
கிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா?
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரெட் கார்டு மூலம் பொருள்கள் வாங்கி, அந்தத் தொகையைச் சுமார் 45 நாள் களுக்குள் கட்டி விட்டால், வட்டி எதுவும் கிடையாது என்பதே இந்த அதிகரிப்புக்கான முக்கியக் காரணம். அதேநேரத்தில், தவறும் பட்சத்தில் ஆண்டுக்குச் சுமார் 35-45% வட்டி கட்ட வேண்டி வரும்.

நம்மில் பலர், கையில் பணம் இல்லாத போது செலவுக்கு கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துவிடுகிறார்கள். இப்படி ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் இழப்பு அதிகம் என்பது பலருக்குத் தெரியவில்லை.
கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால், வட்டியில்லா காலக் கெடு எதுவும் கிடையாது. பணம் எடுத்த நொடியிலிருந்தே வட்டிக் கணக்கு ஆரம்பித்துவிடும். மேலும், பணம் எடுத்தற்கான கட்டணம் சுமார் ரூ.300 செலுத்த வேண்டும்.
இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் ரூ.10,000-க்கு பொருள்களை வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இந்தத் தொகையை ஒரு மாதத்துக்குள் செலுத்துகிறார் என்றால், ரூ.10,000 மட்டுமே கட்டினால் போதும்.
இதுவே பணமாக ரூ.10,000 எடுத்தால், பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.300 மற்றும் ரூ. 10,000-க்கு ஒரு மாத வட்டி (3%) ரூ. 300 என்றால் ஒரு மாதத்தில் செலுத்தினால் சுமார் 10,600 ரூபாய் கட்ட வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால், அதற்கான வட்டி, கந்துவட்டி போல் ஏறிக்கொண்டே போகும். இதைச் செலுத்த தாமதித்தால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்.
மிக அவசரத் தேவை தவிர வேறு எதற்கும் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
- எம்.வி.அச்சய சங்கர்