
பணவீக்கம்
உலக நாடுகள் பெரும் போராட்டத்துக்குப் பின்பு, கொரோனா தொற்றுப் பாதிப்பைக் கட்டுப்படுத்திய நிலையில், தற்போது பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டத்தை வகுக்கவும், முக்கியமான கொள்கை மாற்றங்களைச் செய்யவும் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பணவீக்கம்.
அக்டோபர் மாதத்துக்கான பணவீக்க அளவீடுகளை உலக நாடுகள் வெளியிட்டுள்ள நிலையில், அமெரிக்கா கடந்த 30 வருடம் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் 6.2% என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. இது தொடர்ந்து உயர்ந்தால், அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கணிக்கப்பட்ட அளவீட்டைவிடவும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அமெரிக்க அரசும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியும் தற்போது பரபரப்பில் ஆழ்ந்திருக்கின்றன. ஜெர்மனியில் 4.5%, ரஷ்யா 7%, பிரேசில் 10%, துருக்கி 20%, அர்ஜென்டினா 50% எனப் பல நாடுகளில் நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் இது 4.48 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. “இந்த அதீத பணவீக்கத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நகர்புறத்து ஏழை மக்கள்தான். நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள பணவீக்கத்தால் நகரத்து ஏழை மக்கள் 7% வரையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், நகரத்துப் பணக்காரர்கள் 6.4% என்கிற அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். கிராமப்புறத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவு மக்களும் 5.9% என்கிற அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய அரசு அமைப்பான என்.எஸ்.எஸ்.ஓ (National Sample Survey Office (NSSO) வெளியிட்ட தரவுகள் சொல்கிறது.
உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் 1990-ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்க என்ன காரணம், அமெரிக்காவின் பணவீக்கம் உயர்ந்திருப்பது இந்தியாவை எப்படிப் பாதிக்கும்? எனப் பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.
பணவீக்க உயர்வுக்கான காரணங்கள்...
“கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா நோய்த் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. இந்தியாவைப் போலவே அங்கும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கின. உற்பத்தி, தேவை என அனைத்தும் ஒன்றுமில்லாமல் இருந்தது. ஆனால், கொரோனா மீட்சிக்குப் பிறகு, தேவைக்கு இணையான உற்பத்தியை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை. இதனால் தேவை அதிகரித்து, உற்பத்தி மற்றும் விநியோகத்தில் குறைவு காணப்பட்டது.
அதுமட்டுமன்றி, அமெரிக்கா வில் பணவீக்கம் அதிகரிக்க மிக முக்கியமான காரணம், எரிபொருள் விலையில் ஏற்பட்ட உயர்வு. மேலும், அதிகப்படியான ரியல் எஸ்டேட் விலையும் தற்போது நுகர்வோர் பணவீக்க உயர்வுக்கு முக்கியமான காரண மாக உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தி நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பணவீக்கம் என்பது...
மக்களின் வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். வாங்கும் சக்தி எப்போது குறையும் என்று பார்த்தால், இரண்டு விதங்களில் நடக்கும். உதாரணமாக, ஒரு பொருள் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், அந்தப் பொருளின் மதிப்பு குறையும். அதேபோல, அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டால் பணவீக்கம் ஏற்படும். இதற்கு உதாரணமாக வெனிசுலா நாட்டை எடுத்துக் கொள்ளலாம். வெனிசுலா நாட்டு அரசு அதிக அளவில் பணத்தை அச்சடித்து வெளியிட்டது. அதன் காரணமாக வெனிசுலா பணத்தின் மதிப்பு குறைந்து அதிகப்படியான பணவீக்கத்துக்கு வித்திட்டது. இதன் காரணமாக வெனிசுலாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.
இரண்டாவது, நமது தேவைக்கும் குறைவாக ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால், அப்போதும் பணவீக்கம் ஏற்படும். பணம் என்பது நமது தேவைகளை நாம் நிறைவேற்றிக்கொள்ள நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனம். நம்முடைய தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை எனில், நமது தேவையைப் பூர்த்தி செய்ய அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அந்தப் பொருளை வாங்க முயல்வோம். அதனால் ஒரு பொருளின் விலை உயர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனாலும் பணவீக்கம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இப்போது இதுதான் நடந்திருக்கிறது.
வட்டி விகிதம் அதிகரிக்கும்!
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். மத்திய வங்கிகள் வட்டி குறைக்கும்போது பொருளா தார வளர்ச்சிக்கும் வர்த்தகத்துக்கும் ஏதுவான சூழ்நிலை உருவாகிற மாதிரி, வட்டி விகிதத்தை உயர்த்தும்போதும் பணம் புழங்குவது குறையும். இதனால் விலைவாசியானது தானாகவே கட்டுக்குள் வந்துவிடும்.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்க ஃபெட் அங்கு வட்டி விகிதத்தை உயர்த்தினால், இந்திய பங்குச் சந்தை, கடன் சந்தை, பத்திரங்கள் என அனைத்திலும் அதன் தாக்கம் இருக்கும். மேலும், ரூபாய் மதிப்பில் அதிக அளவிலான சரிவை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களை நம் நாடு அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ரூபாய் மதிப்பு சரியும்போது, அதிக விலை தந்து நாம் இந்தப் பொருள்களை வாங்க வேண்டி இருக்கும். இதனால், இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிக்கும். உலக அளவில் இப்படி விலைகள் அதிகரிக்கும்போது, அது அதிகமான இறக்குமதிப் பண வீக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் இந்தியா மற்றும் இந்தியர்கள் இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருள்களின் விலை உயரும். இது இந்தியப் பொருளா தாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார் தெளிவாக.
பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து தப்பிக்கத் தேவையான வழிகளை நாம் கண்டறிவது அவசியம்!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் மொத்த விலை பணவீக்கம்!
மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்க விகிதம் (Wholesale Price Index (WPI)) நம் நாட்டில் கடந்த அக்டோபரில் ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் 12.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது 2020-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.36 சதவிகிதமாக இருந்தது. கடந்த மே மாதத்தில் இந்த பணவீக்க விகிதம் உட்சபட்சமாக 13.11 சதவிகிதத்தை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது!