Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! - 15

அத்தனையும் கலை... அள்ளலாம் நல்ல விலை!கிளாஸ் பெயின்ட்டிங், ஜுவல்லரி மேக்கிங், ஜூட் பேக், ஃபேஷன் டிசைனிங்...இந்துலேகா.சி,  படங்கள்: நரேன் வள்ளுவன்

மக்குப் பிடித்த தொழிலில், நமக்கான இலக்கை நோக்கி நம்பிக்கையுடனும், தீவிரத்துடனும், விடாமுயற்சியுடனும் பயணம் செய்தாலே போதும், வெற்றியடையலாம் என்பதற்கு சென்னையில் உள்ள 'ஸ்மார்ட் ஸ்கில்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் மீனா, சிறந்த உதாரணம்.  

பிசினஸ் திலகங்கள்! - 15

''ஹையர் செகண்டரி படிக்கும்போது, லீவுல சும்மா இருக்கப் பிடிக்காம கிளாஸ் பெயின்ட்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். எத்திராஜ் காலேஜ்ல படிச்ச சமயத்துல, சென்னையில எங்கே கிராஃப்ட் வொர்க்ஷாப், கண்காட்சி நடந்தாலும் விசிட் அடிச்சுடுவேன். பார்த்த விஷயங்களோட, என்னோட கிரியேட்டிவிட்டியையும் சேர்த்து, அழகழகான கிராஃப்ட் அயிட்டங்கள் செய்றதோட... சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க வீட்டு விசேஷங்களுக்கு கிஃப்ட்டா கொடுத்துடுவேன். நிறைய பாராட்டுகள் கிடைச்சுது.

காலேஜ் முடிச்சதும் கல்யாணம். சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருந்த கணவர் ஷிவாகூட அமெரிக்கா போயிட்டேன். அங்ககூட சும்மா இருக்க முடியல. அங்க 'இண்டியன் பஜார்'ல நம்ம ஊரு அயிட்டங்கள் எல்லாம் கிடைக்கும். அதுல ஒரு நோட்டீஸ் போர்டுல நாம செய்யுற பிசினஸ் பத்தின விவரங்களைத் தெரிவிக்கலாம். 'மெஹந்தி போடப்படும்’னு சொல்லி என் நம்பரை அதுல எழுதி வெச்சுட்டு வந்தேன். நான் அங்க இருந்த ஒரு வருஷத்துல... மெஹந்தி போட்டுக்க மட்டும் இல்லாம, கத்துக்கவும் எங்க வீட்டுக்கு வந்துட்டே இருந்துச்சு கூட்டம்!''

- தான் கற்றுக்கொண்ட விஷயத்தை, அடுத்த லெவலுக்கு கொண்டுசேர்க்கும் எண்ணத்தை செயல்படுத்திய ஷிவ் மீனா, சென்னை திரும்பி, ஜுவல்லரி மேக்கிங் பயிற்சி முடித்து, அதையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

பிசினஸ் திலகங்கள்! - 15

''சித்தி பொண்ணோட கல்யாணத்தில், அவளோட முகூர்த்தப் புடவைக்கு மேட்சா நெத்திச்சுட்டி முதல் கொலுசு வரை எல்லா நகைகளையும் நான்தான் செஞ்சு கொடுத்தேன். அவளோட கல்யாணத்துக்கு வந்திருந்த என்னோட அங்கிள் ஒருத்தர், 'நீ ஏன் ஏதாச்சும் பிசினஸ் ஆரம்பிக்கக் கூடாது?’னு கேட்டார். அடுத்ததா நான் செய்த வேலை, 'ஆர்ட் அண்ட் கிராஃப்ட் பயிற்சி வகுப்பு’னு பேனர் அடிச்சு வீட்டு கேட்ல மாட்டினதுதான். ஸ்டூடென்ஸ் நிறைய வர ஆரம்பிச்சதும், வீட்டுக்குக் கீழயே வாடகைக்கு இடம்பிடிச்சு, 'ஸ்மார்ட் ஸ்கில்ஸ்’ இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சேன். கிளாஸ் பெயின்ட்டிங், ஜுவல்லரி மேக்கிங், ஜூட் பேக், பியூட்டிஷியன் கோர்ஸ் இப்படி மொத்தம் 20 வகையான கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். அப்போ ஒரு தையல் டீச்சர், 'எங்கிட்ட நீ டெய்லரிங் கத்துக்கிட்டு, உன்னோட இன்ஸ்டிடியூட்ல அதையும் சொல்லிக் கொடுக்கலாமே'னு சொன்னாங்க. 'இதை எதுக்கு விட்டு வைக்கணும்'னு அதையும் பிடிச்சுட்டேன்'' என வியக்க வைத்த ஷிவ் மீனா,

பிசினஸ் திலகங்கள்! - 15

''தையல் வகுப்புகள் ஆரம்பிச்சதோட, டிரெயினிங்குக்கு வந்த பெண்களுக்கு, ஆர்டர்கள் வாங்கிக் கொடுத்தும் தைக்க வெச்சோம். பெண்கள் முன்னேற்றத்துக்கான வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளை நடத்திட்டு இருக்கு நம்ம அரசு. இந்த வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவே, எங்க நிறுவனம் மூலமா தையல் கலையை சொல்லித் தர்றோம். எல்லாருக்கும் ஒரே இடத்துல சொல்லித் தர்ற அளவுக்கு இடம் இல்லைங்கறதால, குறிப்பிட்ட ஏரியாக்கள்ல கிளைகளை ஆரம்பிச்சேன். மாம்பலம், விருகம்பாக்கம், அண்ணாநகர், அசோக் நகர்னு பல ஏரியாக்களில் கிளைகள், ஃபிரான்ச்சைஸ்னு ஏழு இடங்கள்ல இப்ப எங்க நிறுவனம் வெற்றிகரமா இயங்குது!'' என பூரிப்புடன் சொல்லும் ஷிவ் மீனா, இப்போது ஃபேஷன் டிசைனிங் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

''கிளாஸ் பெயின்ட்டிங் கத்துக்கிறவங்க, தனியா பிசினஸ் ஆரம்பிக்க லோன் வாங்க வழிகாட்டறோம். எங்க நிறுவனத்து பேர்ல ஃபிரான்ச்சைஸ் ஆரம்பிக்க ஆசைப்பட்டா லோன் வாங்கித் தர்றோம். வகுப்புகள் மட்டும் இல்லாம மார்க்கெட்டிங்கும் செய்றோம். துணி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்தமா தைச்சுக் கொடுப்பது, ஜூட் பை ஆர்டர் எடுத்து தைச்சுக் கொடுப்பதுனு ஆர்டர்கள் எடுத்து, எங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிட்ட பெண்களுக்கு பீஸ் ரேட்டுல, ஜாப் வொர்க் கொடுக்கிறோம். சின்னச் சின்ன ஆர்டர்களா இருந்தா... நேரடியா இந்தப் பெண்கள்கிட்டயே கொடுத்துடறோம்'' என்று பேசிக்கொண்டே செல்லும் ஷிவ் மீனா,

''பெண்கள் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சா, 'இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?'னு பாக்கறவங்கதான் இங்க அதிகம். இதுக்கு மத்தியில, என்னோட குடும்பம்தான் என்னோட பலம். குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாம இவ்வளவு சீக்கிரம் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியாது!'' என குடும்பத்துக்கு கிரீடம் சூட்டுகிறார்!

சாதனைகள் தொடரும்...