நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?

தங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?

தங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?

திருவள்ளூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றின்  பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த 32 கிலோ தங்க நகைகள் சில நாள்களுக்குமுன் கொள்ளை அடிக்கப்பட்டன. அந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவரே அந்தக் கொள்ளையின் மூளையாகச் செயல்பட்டிருக் கிறார். இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, அடமானம் வைக்கப்படும் தங்க நகைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான வசதிகள் வங்கிகளில் உள்ளனவா, வாடிக்கை யாளர்களின் நகைகள் கொள்ளைபோனால் அதற்கு யார் பொறுப்பு எனப் பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன?  

தங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?

வங்கிகளில் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் உள்ளன என்பது பற்றி  சங்கரன்கோவிலில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

பாதுகாப்பு அம்சங்கள்

“வங்கிகளைப் பொறுத்தவரை, அடமானம் வைக்க, பாதுகாப்பாக வைக்க என இரண்டு விதங்களில் பொதுமக்களின் நகைகள் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு வருகின்றன. இவற்றில், அடைமானமாக வைக்கப்படும் நகையை, வங்கி மேலாளரின் முன்னிலையில் நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்வார். அதன்பின்னர் பாதுகாப்புப் பெட்டகத்தினுள் வைக்கப்படும்.

‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்புப் பெட்டக அறையானது ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள அளவுகளில் பலம்வாய்ந்த கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கும். கான்கிரீட்டுக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தடிமன், எண்ணிக்கை, கான்கிரீட்டின் தடிமன், தரைப்பகுதியின் அளவுகள் என ஒவ்வொன்றும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த அறையானது பலமான இரும்புக் கதவினால் பூட்டப்பட்டிருக்கும். அந்த இரும்புக்கதவானது துளையிடக்கூட முடியாத அளவிற்குச் சக்திவாய்ந்ததாக இருக்கும். அந்தக் கதவில் இரண்டு சாவித்துளைகள் இருக்கும். தற்போது வந்துள்ள மாடல்களில் நான்கு சாவித்துளைகள் உள்ளன. அதே போல, அந்த அறையினுள் இருக்கும் பொருள் வைக்கும் பீரோவிற்கும் நான்கு சாவித்துளைகள் இருக்கும்.

இரும்புக்கதவிற்கு அடுத்து கிரில் கதவு ஒன்றும் இணைந்தே இருக்கும். அந்த கிரில் கதவிற்கு ஒரு சாவி இருக்கும். இந்த சாவித்துளைகளுக் கான சாவிகள், வங்கிப் பொறுப்பில் இருக்கும் இருவரின் கைவசம் இருக்கும். 

தங்க நகை... வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?

பாதுகாப்புப் பெட்டகச் சாவிகள் எப்போதும் இருவர் பொறுப்பில் இருக்கும். கிராமப்புற சிறிய வங்கிக் கிளைகளில், வங்கி மேலாளரும், அவருக்கு அடுத்த நிலையிலிருப்ப வரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். பெரிய வங்கிகளில் பொறுப்பாளர்கள் மாறக்கூடும். இரண்டு செட்டுகளாக சாவிகள் பிரிக்கப்பட்டு, இருவரும் அவற்றைக் கையாள்வார்கள். ஒருவரின் சாவியை இன்னொருவர் கையாள அனுமதி கிடையாது. அதேபோல, அந்தப் பொறுப்பாளர்களில் ஒருவர்  விடுமுறை எனில், அந்தச் சாவிக்கான பொறுப்பு அடுத்த நிலையில் இருப் பவருக்குக் கொடுக்கப்படும். சாவிகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரங்கள் கீ மூவ்மென்ட் ரெஜிஸ்டரில் (Key Movement Register) பதிவு செய்யப்பட்டிருக்கும். சாவி களின் பொறுப்பாளர்கள் இருவரும் அதில் கையெழுத்திட்டிருப்பார்கள்.

