Published:Updated:

 பிசினஸ்  திலகங்கள்!  - 13

ஆர்வம் இருந்தால் அனைத்தும் வசப்படும்!   'பர்சனலைஸ்டு’ கார்டுகளில் அசத்தும் வசுமதி  கட்டுரை, படங்கள்: இந்துலேகா.சி

னைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பது போல ஒரு செயலைச் செய்ய, அதிகம் மெனக்கெட வேண்டும். ஆனால், பல தொழில்களை சர்வசாதாரணமாக செய்துகொண்டிருக்கும் வசுமதி ரமேஷ், ஒவ்வொரு தொழிலையும் வித்தியாசமாக, தனித்துவமாக செய்கிறார் என்பதுதான் சிறப்பு!

சென்னையில் 'விருக்ஷா’ எனும் பெயரில் திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு பிரத்யேக பத்திரிகைகள் தயார் செய்துகொடுப்பது, ஜன்னல், கதவுக்கான திரைச்சீலைகளில் (ப்ளைண்ட்ஸ்) புதுமையைப் புகுத்தி அசத்துவது, மரப்பலகை, கண்ணாடிகளில் விருப்பமான உருவங்களையும் எழுத்துக்களையும் பொறித்துத் தருவது என்று கலக்கிக்கொண்டிருக்கும் வசுமதி, இதோ உங்களிடம் பேசுகிறார்...

''சின்ன வயதிலிருந்தே ஓவியங்கள் வரையறதுல எனக்கு விருப்பம். குறிப்பா, சில்பி சாரோட படங்களைப் பார்த்து, நானே வரைய முயற்சி பண்ணுவேன். முறையா ஓவிய வகுப்புகள் எதுக்கும் போனதில்ல. மவுன்ட் ரோடு, எல்.ஐ.சி கட்டடத்துல இருக்கற பெருமாள்செட்டி ஸ்டேஷனரி கடையில, சுவர் அளவுக்கு பெரிய சைஸ் பேப்பர் எல்லாம் கிடைக்கும். பத்தாவது படிக்குறப்ப அதை வாங்கிட்டு வந்து, வீட்டுக் கூடத்துல விரிச்சு, பெயின்ட்டிங் பண்ணி, சுவரில் ஒட்டுவேன். அப்பா, கொஞ்சம்கூட கோவிச்சுக்காம.... பாராட்டி உற்சாகப்படுத்துவார். காலேஜ் நாட்கள்ல கல்ச்சுரல் நாடகங்கள்ல கலக்கினேன். கவிதைகள் எழுதுறதுலயும் ரொம்ப ஆர்வம்... இப்படி பல விஷயங்கள் மூலமா, ஒரு கிரியேட்டர்னு நான் வளர்ந்தேன்’'

- நினைவலைகளில் மூழ்கிக்கொண்டே பேசும் வசுமதி, சென்னை, எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ., வரலாறு பாடத்தில் 'யுனிவர்சிட்டி ரேங்க்' பெற்றவர்!

 பிசினஸ்  திலகங்கள்!  - 13

''படிப்பு முடிஞ்சதும், கல்யாணமும் முடிஞ்சுது. கணவர், குழந்தைனு காட்பாடியில் செட்டில் ஆனேன். பையன் வளர்ந்துட்ட நிலையில... 'உன் கிரியேட்டிவிட்டியை வீணாக்காதே’னு கணவர் ரமேஷ்கண்ணா சொல்ல, நிதானமா யோசிச்சு ஸ்கிரீன் பிரின்ட்டிங் வகுப்புக்குப் போனேன். அதுக்கு முன்னயே எனக்கான வாடிக்கையாளர்கள் ரெடியா இருந்தாங்க. ஆமா... என் கணவர் வேலை செய்யும் நிறுவன தயாரிப்புக்கு, ஸ்கிரீன் பிரின்ட்டிங் தேவைப்பட்டது. அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாதுனு, கம்ப்யூட்டர், பிரின்டர் வெச்சு, வீட்லயே சின்ன அளவில் தொழில்ல இறங்கிட்டேன்.

 பிசினஸ்  திலகங்கள்!  - 13

ஸ்கிரீன் பிரின்ட் பண்றதுக்கு முன்ன, அதுக்கான டிசைனிங் பண்ணணும். டிசைனிங் உள்ளிட்ட அடிப்படை வேலைகளைஎல்லாம் வெளியில கொடுத்து வாங்கிட்டிருந்தேன். ஆர்டர்கள் அதிகரிக்கவும், நானே செய்ய முடிவெடுத்தேன். அதுக்காக, கோரல்ட்ரா, போட்டோ ஷாப் மாதிரியான சாஃப்ட்வேர் பயிற்சி எடுத்துக்கிட்டேன் ஒரு கட்டத்தில், கணவரும் தன்னோட வேலையை விட்டுட்டு, இந்தத் தொழிலில்ல இறங்குற அளவுக்கு என் தொழில் வளர்ந்துச்சு'' எனும் வசுமதி, தாமதிக்காமல் அடுத்தத் தொழிலிலும் கால் பதித்ததுதான்... துணிச்சல்!

