளிவு சுளிவுகள் அனைத்தையும் அறிந்தால்தான், வெற்றிபெற முடியும். அந்த நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுப்பதையே பிசினஸாக கையிலெடுத்து, ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய்  வருமானம் ஈட்டுகிறார், சென்னை, அசோக் நகரில் 'ஸ்மார்ட் லேப் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனத்தின் இயக்குநர்/உரிமையாளர், நளினி கிருஷ்ணமூர்த்தி.

''எல்லா பிசினஸுக்குமே முதலீடு பொதுவானதுதான். அதை எப்படி நடத்துறோம்ங்கிறதுலதான் லாபமும், நஷ்டமும் இருக்கு. இடையில மார்க்கெட்டிங்னு ஒரு முக்கியமான விஷய மும் இருக்கு. இதையெல்லாம் தேவையான இடத்தில் தேவை யான நேரத்தில் செஞ்சாலே போதும்... தொழில்ல வெற்றிதான். சொல்றதுக்கு சிம்ப்பிளா இருந்தாலும், நடைமுறைப்படுத்தறதுக்கு அதிக தெளிவும், பொறுமையும் வேணும்''

- தேர்ந்த பிசினஸ் பெண் என்பதை, பேச்சிலேயே உணர வைக்கிறார் நளினி.

''பி.காம் முடிச்சதும், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸி கோர்ஸ் படிச்சேன். உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. இப்ப கணவர்... கிருஷ்ணமூர்த்தி, மாமியார், நாத்தனார்னு புகுந்த வீட்டினரோட முழு ஆதரவாலதான் தொடர்ந்து பயணிக்க முடிஞ்சு, இந்த அளவுக்கு வந்திருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம்தான், தனியார் நிறுவனத்தில் மூணு வருஷம் இன்டஸ்ட்ரியல் டிரெயினிங் போனேன். என்னோட கேரியர் ஆரம்பிச்சது அங்கதான். அதுக்கப்புறம் வேலை விஷயமா கணவர் துபாயில் தங்கியிருந்த வருடங்கள்ல, அங்கேயே நானும் 'சீமா' (CIMA - Chartered Institute of Management Accountants) நிறுவனத்துல இன்டர் நேஷனல் அக்கவுன்டிங் கோர்ஸ் முடிச்சேன். சென்னை திரும் பினதும், ராம்கோ சிஸ்டம்ஸ், ஹெச்.சி.எல்-னு ஐ.டி. நிறுவனங்கள்ல 10 வருடங்கள் வேலை பார்த்தேன். இடையில் ரெண்டு குழந்தைகளும் பிறந்தாங்க'' எனும் நளினி, சென்ற வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் 'இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ நிறுவனத்தில் 'வுமன் ஆன்ட்ரபிரனர்ஷிப்' டிகிரி முடித்திருக்கிறார்.

பிசினஸ் திலகங்கள்! - 12

''அக்கவுன்ட்ஸ் டிகிரி, ஐ.டி. நிறுவன டெக்னாலஜிக்கல் அனுபவங்கள், ஒரு நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பது பற்றிய படிப்புனு... எல்லாமே கற்றிருந்ததால, இந்தியாவில் ஒரு தொழிலை எப்படி நடத்த ணும்ங்கிற தெளிவான பார்வை கிடைச்சுருந் தது. 'அதனால ஆடிட்டிங் மட்டுமா இல்லாம, ஒரு பிசினஸ் கன்சல்டன்ஸியை தாராளமா, தைரியமா ஆரம்பிக்கலாம். அதுக்கான தகுதி யும் திறமையும் அனுபவமும் உங்கிட்ட இருக்கு’னு ஆலோசனையும் ஊக்கமும் தந் தார் கணவர். 'ஸ்மார்ட் லேப் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’-க்கு பூஜை போட்டாச்சு!'' எனும் நளினியின் கணவர், தனியார் நிறுவனத் தின் நிதிப்பிரிவில் வைஸ் பிரசிடென்ட்.

''ஆரம்பத்தில் என் நிறுவனத்தை நாடி வந்த சில க்ளையன்ட்களோட தொழில் பிரச்னைகளை, சரியா புரிஞ்சுக்கிட்டு, வழிநடத்தினேன். அவங்களோட லாபம் ஏறுமுகமா திரும்ப, சந்தோஷமா நாலு பேருக்கு என் நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. பிசினஸ் சூடுபிடிக்க ஆரம்பிச்சுது. ஏற்கெனவே தொழில் நடத்தறவங்க மட்டுமில்லாம, புதுசா தொழில் தொடங்க இருந்தவங்களும் ஆலோசனைக்காக வந்தாங்க. இதை 'ஸ்டார்ட் அப் கன்சல்டிங்’னு சொல்லுவோம். அவங்க ஆரம்பிக்கப் போகும் தொழிலுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் முதல், தயாரிக்கப்போற பொருட்களுக்கு எங்க எல்லாம் தேவை அதிகமா இருக்கும், எப்படியெல்லாம் விற்பனை பண்ணலாம்னு எல்லா விஷயங்கள்லயும் பயிற்சி கொடுப்போம். அவங்களே தனிச்சு முடிவெடுக்கிற தெளிவு வர்ற வரைக்கும் வழிகாட்டுவோம். இறுதியா, 'ஆல் த பெஸ்ட்’ சொல்லி அனுப்புவோம்!'' என்ற நளினி, தான் வழிகாட்டிய ஒரு நிறுவனத்துடனான அனுபவம் பகிர்ந்தார்...

