Published:Updated:

கண் தெரியாது என்றாலும் வெற்றிகரமாக கடை நடத்தும் தன்னம்பிக்கை மனிதர்!

சந்திரசேகர்
News
சந்திரசேகர் ( க.கோகுல் )

1971-ம் ஆண்டு முதல் சேகர் புக் ஸ்டால் என்ற பெயரில் அரசுப் பாடநூல், உரைநூல் உள்ளிட்ட பள்ளி, அலுவலகப் பொருள்களான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம் போன்றவற்றை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இன்னைக்கி வரை விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன்.

Published:Updated:

கண் தெரியாது என்றாலும் வெற்றிகரமாக கடை நடத்தும் தன்னம்பிக்கை மனிதர்!

1971-ம் ஆண்டு முதல் சேகர் புக் ஸ்டால் என்ற பெயரில் அரசுப் பாடநூல், உரைநூல் உள்ளிட்ட பள்ளி, அலுவலகப் பொருள்களான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம் போன்றவற்றை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இன்னைக்கி வரை விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன்.

சந்திரசேகர்
News
சந்திரசேகர் ( க.கோகுல் )

பார்வை இல்லை; வயது வேறு ஆகிவிட்டது என்றெல்லாம் நினைத்து வீட்டில் முடங்கிக் கிடக்காமல் சொந்தமாக ஒரு புக் ஸ்டாலை நடத்தி அதில் இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்த 70 வயதான சந்திரசேகர். வண்டிமேட்டுத் தெருவில் அவர் நடத்திவரும் புக் ஸ்டாலில் ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம். பில் கணக்கு விவரங்களைத் தன் உதவியாளரிடம் பிசியாக கேட்டுக் கொண்டிருந்தவர் தன்னம்பிக்கை மிகுந்த தனது கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

சந்திரசேகரின் புத்தகக் கடை
சந்திரசேகரின் புத்தகக் கடை
க.கோகுல்

``என்னோட பெயர் ஜி.சந்திரசேகர். 7 வயசு வரை எனக்கு கண் பார்வை கொஞ்சமாகத்தான் இருந்தது. புத்தகத்தைக் கண்கிட்ட வைத்துப் பார்த்துதான் படிக்க முடியும். இதே வயசுலயே எனக்கு இடது கண் ஆபரேஷன் செஞ்சதனால அந்தக் கண் பார்வை திறன் முற்றிலுமா நான் இழந்துட்டேன். அதுக்குப் பிறகு வலது கண்ணுல கொஞ்சம் பார்வை திறன் இருந்ததால, லேசா பார்க்க முடியும். ஆனா, எழுத்துகளைத் தெளிவா படிக்க முடியாது. மத்தவங்க உதவியோடத்தான் 1968-ம் ஆண்டு 11-ம் வகுப்பு வரை படிச்சேன்.

1971-ம் ஆண்டு முதல் சேகர் புக் ஸ்டால் என்ற பெயரில் அரசுப் பாடநூல், உரைநூல் உள்ளிட்ட பள்ளி, அலுவலகப் பொருள்களான பேனா, பென்சில், நோட்டு புத்தகம் போன்றவற்றை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இன்னைக்கி வரை விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன்.

எனக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே புத்தகங்கள் விற்பதிலும் மக்கள் உபயோகப்படுத்துற எல்லா பொருள்களை வாங்கிக் கொடுப்பதிலும், அவற்றை நியாயமான விலையில் விற்பதிலும் நிறைய ஆர்வம் உண்டு. இந்த ஆர்வத்தால கண் பார்வை இல்லை என்ற குறையே எனக்கு ஏற்பட்டதில்ல.

என் முன்னால் உள்ள பொருள்களைத் தொட்டு பார்த்து கரெக்டா சொல்லிடுவேன். பணத்தைத் தொட்டு பார்த்து எவ்வளவு ரூபாய் நோட்டுன்னு என்னால சொல்லிட முடியும். கோடு போட்ட ரூல்டு நோட்டு எது, கோடு போடாத நோட்டு எது, 100 பக்க நோட்டு எது, 200 பக்க நோட்டு எதுன்னு நோட்டை தொட்டுப் பார்த்தே சொல்லிடுவேன். பில் போடுவதற்கு கால்குலேட்டரில் கூட்டுவதற்கு முன்பாகவே என்னால் கூட்டுத்தொகை சொல்ல முடியும்.

சந்திரசேகர் நடத்தும் புத்தகக் கடை
சந்திரசேகர் நடத்தும் புத்தகக் கடை
க.கோகுல்

கடைக்குத் தேவையான பொருகள் வாங்க ஆரம்ப காலத்தில் ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு சென்னைக்கு போய் வாங்கிட்டு இருந்தேன். ஆனால், இப்போது போன் மூலம் ஆர்டர் கொடுத்தாலே போதும்; எனக்குத் தேவையான பொருள்கள் எல்லாத்தையும் கடைக்கே கொண்டுவந்து தந்துடுறாங்க. அந்த அளவுக்கு சப்ளையர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.

