ஒன்றிரண்டு ஊர்களில் அல்ல; நாடு மொத்தமும். தவிர உலகில் பல்வேறு நாடுகளிலும்; சில மணிநேரங்களோ அல்லது சில நாள்களோ அல்ல. பல வாரங்களாகச் சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருக்கும் பொருளாதாரப் புயல். குறைந்திருக்கிறதே தவிர, இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

ஒவ்வொரு நாடும் அதன் அதன் தேவை மற்றும் சக்திக்கு ஏற்ப உதவித் தொகைகள், மீட்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து எனப் பல வளர்ந்த நாடுகள், தனியார் ஊழியர்களுக்கும், குடிமகன்கள் அனைவருக்கும் என கணிசமான ரொக்கத் தொகைகள் கொடுத்திருக்கின்றன. தொழில் வியாபாரங்களை மீட்டு எடுக்க வேறு பல கடன் மற்றும் உதவித்தொகைகளையும் அறிவித்திருக்கின்றன.
அமெரிக்கா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொற்று மற்றும் பலியானோர் எண்ணிக்கைகள் ஒப்பீட்டு அளவில் குறைவு என்றாலும், நம் நாட்டில் அவற்றைத் தடுக்கச் செய்த ஊரடங்குகள் கொடுத்திருக்கும் பாதிப்புகள் அந்த நாடுகளைக் காட்டிலும் கூடுதல். எனவே மிக அதிகமான மற்றும் நேரடி உதவிகள் தேவை.
மத்திய அரசும் மாநில அரசுகளும் விரைந்து செயல்பட்டு நோய்ப் பரவுதலையும் அதன் பாதிப்புகளையும் தடுக்க ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்தன. நோய் பரவுதல் கட்டுக்குள் வந்துவிட்டது போலத்தான் தெரிகிறது. ஆனால், கட்டுப்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் பொருளதாரப் பாதிப்புகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

ரேஷன் அட்டைகள் வைத்திருப்போருக்கெல்லாம் அரிசி, பருப்பு, எண்ணெய் இலவசம் மற்றும் பல்வேறு அமைப்புசாரா பணியாளர்களுக்கு உதவித்தொகைகள், கட்டணங்கள் கட்ட காலக்கெடு தள்ளி வைப்பு எனத் தமிழ்நாடு அரசு, அது செய்யக்கூடியவற்றை செய்திருக்கிறது. தொடர்ந்து கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து செய்ய முயற்சி எடுக்கிறது.
பொருளாதாரம் தொடர்பானவற்றில் மத்திய அரசின் பொறுப்பு அதிகம். மத்திய அரசும் விரைவாகச் செயல்பட்டு, மூன்று மாதங்களுக்குக் கூடுதலாக உணவுப் பொருள்கள் வழங்குதல், வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் சில கோடி குடும்பங்களுக்கு மூன்று சமையல் கேஸ் உருளைகள், விவசாயிகள், ஓய்வு ஊதியக்காரர்களுக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் 1,000 ரூபாய், ஜன்தன் கணக்கு வைத்திருப்போருக்கு 500 ரூபாய் உதவித் தொகைகள் எனக் கொடுத்திருக்கிறது.
குறிப்பிட்ட தொகைகளுக்குக் கீழ் ஊதியம் பெறுவோரின் சேம நல நிதியை 3 மாதங்களுக்கு அரசே கட்டும்; சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்க 3 லட்சம் கோடி ரூபாய்; ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் மூலம் பல்வேறு கடன்களுக்குக் கட்டவேண்டிய தவணைகளைத் தள்ளிக்கட்ட அனுமதி, வட்டிவிகிதக் குறைப்பு, பல்வேறு நிறுவனங்களுக்குப் புதிய கடன்கள் கிடைக்க ஏற்பாடு போன்றவற்றையும் செய்திருக்கிறது.
வருமான வரி ரீஃபண்ட் விரைந்து கொடுக்க ஏற்பாடு, இந்த ஆண்டு தாக்கல் செய்ய நேர நீடிப்பு, டி.டி.எஸ், டி.சி.எஸ் பிடிப்புகளில் அளவு குறைப்பு, சிறு குறு நிறுவனங்களுக்கு சில சலுகைகள் போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் செய்திருக்கிறது.
அடுத்து நான்காவது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்த நோய் மிகப்பெரும் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அதை எதிர்கொள்ள நாம் பல நடவடிக்கைகள் எடுக்கப்போகிறோம். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகித அளவான 20 லட்சம் கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தீட்டியிருக்கிறோம். வரும் நாள்களில் நிதி அமைச்சர் அவர்கள் அவற்றை அறிவிப்பார்கள் என்றார். நாடே மகிழ்ந்தது. விமர்சகர்கள் கூட பாராட்டினார்கள்.

