Published:Updated:

பிசினஸ்  திலகங்கள்! - 14

பியூட்டி பார்லர் பிசினஸ்... பிரமாத ஃபாத்திமா!கட்டுரை, படம்: இந்துலேகா.சி

'அழகு நிலையம் போவது தவறு' என்கிற கண்ணோட்டம் இன்னும் முழுமையாக மாறியபாடில்லை. இத்தகைய சமூகத்தில், சென்னை மற்றும் சிங்கப்பூர் என இரண்டு இடங்களில் பியூட்டி பார்லர் உரிமையாளராக, சவால் விட்டு சாதித்துக்கொண்டிருக்கிறார், ஃபாத்திமா. ஃபிளைட்டில் பறந்து பறந்து பிசினஸ் பார்த்துக்கொண்டிருப்பவரை, ரிலாக்ஸ் தருணமொன்றில் சந்தித்தோம்.

''நான் மதுரைக்காரப் பொண்ணு. சின்ன வயசுல இருந்தே பெருசா சாதிக்க ஆசை. ஆனா, ஸ்கூல் படிப்பை முடிச்சதுமே கல்யாணப் பேச்சை எடுத்தாங்க. அப்பாகிட்ட கெஞ்சி, போராடி காலேஜ்ல படிக்க அனுமதி வாங்கினேன். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கிடைக்காதுனு சொல்ற மாதிரி, அப்பாவே ஒப்புக்கிட்டாலும் சொந்தக்காரங்க விடல. 'எதுக்கு இப்போ காலேஜுக்கு எல்லாம் அனுப்பிச்சுகிட்டு?’னு தொல்லை கொடுத்தவங்க, ஒரு கட்டத்துல நான் விடாப்பிடியா காலேஜ் சேர்ந்ததும், 'இவ எப்படி படிச்சு முடிக்கப் போறானு பார்க்கலாம்’னு எம்மேல பயங்கர கோபத்துல, கெட்டது நடக்கக் காத்திருந்தாங்க!'' என்று சிரிக்கும் ஃபாத்திமா, இளநிலை பட்டப் படிப்பு மட்டுமல்லாமல், எம்.பி.ஏ-வும் முடித்துக் காட்டியிருக்கிறார்.

''படிப்பை முடிச்சதும் ஐ.டி துறையில வேலை. ஆனா, அங்க சில ஆண் பணியாளர்களின் அணுகுமுறைகள் எனக்குப் பிடிக்கல. அதனால வேலையை விட்டுட்டேன். ஆண்களே இல்லாத ஒரு துறை என்னன்னு யோசிச்சப்போதான், பியூட்டி பார்லர் ஐடியா வந்துச்சு. பியூட்டி கோர்ஸ் படிக்கிறேன்னு பேச்செடுத்ததும், மறுபடியும் வீட்டுல எதிர்ப்பு. எல்லாருக்கும் பொறுமையா விளக்கம் கொடுத்தேன். அதோட, என்மேல இருந்த நம்பிக்கை, பாசம் இதெல்லாம் அப்பாவை சம்மதிக்க வெச்சுது''

பிசினஸ்  திலகங்கள்! - 14

- தன் வெற்றிக்கான முதல் புள்ளி வைக்க போராட்டம் நடத்தியவர், தொடர்ந்தார்...

''சிங்கப்பூர்ல இருக்கிற என் அக்கா, 'இங்க இன்டர்நேஷனல் பியூட்டி தெரபி படிப்பு இருக்கு... வந்து படி’னு கூப்பிட்டா. நானும் கிளம்பிட்டேன். அங்க ஹேர் டிரெஸ்ஸிங், ஸ்கின் கேர், மேக்கப்னு ஒவ்வொரு பிரிவையும் விரிவா, முழுமையா படிச்சேன். அப்புறம் அங்கேயே ஒரு பார்லர்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் அங்கேயே 'மியா பியூட்டி சலூன்’ங்கிற பேர்ல, என்னோட முதல் பியூட்டி சலூனை ஆரம்பிச்சேன்!  

சிங்கப்பூர்ல பார்லருக்கு வரும் கஸ்டமர்கள், 'எங்க படிச்சீங்க?’, 'என்ன கோர்ஸ் எல்லாம் படிச்சீங்க?’, 'எத்தனை வருஷம் அனுபவம்?’னு இந்த விவரங்களை எல்லாம் கேட்டுப்பாங்க. எனக்கு இந்த சர்வீஸ் வேணும்னு வர்றவங்களுக்கு, அதுக்காக நாம பயன்படுத்துற புராடக்ட், கிரீம் எல்லாத்தையும் அவங்ககிட்ட காட்டணும். அதேமாதிரி பார்லர் ஆரம்பிக்கணும்னா, பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் லைசென்ஸ் கிடைக்கும். அதனால, அங்க எல்லாமே தரமான பியூட்டி பார்லர்களா இருக்கும்.

நம்ம ஊர்ல இப்படி இல்ல. ஒரு பத்து நாள் கோர்ஸ் போயிட்டு, சமயங்கள்ல அதுவும் போகாம அனுபவத்தின் அடிப்படையில்கூட யாரும், எங்கேயும் ஒரு பியூட்டி பார்லரை ஆரம்பிச்சுடலாம். என்ன புராடக்ட் பயன்படுத்துறாங்கனு வெளிப்படையா சொல்ல மாட்டாங்க. அதனாலதான் இங்க பல பார்லர்களில் தவறான சர்வீஸ் கொடுத்து, இருக்கிற அழகும் பறிபோன சம்பவங்கள் எல்லாம் நடக்குது. நீங்களே கவனிச்சிருப்பீங்க... ஆசைப்பட்டுதான் பார்லருக்கு வந்திருப்பாங்க, ஆனா, ஏதோ மர்மப் படம் பார்க்கப் போற ஃபீல் அவங்க முகத்துல இருக்கும்.