கடந்த சில ஆ‌ண்டுகளா இரண்டு பெண் ஊழியர்களை மட்டுமே வைத்து கொண்டு கடையை திறம்பட நடத்திட்டு வர்றேன். வாடிக்கையாளர்களுக்கு நோட்டு புத்தகம் எடுத்து கொடுத்து விற்பனை செய்யுறதிலிருந்து பில் கணக்குகளையும், கடை வரவு செலவு கணக்குகள் வரை எல்லாமும் அவங்க மூலமாவும் என் மனைவி மூலமாவும்தான் பார்த்துட்டு இருக்கேன்.

பேங்க், அரசு அலுவலகம், பில் கட்டுவதற்கு, வீட்டிலிருந்து கடைக்கு வருவதற்கு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விஷேச நிகழ்வுகளுக்கு வெளியே போவதற்கு என்னோட ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் பிறர் உதவியுடன் போய் வருகிறேன். உதவிக்கு ஆள் இல்லை எனில், ஆட்டோ வைத்துக்கொண்டு செல்கிறேன்.

சில சமயம் பேங்க் போறதுக்கு என்னோட கடையில் வேலை செய்யும் பெண்களை டெபாசிட் செய்ய அனுப்புகிறேன். இப்ப இருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப என் தம்பி மகன் என்னோட செல்போன்ல நெட் பாங்கிங் (Net Banking) ஓப்பன் பண்ணி கொடுத்திருக்கார்; அதையும் நான் அவர் உதவியோடு பயன்படுத்துகிறேன்.

இன்றும் என் தம்பி மகன் லிங்கேஷ் குமார், தங்கை மகன் கீர்த்தீவேல், என் தம்பி மீனாட்சிசுந்தரம், என் அக்கா இராஜேஸ்வரி, என் தங்கை புவனேஷ்வரி போன்றோர் பல்வேறு வகைகளில் என்னோட வாழ்வுக்கும், என் உயர்வுக்கும் உறுதுணையா இருக்காங்க. கண் பார்வை இல்லாததால் ஓரிரு முறை ஏமாற்றபட்டிருக்கிறேன். ஆனா, எனக்கு உதவி செய்ய கிடைத்தவர்கள் பெரும்பாலும் என் நம்பிக்கைக்குரியவர்களாகவே இருக்கிறாங்க; இப்பவும் இருக்காங்க.

சந்திரசேகர் தன் மனைவி பானுமதியுடன்...
சந்திரசேகர் தன் மனைவி பானுமதியுடன்...
க.கோகுல்

எனக்கு இப்போது எந்த கடனும் இல்லை; என் சுய சம்பாத்தியத்தில் சொத்துக்களை வாங்கி இருக்கிறேன். எனக்கு அவ்வப்போது பொருளாதார சிக்கல்கள் வந்தபோதெல்லாம் அதிக வட்டிக்கு கூட கடன் வாங்கி யாரையுமே ஏமாத்தாம ஒரு ரூபாய் பாக்கி இல்லாம வட்டியோட பைசல் செஞ்சிருக்கேன்.

எனக்கு உதவி செய்றதுக்காக 1992-ம் ஆண்டு வரை சிவகுமார் என்பவரும், சண்முகம் என்பவரும், பழனிவேல் என்பவரும் இருந்தாங்க. என் சம்பாத்தியத்தில் வாங்கிய ஒரு சொத்தை விற்று என்னுடைய இரண்டு தம்பிக்கும், ஒரு தங்கைக்கும் திருமணம் செய்ய பண உதவியும் செஞ்சிருக்கிறேன்.

1996-ம் ஆண்டு இன்னொரு தொழில் செய்யலாம்னு பேங்க் லோன் மூலமா வேன் வாங்கி அதை சரியாக நடத்தமுடியாமல் போனதால, கடனில் சிக்கினேன். அதிலிருந்து 2004-ஆம் ஆண்டுதான் கடனில் இருந்து முழுமையாக வெளியே வந்தேன்.

1998-ம் ஆண்டிலிருந்து 2004-ம் ஆண்டு வரை வட்டிக்குக் கடன் வாங்கித்தான் இந்த புக் ஸ்டாலை நடத்தினேன். ஆற்காட்டில் கபாலி என்பவர் எந்த அடமானமும் இல்லாமல் என்னை நம்பி எனக்குக் கடன் கொடுத்து உதவினார்.

சந்திரசேகரின் புத்தகக் கடை
சந்திரசேகரின் புத்தகக் கடை
க.கோகுல்

1998 -ல் கண் பார்வை முழுமையா இழந்த நிலையிலும் இடையிடையே நிறைய போட்டி கடைகள் என் கடைக்கு அருகே ஏற்பட்டு இருப்பினும் இன்று வரை புக் ஸ்டாலை திறம்பட நடத்தி வருகிறேன். போதுமான அளவு பணமும் என் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருக்கிறேன்.

இந்த புக் ஸ்டால் நடத்துவதால், எனக்கு ஓய்வு என்பதே கிடையாது; எந்நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கு. இதன் காரணமாக எனக்கு கண் பார்வை இல்லை எனும் குறையே எனக்கு தெரியலை’’ என்று உற்சாகத்துடன் பேசி முடித்தார் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கும் சந்திரசேகர்!