
மோசடி
குஜராத், சூரத் ஆகிய இடங்களில் கப்பல் கட்டுமான தளங்களை இயக்கிவரும் ஏ.பி.ஜி ஷிப்யார்டு இந்தியாவிலேயே கப்பல் கட்டும் நிறுவனங்களில் மிகப்பெரியது. இதுவரை 160-க்கும் மேலான கப்பல்களைக் கட்டமைத்துள்ளது.
2019-ல் இந்த நிறுவனத்தின் மீது கடன் மோசடி புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. அதன்படி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2,925 கோடியும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ.7,089 கோடியும், ஐ.டி.பி.ஐ வங்கியில் ரூ.3,634 கோடியும், பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1,614 கோடியும், பி.என்.பி வங்கியில் ரூ.1,244 கோடியும் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,228 கோடியும் ஏ.பி.ஜி ஷிப்யார்டு நிறுவனம் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகத் தெரிய வந்தது. மொத்தமாக 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி அளவில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

ஏ.பி.ஜி ஷிப்யார்டு முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமாக இருந்துவந்தாலும் பல ஆண்டுகளாகவே கடன் அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறது. கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழும் இந்த நிறுவனம் அதன் இலக்கை எட்டவில்லை. இறுதியாக நிறுவனத் தின் கடன் கணக்குகளை வாராக்கடன் கணக்குகளாக வங்கிகள் அறிவித்தன. இந்த நிலைக்குக் காரணம் வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை வெளிநாடுகளில் உள்ள இதன் துணை நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றியதுதான்.
2019-ல் இந்த நிறுவனத்தில் எர்னஸ்ட் யங் நடத்திய தடயவியல் தணிக்கை ஆய்வில் வேறு நிறுவனங்களுக்கு நிதியை திசைதிருப்பியது, பரிவர்த்தனைக்கான வரவு செலவு விவரங் களைப் போலியாக உருவாக்கியது, குழும நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியது எனப் பல்வேறு முறைகேடான நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் குற்றச் சாட்டுகளை என்.சி.எல்.டி நிரூபித்துள்ளதோடு திவால் நடவடிக்கைக்கும் இந்த நிறுவனத்தை உட்படுத்தி உத்தரவிட்டுள்ளது.