''பிரபல டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் என் நிறுவனத்துக்கு வந்தாங்க. பொருட்களை உற்பத்தி பண்ணாம, இறக்குமதி மட்டும் செய்து விற்பனை செய்றவங்க. அவங்ககிட்ட பேசுனதுல இருந்து, அவங்களோட பிரச்னையே, கம்பெனி ஸ்டாக் மற்றும் லாபம் என்னன்னு சரியா தெரிஞ்சுக்காம இருக்கிறதுதான்னு புரிஞ்சுக்கிட்டேன். தேவையைவிட அதிகமான சரக்கை இறக்குமதி பண்ணினதால காசு முடங்கறது, தேவை இருக்கும் சமயத்துல ஸ்டாக் குறைச்சலா இருக்கிறது, ஒரு கட்டத்துல லாபம் எவ்வளவு வருது, சொல்லப்போனா லாபம் வருதான்னே தெரியலைனு குழப்பத்தோட வந்தாங்க.

பிசினஸ் திலகங்கள்! - 12

என்னோட டீம் உதவியுடன், அவங்களோட விற்பனைப் பொருட்களுக்கு எந்த சீஸன்ல தேவை அதிகமா இருக்குனு நேரடி சர்வே, ஆன்லைன் சர்வே, சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் கஸ்டமர்களிடம் புராடெக்ட் பத்தின ஃபீட் பேக்னு இப்படி பல விதங்களில் ஆராய்ந்தேன். இன்னொரு பக்கம், நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்தேன். நிர்வாகிகள் மூணு பேர் மட்டும், குறைவான வேலை ஆட்களை வைத்து தொடங்கின தொழில் அது. அதனால அவங்களே அதோட கணக்கு வழக்குகளை, அதுவும் முறையா இல்லாம, மனக்கணக்கு போட்டு நடத்தி இருக்காங்க.  

தொழில் வளர வளர, வேலை ஆட்களும் கூடுதல் ஆகியிருக்காங்க. ஆனாலும், மனக்கணக்கிலேயே தொழிலை நடத்த, அக்கவுன்ட்ஸில் சிக்கல். ஒவ்வொரு மாதமும் அக்கவுன்ட்டை சரிபார்க்காம, தள்ளிப்போட்டு, அந்தக் குளறுபடிகளால் தொழிலாளர்களுக்கு சம்பளம்கூட சரிவர தரமுடியாத நிலமையில இருந்தாங்க. ஒரு க்ளையன்ட்டுக்கு கடனுக்கு ஸ்டாக்கை லோடு ஏத்தி அனுப்பி இருக்காங்க. ஆனா, அதுக்கான தொகையை வசூலிக்கல, கணக்குலயும் வரல. இதுமாதிரியான பல கவனக் குறைவுகளால கண்ணுக்குத் தெரியாம நிறைய நஷ்டப்பட்டிருந்தாங்க'' எனும் நளினி, வரவு - செலவு பார்ப்பதில் இருந்து மார்க்கெட்டிங் வரை பல விஷயங்களையும் அவர்களுக்குக் கற்றுத் தந்து, தொழிலை நேர்செய்து தந்திருக்கிறார்.

''திறமையான உழைப்பாளிகளா இருந்தும், டெக்னாலஜிக்கலா பின்தங்கி இருக்கிறதால பலரும் தடுமாறுறவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு எல்லாம் எளிமையான முறையில் 'டேலி' (tally) மூலமா அக்கவுன்ட்ஸ் பார்ப்பது, எங்க இருந்தாலும் அவங்களோட தொழில் பத்தின அப்டேட்களை, செல்போன்லயே அக்சஸ் பண்ணிப் பார்க்கிறது மாதிரியான நவீன சாஃப்ட்வேர்கள், ஆப்ஸ் மாதிரியான விஷயங்களை கற்றுக் கொடுப்பேன். கோடிக்கணக்குல டர்ன் ஓவர் எடுத்தாலும், அவங்க எல்லாம் எந்த ஈகோவும் இல்லாம இதையெல்லாம் எங்கிட்ட சின்ஸியரா கத்துக்கிட்டு, தவறாம பின்பற்றி, ரெண்டு பிசினஸ் பண்ணிட்டிருந்தவங்க, இப்போ நாலு பிசினஸுக்கு முதலாளியா வளர்ந்து நிக்கிறாங்க. இப்படி என் க்ளையன்ட்களோட வளர்ச்சிதான்... என் வெற்றிக்கான எனர்ஜி டானிக்!''

- நளினியின் வார்த்தைகளில் பொறுப்பும் பூரிப்பும்!

சாதனைகள் தொடரும்...