
இனி, பணம் போட அல்லது எடுக்க வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்வார்கள்!
முன்பெல்லாம் வங்கிக்குப் போய்த்தான் பணம் எடுக்கலாம் அல்லது பணம் போடலாம் என்கிற நிலை இருந்தது. இன்டர்நெட் வசதி வந்தபின்பு ஏ.டி.எம் மையங்கள் மூலம் பணம் எடுக்கும் வசதி வந்தது. இப்போது ஏ.டி.எம் மையங்களிலேயே பணம் போடும் வசதியும் வந்துவிட்டது.
‘இவையெல்லாம் போதாது; நான் சொன்னால் ஒரு ஆள் வந்து பணம் தர வேண்டும் அல்லது பணத்தை வாங்கிக்கொண்டு சென்று வங்கியில் போட வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறீர்களா? அந்த வசதியும் இப்போது வந்தேவிட்டது. `வாசலில் வங்கி’ என்பதுதான் அந்த வங்கிச் சேவைக்குப் பெயர்.

வாசலில் வங்கிச் சேவை பெறுவது எப்படி?
இன்றைய தேதியில், (வங்கிகள் இணைப்புக்குப் பின்) 12 வங்கிகளும் இந்த வசதியைத் தருகின்றன. உங்களுக்கு இரண்டு, மூன்று பொதுத்துறை வங்கிகளில் கணக்கு இருக்கும்பட்சத்தில் எந்தெந்த வங்கிக் கணக்கு எண்களுடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கிக் கணக்குகளில் எல்லாம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் 100 சென்டர்களில் இந்த வசதி தரப்படுகிறது. புதுச்சேரியிலும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது. https://doorstepbanks.com என்கிற இணையதளத்தில் ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அல்லது 18001037188 எண் மூலம் கால் சென்டருக்கு போன் செய்து, வாசலில் வங்கிச் சேவை பெறலாம். பொதுத் துறை வங்கிகள் எனில், https://dsb.imfast.co.in என்கிற இணையதளத்துக்குச் சென்று ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அல்லது 18001213721 எண் மூலம் கால் சென்டருக்கு போன் செய்து வாசலில் வங்கிச் சேவை பெறலாம்.

என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
முதலில் இதில் ஏதாவது ஒன்றின் மூலம் டோர் ஸ்டெப் பேங்க்கிங் (Doorstep Banking) என்ற இணைய தளத்தில் நான்கு இலக்க பின் (PIN) நம்பரைப் பதிவு செய்ய வேண்டும். (இதற்கு நம் பெயர், இமெயில் ஐடி, ஃபோன் நம்பர் போன்றவற்றைத் தளத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கும். இணையதளங்களை அதிகம் உபயோகித்துப் பழக்கம் இல்லாதவர்கள் கால் சென்டர் மூலம் பேசி பதிவு செய்யலாம்!) ஒவ்வொரு முறையும் இந்தச் சேவையைப் பெற விரும்பும்போதும், இந்தப் பின்நம்பரை உபயோகித்து, நம் தேவையைப் பதிவு செய்யலாம்.
பணப் பரிவர்த்தனை தவிர்த்த சேவைகள் என்று பார்த்தால், 1. வங்கியில் இருந்து வாடிக்கையாளருக்கு; 2. அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட், 3. ஃபிக்ஸட் டெபாசிட் ரசீது, 4. கிஃப்ட் கார்ட், 5. டிமாண்ட் டிராஃப்ட், 6. பே ஆர்டர் போன்றவை. டி.டி.எஸ் (TDS) மற்றும் ஃபார்ம் 16 சர்ட்டிஃபிகேட்டுகள்.
வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி களுக்குக் கிடைக்கும் சேவை என்று பார்த்தால், 1. கிளியரிங் மற்றும் கலெக்ஷனுக்கான காசோலைகள் / டிமான்ட் டிராஃப்டுகள், 2. புதிய செக் புத்தகம் பெறுவதற்கான மனு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக் ஷனுக்கான மனு, 3. வரி / அரசு / ஜி.எஸ்.டி சலானுடன்கூடிய செக் ஜீவன் பிரமாண் ஆப்பின் மூலம் பெற்ற டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட். இவற்றில் இதுவரை அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட், லைஃப் சர்டிஃபிகேட் மற்றும் செக் புக் வேண்டி மனு ஆகிய சேவைகள் பெறப்படுகிறது.
எவ்வளவு பணம் பெறலாம்?
வங்கிக்குப் பணம் எடுத்துச் செல்ல குறைந்தபட்சம் ரூ.1000-மும் அதிகபட்சம் ரூ.10,000-மும் வங்கியிலிருந்து பணம் பெற ரூ.1000-மும் அதிகபட்சம் ரூ.10,000-மும் பெறலாம்.

ஏஜென்ட் வந்து பணம் தருவார்...
வீட்டுக்கு வரக்கூடிய ஏஜன்ட்டின் பெயர், அடையாள எண் மற்றும் போட்டோ இணையதளத்தில் உள்ளன. ஒரு சேவைக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன், சர்வீஸ் கோட் வாடிக்கையாளருக்கும் நமக்கான சேவையைத் தரும் ஏஜென்ட்டுக்கும் தகவல் தரப்படுகிறது. வாடிக்கையாளருக்கு வரும் கோடில் ஏஜன்ட்டின் பெயர், ஐடி, போட்டோ ஆகியவை இருக்கும். ஏஜென்ட் வந்தவுடன் அவருடன் வாடிக்கையாளர் இந்த கோடை சரிபார்த்த பின், தரவிரும்பும் ஆவணங்களை ஒரு கவரில் போட்டு சீல் செய்து, அதன் மேற்புறம் வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், வாடிக்கையாளர் பெயர், ஆவணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஏஜன்ட்டிடம் தர வேண்டும். உடனே அவர் வங்கி அளித்திருக்கும் சாதனத்தில் ``ஆவணங்கள் பெறப்பட்டன” எனும் பட்டனை அழுத்தி வங்கிக்குத் தெரிவிப்பார். ஆவணங்கள் வங்கியைச் சென்றடைந்த விவரமும் எஸ்.எம்.எஸ் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப் படுகிறது.
இந்த கொரோனா காலத்தில் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்ப்பது, வங்கிகளில் கூட்டத்தைக் குறைக்கவும் இந்த ‘வாசலில் வங்கி’ சேவை உறுதுணையாக இருக்கும்!
மதியம் 3 மணி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் அன்றே செயல்படுத்தப் படுகின்றன. அதன்பின் பெறப்பட்டவை அடுத்த வேலை நாளன்று செயல்படுத்தப்படு கின்றன. செக்குடன் இணைக்க வேண்டிய வங்கிச் சலான் வாடிக்கையாளரிடம் இல்லா விட்டால், ஏஜன்ட் தரும் பொதுச் சலானை உபயோகிக் கலாம். அந்தச் சலான் எல்லா வங்கிக் கிளைகளிலும் செல்லுபடி ஆகும்.
எந்தெந்த விதங்களில் நன்மை?
இந்த `வாசலில் வங்கி’ வசதி, முக்கியமாக சீனியர் சிட்டிசன்கள், மாற்றுத் திறனாளிகள், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள், வங்கிக்குப் போக நேரமில்லாத அளவு பிசியாக இருக்கும் கடைக்காரர்கள் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தக் கொரோனா காலத்தில் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்ப்பது, வங்கிகளிலும் வாகனங்களிலும் கூட்டத்தைக் குறைப்பது போன்ற செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
குறைபாடு என்ன?
இன்றைய காலகட்டங்களில் தகவல் திருட்டு (Data Leakage) பரவலாக நடைபெறுகிறது. சமீபத்தில்கூட பிக் பாஸ்கெட் நிறுவனத்தில் தகவல் திருட்டு நேர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த `வாசலில் வங்கி’ முறையில், ஒருவரின் எல்லா பொதுத்துறை வங்கிகளிலும் இருக்கக்கூடிய கணக்குகள், அவற்றின் நம்பர்கள் போன்ற முக்கியமான தகவல்கள் பொதுவெளியில் வருகின்றன. இதை வங்கிகளே தங்கள் ஊழியர்கள் மூலம் செயல்படுத்தாமல், ஒரு தனியார் ஏஜென்சியைப் பயன்படுத்தி செயல்படுத்துவதால் நம்பகத் தன்மை குறைவதாக எண்ணுவோரும் உண்டு.
மேற்கண்ட நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.