பின்பு நிதியமைச்சர் நாள் ஒன்றுக்கு சில அறிவிப்புகள் என்று ஐந்து நாள்களில் பல அறிவிப்புகள் செய்திருக்கிறார். மொத்தக் கணக்கு 20 லட்சத்து 97 ஆயிரத்து 53 கோடி என்று அறிவித்திருக்கிறார்.
விவசாயப் பொருள்களை விவசாயிகள் விற்பனை செய்யும் முறைகளில் மாற்றங்கள்; நிலக்கரி அகழ்வதில் தனியாருக்கு அனுமதி; பொதுத்துறை நிறுவனங்களில் பல தனியாருக்கு விற்பனை; யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் வசம்; அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு, சில பொருள்களுக்கு விலக்கு; ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் அந்நிய முதலீடு 74 சவிகிதமாக உயர்வு; ஆர்டினென்ஸ் தொழிற்சாலை நிர்வாகங்களில் மற்றவர்கள் மற்றும் அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்; விண்வெளி மற்றும் அணுசக்தித்துறைகளில் தனியாருக்கு அனுமதி எனப் பல்வேறு மிகப்பெரும் அறிவிப்புகள் செய்திருக்கிறார்.
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், மலைவாழ் மக்களுக்கு, மீனவர்களுக்கு என்று சில அறிவிப்புகள் மற்றும் மேலே பார்த்த உணவுப் பொருள்கள், கேஸ் மற்றும் 500, 1000, 2000 ரூபாய் உதவித்தொகைகள் தவிர மற்ற பலவும் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரச் சிக்கலிலிருந்து சாதாரண மக்கள் வெளிவர உடனடியாகவோ நேரடியாகவோ உதவிகரமாக இருக்காது.
அறிவித்த திட்டங்களில் பல, சீர்திருந்தங்கள் வகையைச் சேர்ந்தவை. இவையெல்லாம் பட்ஜெட் நேரத்தில் செய்யப்படவேண்டியவை. ஆனால் இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன! இவற்றில் பல நல்ல திட்டங்களாகக் கூட இருக்கலாம். ஆனால், முழுமையாக நிறைவேறும்போதுதான் பலன் கிடைக்கும்.
20 லட்சம் கோடி என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் விவரங்கள் பார்க்கையில்தான் தெரிகிறது, அதில் பெரும்பகுதி, திருப்பிக் கட்டவேண்டிய கடன்தொகைகள் என்று. தவிர, அந்தத் திட்டங்களில் பலவும் சட்டத் திருத்தம் செய்தபின்தான் நடைமுறைப்படுத்தவேண்டியவை. மேலும் சிலவற்றை அறிவித்திருக்கும் மத்திய அரசால் தனித்துச் செய்ய இயலாது. தொடர்புடைய மாநில அரசுகளும் சேர்ந்து செய்யவேண்டியவை அவை. தவிர, பல திட்டங்கள் பலன் தர காலமெடுக்கும்.
இன்னும் சில அறிவிப்புகள் வரவேண்டும். அதில் நேரடி மற்றும் ரொக்க உதவிகள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் தொடர்கிறார்கள் சாதாரண மக்கள்.