நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சந்தை நிலவரம், பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?


வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டி  (ரெப்போ) 6 சதவிகிதத்திலிருந்து 0.25% அதிகரித்து, 6.25 சதவிகிதமாக உயர்த்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபிறகு, கடந்த நான்காண்டுகளில் முதன்முறையாகத் தற்போதுதான் ரெப்போ விகிதம் உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன்னர், 2014, ஜனவரி மாதத்தில் ரெப்போ விகிதம் மாற்றியமைக்கப்பட்டது.

2018-19-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 4.5-4.9 சதவிகிதமாக இருக்கும் என்றும், இரண்டாவது அரையாண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஜி.டி.பி-யைப் பொறுத்தவரை, ஆண்டின் முதல் பாதியில் 7.5-7.6%, இரண்டாவது பாதியில் 7.3-7.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?



ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், நேரடிப் பாதிப்பு, வங்கிக் கடன் வாங்குபவர்களுக்கே அதிகம். வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதையொட்டி வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் 0.50% வரை உயர்த்தலாமெனக் கருதப்படுகிறது. இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் தவணைக் காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த வட்டி விகித உயர்வு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பனிடம் கேட்டோம். 

“ரெப்போ விகிதம் 0.25% என்கிற அளவுக்கு மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதால், பெரிய அளவில் பாதிப்பென்பது இருக்காது. ஆனால், கடனுக்கான வட்டி இனி அதிகரிக்கும். 2014-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரெப்போ 8% என்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 6% என வந்தது. தற்போது நான்காண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளார்கள். இதன் காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன் கட்ட வேண்டிய தொகை அல்லது கட்டவேண்டிய ஆண்டுகள்அதிகரிக்கக்கூடும்.

வங்கிக் கடன் வாங்கியவர்கள் இதனை இரண்டு விதமாகச் சமாளிக்கலாம். ஒன்று, தீபாவளி, பொங்கல் போனஸ் போல ஏதேனும் கூடுதலாகக் கிடைக்கும் தொகையைச் செலுத்துவதன் மூலம் கடன் தொகையை ஓரளவுக்குக் குறைக்கலாம்.  அடுத்ததாக,  நிலையான வட்டியில்  கடன் கிடைத்தால் அதற்கு மாறிக்கொள்வது நல்லது. 

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இந்த மாதிரியான நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் செய்யும். சிலசமயங்களில், பணவீக்கத்தை உண்டாக்கவும் செய்யும். வட்டி விகிதம் அதிகரிப்பதால், புதிதாகக் கடன் வாங்குபவர்கள் வாங்க மாட்டார்கள். அப்போது பொருள் களுக்கான தேவை குறையும். தேவை குறையும்போது பொருளின் விலையும் குறையும். அதனால் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.

அதேசமயம்,  இது எதிர்மறையாகவும் போகலாம். வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, உற்பத்திப் பொருளின் அடக்க விலை அதிகரிக்கக்கூடும். அதன் காரணமாக விலையை அதிகரிப்பார் கள். அப்படி விலையை அதிகரிக்கும் போது, வீடு வாங்கினாலும் சரி, வாகனம் வாங்கினாலும் சரி, அனைத் திற்குமான விலை அதிகரிக்கும். தேவையைப் பொறுத்தே விலை கூடவோ, குறையவோ செய்யும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை, தேவை என்பது குறையாது. வாங்கிக் கொண்டேதான் இருப்போம். அதனால் இனிவரும் நாள்களில் விலைவாசி அதிகரிக்கவே செய்யும்’’ என்றார்.

இப்போது வந்திருக்கும் இந்த வட்டி விகித உயர்வு பொதுமக்களுக்கு உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தாது. என்றாலும், நாம் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டியது நம் கடமை!

 - தெ.சு.கவுதமன்

வட்டி உயர்வு... என்ன பாதிப்பு?

ரஜ்னிஷ்குமார், சேர்மன், எஸ்.பி.ஐ  

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

“ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை  வரவேற்கத்தக்கதுதான். வளர்ச்சியை முன்னிறுத்திப் பார்க்கையில், இந்த நடவடிக்கை வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், குறுகியகால வட்டி விகிதங்களை எளிதாக்கவும் செய்யும்.”   

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

ஆர்.சுப்ரமணியகுமார், சி.இ.ஓ, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்

“ந
டுநிலைத் தன்மையோடு எடுக்கப்பட்ட இந்த முடிவானது, அடிப்படையை வலுப்படுத்தி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும். இந்தப் பொருளாதார மறுமலர்ச்சி நடவடிக்கை யானது, முதலீடுகளை அதிகரிக்க உதவும்.    எம்.எஸ்.எம்.இ துறை கடனுக்கான கால அளவை 180 நாள்களுக்கு நீட்டித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.”  

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

அமித் ருபரெல், ருபரெல் ரியால்டி

“ரெ
ப்போ விகிதத்தை 6.25 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது புதிதாக வீடு வாங்குபவர் களின் எண்ணத்தைக் குறைக்கக்கூடும். ரியல் எஸ்டேட் போன்ற முக்கியத் துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒரு சீரான அணுகுமுறையைக் கொண்டுவந்தால்தான் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ரெப்போ விகிதத்தைச் சற்றுக் குறைப்பதன் மூலம் வீட்டுக் கடன் வாங்குவோர் அதிகரிப்பார்கள்், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் அதிகரிக்கும்.”  

வட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு?

ரமேஷ் நாயர், சி.இ.ஓ, ஜே.எல்.எல் இந்தியா

“ந
மது பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய பணவீக்கத்தைக் குறைப்பதற்காகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த வட்டி விகித உயர்வானது, பங்குச் சந்தையில் மந்தமான சூழலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், ரியல் எஸ்டேட் துறையில் சிறிதளவு தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தக்கூடும். ரியல் எஸ்டேட் விற்பனையானது, பொதுவாக வீட்டுக் கடன்  வட்டியை வைத்து முடிவெடுக்கப்படுவதில்லை. மிகச் சிறிய அளவிலான மக்கள் மட்டுமே வீடு வாங்கும்போது வீட்டுக் கடன் விகிதங்களைப் பார்ப்பார்கள். எனவே, ரெப்போ விகித உயர்வு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது.”