
A U T O D E B I T
கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைவு, தொழில் தேக்கம் எனப் பல்வேறு காரணங்களால் மக்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக் கிறார்கள். இதன் காரணமாக, வங்கிகளில் வைத்திருக்கும் மினிமம் பேலன்ஸ் தொகையைக்கூட எடுத்துச் செலவு செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் இல்லாமல் போய், இ.சி.எஸ் முறையிலிருந்து அவர்களின் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை உருவாகி யிருக்கிறது. மேலும், ‘ஆட்டோமேட்டிக் டெபிட் டீஃபால்ட்’ எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
கடந்த மே மாதத்தில் மட்டும் 35.91% (308 கோடி பரிவர்த்தனைகள்) ஆட்டோமேட்டிக் டெபிட் பரிவர்த்தனைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்திருப்பதாக தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (National Automated Clearing House - NACH) தெரிவித்துள்ளது. இதேபோல, ஏப்ரல் மாதத்தில் 34.05% (290 கோடி பரிவர்த்தனைகள் - மதிப்பு ரூ.22,000 கோடி), மார்ச் மாதத்தில் 32.8% ஆட்டோமேட்டிக் டெபிட் பரிவர்த்தனைகள் பணம் இல்லாத நிலையில் திரும்பியுள்ளன. அதிகபட்சமாக கடந்த 2020-ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 45.37% ஆட்டோமேட்டிக் டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்திருக்கின்றன.

என்.ஏ.சி.ஹெச் முறை...
தற்போதுள்ள என்.ஏ.சி.ஹெச் (NACH) முறையைப் பயன்படுத்தி, ஆட்டோமேட்டிக் டெபிட் ஆப்ஷன் மூலம் மின்சாரம், சமையல் எரிவாயு, தொலைபேசிக் கட்டணம், குடிநீர் கட்டணம், வங்கிக் கடன்களுக்கான தவணைகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றைச் செலுத்த முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், இன்ஷூரன்ஸ் பயனாளர்கள் மற்றும் கடன் தவணை செலுத்துபவர்களே இந்த முறையை அதிக அளவில் பயன்படுத்து வதாகவும், இதில் 80% பேர் கடனுக்கான தவணையைச் செலுத்தவே இந்த ஆட்டோமேட்டிக் டெபிட் முறையைப் பயன்படுத்துவதாகவும் என்.ஏ.சி.ஹெச் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
ஆட்டோமேட்டிக் டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வியடையாமல் இருக்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும், இதில் வங்கிகளின் பங்கு என்ன, ஆட்டோ மேட்டிக் டெபிட் அக்கவுன்டில் பணம் இல்லாமல் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் என்ன வாகும் என்கிற பல்வேறு கேள்விகளுடன் தனியார் வங்கி அதிகாரியான மணியன் கலியமூர்த்தியிடம் பேசினோம்.
நிதி நெருக்கடியே காரணம்...
“கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கியில் பணத்தை வைத்திருக்க முடியாத அளவுக்கு நிதிப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், அவசரத் தேவை களுக்காக அதிகளவு பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இதுவும் ஆட்டோ மேட்டிக் டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வியைச் சந்திக்க ஒரு காரணமாகும்.

ஜி.எஸ்.டி-யுடன் அபராதக் கட்டணம்...
என்.ஏ.சி.ஹெச் தெரிவித்திருப்பது போல, எங்களுடைய வங்கியும் ஆட்டோமேட்டிக் டெபிட் பரிவர்த்தனை களில் ஆயிரக்கணக்கான தோல்விகளை சந்தித்து வருகிறது. இ.சி.எஸ் வசதியைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள, வாடிக்கையாளர்கள் பலரிட மிருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால், இ.சி.எஸ் (Electronic Clearing Service (ECS)) சேவையைப் பொறுத்தவரை, தற்காலிக நிறுத்தத்துக்கான சேவையை வங்கிகளால் வழங்க முடியாது. இ.சி.எஸ் சேவையைப் பயன் படுத்தி வரும் ஒரு வாடிக்கை யாளரின் செக், ஒருமுறை பவுன்ஸானால் (பணம் இல்லை எனத் திரும்பிவந்தால்), ஜி.எஸ்.டி கட்டணத்துடன், ரூ.600 அபராதத்தை அந்த வாடிக்கை யாளர் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். இந்தக் கட்டணமானது வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப் படுகிறது. தற்போதைய நிலையில், பொதுத் துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, உலகளவில் வங்கி களிலும், உள்நாட்டு தனியார் வங்கிகளிலும் செக் பவுன்ஸ் அபராதம் அதிக மாகவே இருக்கிறது.
இன்ஷூரன்ஸ் தவணைகளுக்கான இ.சி.எஸ் சேவையில், செக் பவுன்ஸ் ஆனால் அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், தொடர்ந்து இன்ஷூ ரன்ஸ் பிரீமியம் செலுத்தாமல் இருக்கும்போது, பாலிசிகள் லேப்ஸ் ஆகிவிடும் என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல, டீமேட் கணக்குடன் லிங்க் ஆகியிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி தவணைகளுக்கும் அபராதக் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. அதே சமயம், ஆஃப்லைன் எஸ்.ஐ.பி தவணை களுக்கான செக்கானது பவுன்ஸ் ஆனால், அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிபில் ஸ்கோரும் சிறைத் தண்டனையும்...
மேலும், மூன்று செக் பவுன்ஸ் ஆகும் வரை, சிபில் ஸ்கோர் எந்த வொரு பாதிப்பையும் சந்திக்காது. மூன்றுக்கு மேல் செக் பவுன்ஸ் ஆகும்போது உங்களுடைய சிபில் ஸ்கோர் தானாகக் குறையும். சிபில் ஸ்கோர் குறையும்போது, கடன் பெறு வதற்கான தகுதியும் குறையும். அதுமட்டுமல்லாமல், வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் தொடர்ந்து செக் பவுன்ஸ் ஆனால், சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர் மீது காவல் நிலையத்தில் வங்கி புகார் அளிக்கலாம். இதன் மூலம், சிறைத்தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு வாடிக்கையாளருக்கு ரிஸ்க் இருக்கிறது. எனவே, இந்த நிலையை வாடிக்கையாளர்கள் உருவாக்கிக் கொள்ளாமல், தனது வருமானமற்ற நிலையை சம்பந்தப்பட்ட வங்கிக்குக் கடிதம் வாயிலாகவோ, மெயில் மூலமாகவே முன்பாகவே தெரிவித்து, கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.
கால அவகாசம் கொடுப்பதும், அபராத கட்டணங்களில் சலுகைகள் வழங்குவதும் வங்கியைப் பொறுத்தது. எந்த ஒரு வாடிக்கையாளர், கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் விஷயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறாரோ, யார் ஒருவர் இடைநிறுத்தம் இல்லாமல் கடன் தவணையைச் செலுத்தி வந்தாரோ அவர்களுக்கே இந்தச் சலுகை பொருந்தும். ஒரு வங்கி வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகள் பாராட்டும்படி இருந்தால், அந்த வாடிக்கையாளரை எந்தவொரு வங்கியும் கைவிடாது. அதனால்தான், எப்போதுமே வங்கி பரிவர்த்தனையையும், வங்கியுடனான உறவுமுறையும் நல்ல முறையில் புதுப்பித்துக்கொண்டே வர வேண்டும். அது இதுமாதிரியான பெருந்தொற்றுக் காலங்களில் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்” என்றார் தெளிவாக.
இ.சி.எஸ் செய்பவர்களே, உஷார்!