சாவிக்கு உரியவர் விடுப்பு காரணமாக மாறினால், அந்தச் சாவி கைமாற்றப்பட்ட தேதி, நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டு இருவரும் கையெழுத்திடுவார்கள். கீ மூவ்மென்ட் ரெஜிஸ்டர், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வாளரால் சரிபார்க்கப்படும்.

ஸ்ட்ராங் ரூமில் ஒவ்வொரு முறை நகை வைக்கப்படும்போதும், எடுக்கப்படும்போதும் ஒரே நேரத்தில் இருவரும் இணைந்தேதான் செயல்பட வேண்டும். இந்த சாவிகளின் டூப்ளிகேட் சாவி வேறொரு வங்கிக்கிளையின் பொறுப்பில் இருக்கும். ஏதேனும் ஒரு சாவி  தொலைந்து போனால் உடனடியாக மாற்றுச்சாவி யானது அடுத்த வங்கிக் கிளையிலிருந்து எடுத்து வரப்படும்.  அடுத்த ஒரே நாளில் புதிதாக சாவிப் பெட்டியே மாற்றப்படும். எனவே, நகைகளின் பாதுகாப்பு விஷயத்தில் வங்கி அதிகாரிகள் மிக மிகக் கவனமாக இருப்பார்கள்.

அதேபோல, அடைமானம் வைக்கப்பட்ட நகைகள் திருடுபோனால் உடனே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டிருந்தால், அப்படி  செய்வதற்கு வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியமென்பதால், வங்கி ஊழியர்கள்தான் முதலில் தீவிரமாக விசாரிக்கப்படுவார்கள். அந்த விசாரணையின் அடிப்படையில்தான் குற்றவாளிகள் குறித்த முடிவுக்கு வருவார்கள்.  தற்போது திருவள்ளூரில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்திலும் இந்தமாதிரி விசாரித்ததால்,  கொள்ளையர்கள் சிக்கியிருக்கிறார்கள். எனவே, வங்கிகளில் அடமானமாகவோ அல்லது பாதுகாப் பாக வைக்கும் தங்க நகைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது’’ என்று முடித்தார்.

வெவ்வேறு செயல்முறைகள்

வங்கிகளில் ரகசியமாக வைத்திருக்கும் பெட்டகத்தை எப்படிக் கையாள்கிறார்கள், அதற்கான வழிமுறைகள் என்னவென்று கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் (ஓய்வு) ஆர்.செல்வமணியிடம் கேட்டோம்.  

“பாதுகாப்புக்காக லாக்கரில் வைக்கப்படும் நகைகள், அடைமானம் வைக்கப்படும் நகைகள் என இரண்டுமே ஒரே ஸ்ட்ராங் ரூமினுள் வைக்கப்பட்டாலும், இரண்டிற்கும் வெவ்வேறு விதமான பாதுகாப்பு செயல்முறைகள் உள்ளன. பாதுகாப்புக்காக வைக்கப்படும் நகைகளுக்கான லாக்கர் சாவிகளில் ஒன்று வங்கியிலும், இன்னொன்று வாடிக்கையாளர் வசமும் இருக்கும். வாடிக்கையாளருக்கான லாக்கரில், நகைகளைத்தான் வைக்க வேண்டுமென்று அவசியமில்லை. பணத்தையோ, டாக்குமென்டுகளையோ கூட வைக்கலாம். அல்லது எதையுமே வைக்காமல் காலியாகவும் வைக்கலாம். 

இதுவே அடமானம் வைக்கப்படும் நகையென்றால், வங்கிப் பொறுப்பாளர் கள் இருவர் மட்டுமே சேர்ந்துவந்து ஸ்ட்ராங் ரூம், கிரில் கதவு, லாக்கர் என மூன்றையும் திறந்து நகையை உள்ளே வைத்துவிட்டு, மீண்டும் லாக் செய்து விட்டு வருவார்கள். வங்கிப் பொறுப் பாளர்களிடம் இருக்கும் சாவிகளை அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது எடுத்துச் சென்றுவிடுவார்கள்’’ என்றார்.