''அடுத்து, 'கஸ்டமைஸ்டு இன்விடேஷன்’கள் டிசைன் பண்ணலாம்னு ஐடியா வந்துச்சு. வழக்கமா கிடைக்கற ரெடிமேடு பத்திரிகைகளா இல்லாம, வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமா வடிவமைச்சு தர்ற பத்திரிகைதான் இது. உதாரணமா, திருமணத்துக்கான பத்திரிகைனா, அது காதல் திருமணமா, பெற்றோர் நிச்சயித்த திருமணமா, ரெண்டு குடும்பங்களோட விவரங்கள் என்ன, எந்த முறையில் கல்யாணம், வாழ்த்த விரும்பும் வார்த்தைகள் என்னனு தெரிஞ்சு கிட்டு வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமா பத்திரிகை டிசைன் செய்வோம். இதை, 'கஸ்டமைஸ்டு' அல்லது 'பர்சனலைஸ்டு கார்ட்ஸ்'னு இங்கிலீஷ்ல சொல்வோம்''

- தன் தொழிலை இப்படி விவரிக்கும் வசுமதி, தனித்துவமான பரிசுகளையும் வடிவமைத்துத் தருவதில் ஸ்பெஷலிஸ்ட்!

''மணமக்கள், பிறந்தநாள், மணநாள்னு எதுக்கு பரிசு கொடுக்கறதா இருந்தாலும், புகைப்படங்களை ஸ்பெஷல் மெசெஜ் அல்லது வாழ்த்துகளோடு 3டி முறையில கண்ணாடி, மரப்பலகையில் பதிச்சு தருவோம். திரைச்சீலைகள்லயும் போட்டோக்களை பிரின்ட் செய்து தர்றோம். மணமக்களோட ஆளுயர போட்டோக்களை பிரின்ட் செய்த திரைச்சீலைகளை, அவங்க புது வாழ்க்கையை தொடங்கப்போற வீட்டில் மாட்டினா எப்படி இருக்கும்! 'ப்ளைண்ட்ஸ்'னு சொல்லப்படுற இந்த திரைச்சீலை, பிளாஸ்டிக் ஷீட் கொண்டுதான் தயாரிக்கப்படுது. பிளாஸ்டிக் உபயோகிக்கிறதுல உடன்பாடில்லாத நான், ஐந்து வருட முயற்சியில் குறிப்பிட்ட துணிவகைகள்ல இதை தயாரிக்கிற வித்தையை கண்டுபிடிச்சிருக்கேன்!'' என்று அடுக்கி அசத்திய வசுமதி,

''என்னுடைய எல்லா பிசினஸ்களிலும் வாடிக்கையாளர்களின் திருப்தியே, எனக்கான விளம்பரமா மாறி, புதுப்புது வாடிக்கையாளர்களை வரவழைக்குது!'' என்று பெருமிதத்துடன் முடித்தார்!

வசுமதி தந்த க்யூட் அண்ட் குட்டி பிசினஸ் டிப்ஸ்!

தொழில் தொடங்க முடிவுசெய்துவிட்டால், எந்தத் தொழிலில் அதிக வருமானம் என்று பார்க்காமல், எந்தத் தொழிலை முழு ஆர்வத்தோடும், மனதுக்குப் பிடித்தும் செய்வோம் என்பதை மனதில் கொண்டு தேர்ந்தெடுங்கள். பிடித்த தொழிலை செய்யும்போதுதான், கடின உழைப்பைக் கொடுக்க முடியும்.

வாடிக்கையாளர்களிடம் நட்புடன் பழகுவது, தொழில் மேம்பட வழிவகுக்கும்.

தொழில் தொடங்கியவுடனேயே அதிக லாபம் எடுக்க ஆசைப்பட்டால், அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது.

நஷ்டம் ஏற்பட்டால், உடனே முடங்கிவிடாமல், எங்கே தவறு என்று கண்டறிந்து, களைய வேண்டும். கவனமாக அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேற முயற்சி செய்ய வேண்டும். இப்படிப்பட்ட அனுபவங்கள் மூலம் வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்று, தேர்ந்த தொழிலதிபராக முடியும்.