அதனால, என்னோட பார்லருக்கு வர்ற கஸ்டமர்கள்கிட்ட முதல்ல நான் கவுன்சலிங் கொடுக்குற மாதிரி நல்லா பேசுவேன். அப்புறம்தான் அவங்க பிரச்னை, அதுக்கான தீர்வு இதையெல்லாம் பேசி, அவங்களுக்கு நம்பிக்கை இருந்தா மட்டும் ட்ரீட்மென்ட் கொடுப்பேன். அதுக்கான காஸ்மெடிக் புராடக்ட்களை அவங்க முன்னாடியே வெளிப்படையா பயன்படுத்துவேன். அவங்க எல்லோரும் என் ரெகுலர் கஸ்டமர்ஸ் ஆகிடுவாங்க!''

- அனுபவ டிப்ஸ் தரும் ஃபாத்திமா, இடையில் திருமதி ஃபாத்திமா ஆகியிருக்கிறார். இப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

''சொந்த ஊரு மதுரைதானே, எதனால சென்னையில பார்லர் ஆரம்பிச்சீங்க?'' என்ற நம் கேள்வியைத் தொடர்ந்து,

''இந்த பிசினஸுக்கு இதுதான் சரியான இடம். மதுரையோட ஒப்பிடும்போது, வேலைக்குப் போறவங்களோட எண்ணிக்கை சென்னையில் அதிகம். கூடவே, பியூட்டி சலூனுக்குப் போக எந்தத் தயக்கமும் வேண்டாம் என்ற விழிப்பு உணர்வும் இங்கதான் இருக்கு'' என்றவர்,

''இஸ்லாம் சமூகப் பொண்ணு பிசினஸில் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதில் எல்லா பாராட்டையும் நானே எடுத்துக்க முடியாது. என்னோட வெற்றியில் ரெண்டு ஆண்களுக்கும் பங்குண்டு... எங்கப்பாவும், என் கணவரும்! எங்க சுற்றத்துக்கு நான் பேசுபொருள் ஆகிடக் கூடாதுங்கிற இவங்களோட எண்ணத்தைக் கட்டுப்பாடுனு சொன்னா... நான் முட்டாள், அது முழுமையான அக்கறை! இப்போ என் தொழில்ல நான் நேர்மையான வெற்றியாளராகி நிற்கும்போது, என்னைவிட இவங்க ரெண்டு பேருக்கும்தான் அதிக பெருமையும் சந்தோஷமும்!'' என்று நெகிழ்ந்த ஃபாத்திமா,

''பெண்களைப் பொறுத்தவரை, நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோட, நமக்கான உரிமையைத் தேங்கவிடாமல், சரியான நேரத்தில் சரியான விதத்தில் கேட்டு வாங்கினாலே போதும்... எந்தத் துறையிலும் சவால் விட்டு ஜெயிக்கலாம்!''

- கம்பீரமாகச் சொல்கிறார் இந்த சவால் ராணி!

பியூட்டி பார்லர் ஆரம்பிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபாத்திமா தரும் டிப்ஸ்!

• பியூட்டி கோர்ஸ் படித்து முடித்த உடனேயே சொந்தமாக பார்லர் தொடங்காமல், வேறு ஒரு பார்லரில் குறைந்தது இரண்டு வருடங்களாவது அனுபவப் பாடங்கள் கற்பது நல்லது.

•  பார்லர் ஆரம்பிக்கும் முன் அந்த இடத்துக்கு அருகில் ஏற்கெனவே பார்லர்கள் இருக்கின்றனவா, அந்த இடம் பெண்கள் தயக்கமில்லாமலும், பாதுகாப்பாகவும் வந்து போக ஏற்றதுதானா என... அந்த ஏரியா குறித்த தகவல்களை விசாரித்து, பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.

•  பியூட்டி சலூன் நடத்துவதற்குத் தேவையான முதல் தகுதி, சுத்தமாக இருப்பதும், சலூனை சுத்தமாக வைத்துக் கொள்வதும்தான்.

•  பொதுவாக இதுபோன்ற சேவை தொடர்பான தொழில் செய்யும்போது, வாடிக்கையாளர்களின் திருப்தியே முதல் படி.

•  நீங்கள் மட்டும் இல்லாமல் உங்கள் பார்லரில் வேலை செய்யும் நபரும் தொழில் அனுபவத்துடனும், இன்முகத்துடன் பணிபுரிவது மிக அவசியம்.

•  நீங்கள் உபயோகிக்கும் பொருளுக்கான விலை, உங்கள் சேவை... இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு சர்வீஸுக்குமான விலையை நிர்ணயுங்கள். அதிக லாப ஆசையில் விலையை ஃபிக்ஸ் செய்தால், வாடிக்கையாளரின் முகச்சுளிப்புக்கு ஆளாவதுடன், சமயங்களில் நஷ்டமடையவும் வாய்ப்புள்ளது.