இன்ஷூரன்ஸ் இருந்தால் பிரச்னையில்லை

வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது குறிப்பிட்ட தொகை இன்ஷூரன்ஸுக்காக வசூலிக்கப்படும். ஆனால், பாதுகாப்புக் காக தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கும்போது அதற்கு இன்ஷூரன்ஸ் கிடையாது. ஏனெனில், பெட்டகத்தினுள் வைக்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் வங்கிக்குத் தெரியாது. அதனால் அதற்கு இன்ஷூரன்ஸ் அளிக்க முடியாது. ஆனால், அடமானத் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டாலோ, இயற்கைச் சீற்றத்தால் அழிந்தாலோ இன்ஷூரன்ஸ் மூலம் 95% வரை இழப்பீடு கிடைக்கும். அந்த நகையின் நிகர எடைக்கு ஈடான தொகையைப் பணமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

தேவைக்கேற்ப வாங்குங்கள்


தங்கத்தை வங்கியில் அடமானம் வைப்பதைவிட, வேறு என்ன செய்யலாம் என முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பனிடம் கேட்டோம். “கழுத்தில் போட்டுள்ள நகையையே அபகரித்துச் செல்லும் இன்றைய காலத்தில், தங்கத்தைத் தேவைக்கேற்ப வைத்துக் கொள்வதே சரி. வங்கி லாக்கரில் பாதுகாக்கும் அளவிற்குத் தங்கத்தை வாங்கி வைத்திருப்பது தேவையற்றது. தங்கத்தை முதலீடாக வாங்கிச் சேர்ப்பதாக இருந்தால், தங்கப் பத்திரத்தில் முதலீடுசெய்வது மிகவும் பாதுகாப்பானது. நிறைய தங்கம் வாங்கி வைத்திருப்பவர்கள், வங்கி லாக்கரில் வைக்க நினைத்தால், அந்த வங்கி அமைந்துள்ள பகுதி எப்படிப் பட்டது என்று பார்த்துத் தேர்வு செய்வது நல்லது. ஊருக்கு ஒதுக்குப் புறமான வங்கியாக இருந்தால், பாதுகாப்பு விஷயத்தில் அச்சப்பட வேண்டியிருக்கும்.

நம் நாட்டிலுள்ள வங்கிகளின் எண்ணிக்கையோடு வங்கித் திருட்டு களை ஒப்பிட்டால், திருவள்ளூரில் நடந்த சம்பவத்தைப் பார்த்து நாம் பெரிதாகப் பயன்படத் தேவையில்லை. ஒவ்வொரு அசம்பாவிதத்துக்குப் பிறகும் வங்கிகளின் பாதுகாப்பு மேலும் மேலும் பலப்படுத்தப்பட்டே வருகிறது” என்றார்.

வங்கிகளில் அடமானம் வைக்கப் படும் நகைகளைப் பாதுகாப்பதில் வங்கிகள் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை!

- தெ.சு.கவுதமன்

படம்: வீ.நாகமணி

ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு!

ருடத்திற்கு ஒருமுறையோ, 18 மாதத்திற்கு ஒருமுறையோ வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகமுறை சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா, அடமானம் வைக்கப்பட்ட நகைகள் சரியாக இருக்கின்றனவா என்றெல்லாம் ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது, ஸ்ட்ராங் ரூம் திறப்பதற்குமுன்பாக ஆய்வாளர் வந்துவிடுவார். அவர் முன்னிலையில்தான் கதவு திறக்கப்படும். அவர் உள்ளே சென்று, பதிவேட்டில் உள்ளபடி நகைகள் அனைத்தும் உள்ளனவா என்று சரிபார்த்துச் சான்றிதழ் வழங்குவார்.  அதேபோல், மேலாளர் ஒருவர் பணி மாறுதலாகி வந்து புதிதாகப் பொறுப்பேற்கும்போதும் இந்த ஸ்ட்ராங் ரூமில் உள்ள பொருள்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். சாவிகளில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் அது சரிசெய்யப்படும்.