நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதில் இருக்கும் ஆபத்துகள்..!

வங்கி ஊழியர்கள் போராட்டம்...
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கி ஊழியர்கள் போராட்டம்...

வங்கி

தற்போது நடைபெற்றுவரும் நாடாளு மன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயம் ஆக்குவதற்கான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் தனியாருக்குத் தரப்படும் அபாயம் இருப்பதாக வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கிகளைத் தனியார்மயப்படுத்த மத்திய அரசாங்கம் ஏன் முயற்சி செய்கிறது, வங்கி தனியார் மயத்தில் உள்ள பாதகங்கள் என்னென்ன என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் கேட்டோம்.

``தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கிகள் கம்பெனி சட்டம் 1970, 1980 மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, ‘இந்த நிதி ஆண்டுக்குள் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும்’ என்ற அரசின் நோக்கத்தை அறிவித்தார். தற்போது கொண்டு வரப்படவுள்ள சட்டத் திருத்தத்தின் மூலமாக அரசு வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்குகள் 51 சதவிகிதத்துக்குக் கீழே குறையும். அது 33% ஆகலாம் அல்லது 26% ஆகலாம் என்று இரு பேச்சுகள் உள்ளன. அரசின் பங்கு முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்படலாம் என்றும்கூட ஒரு பேச்சு உள்ளது. எதுவாக இருந்தாலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு விட்டால், இரண்டு வங்கிகள் மட்டுமல்ல, தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் எஸ்.பி.ஐ தவிர, மற்ற 11 அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடைத்துவிடும். பின்னர் நாடாளு மன்றத்தை நாடாமலேயே வெறும் அரசு ஆணையின் மூலமாகவே 11 வங்கிகளையும் தனியார்மயமாக்கிவிட முடியும்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதில் இருக்கும் ஆபத்துகள்..!

தனியார்மயம் ஏன்?

பொதுத்துறை வங்கிகள் நஷ்டம் அடை வதைத் தடுக்கவே அவற்றைத் தனியார் மயமாக்குகிறோம் என்கிறார் மத்திய நிதி அமைச்சர். அதில் கொஞ்சம்கூட உண்மை யில்லை. கடந்த ஏழு ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் அரசு வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.11,10,913 கோடி. வாராக்கடன்களுக்காக லாபத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ரூ.12,38,346 கோடி. இதில் 90% பெருங்கடனாளிகளின் வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டது. நிகர நஷ்டம் ரூ.1,27,433 கோடி. பெருங்கடனாளி களுக்கான ஒதுக்கீடுதான் நிகர நஷ்டத்துக்குக் காரணம். இத்துடன் ரூ.8,10,262 கோடி இந்த ஏழாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதிலும் 90% பெருங்கடனாளிகளின் கடன் தள்ளுபடியே ஆகும்.

பெரும் கடனாளிகளுக்குக் கடன் வழங்கும் கொள்கையும், கடன் வசூல் கொள்கையும் அவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த அளவு சொத்து அடமானம் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கும் கொள்கையும், மென்மை யான கடன் வசூல் சட்டங்களுமே இந்தப் படுமோசமான நிலைக்குக் காரணம். இதில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வங்கி ஊழியர் இயக்கம் நீண்ட நாள்களாகப் போராடி வருகிறது.

தனியார் Vs பொதுத்துறை வங்கிகள்!

நமது நாட்டில் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் இருந்தவரை விவசாயம், சிறு தொழில், வேலைவாய்ப்பு, கட்டுமானம், ஏற்றுமதி ஆகியவை புறக்கணிக்கப் பட்டன. பெரிய தனியார் வங்கிகள் எல்லாம் கார்ப்பரேட் வசம் இருந்தன. அபோது தங்கள் வியாபாரத் தேவை களுக்கு மட்டுமே கடன் கொடுத்துவந்தன. 1960-களில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 44% அளவுக்கு பங்களிப்பு செய்த விவசாயத் துறைக்குத் தனியார் வங்கிகள் வழங்கிய கடன் 2% மட்டுமே. 1969-க்கு முன்பாக 559 தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் தாங்கள் போட்டு வைத்திருந்த வைப்புத் தொகையை பெரும்பாலான மக்கள் இழந்தனர். 1969-ல் அரசு வங்கிகள் உருவான பின்புதான் விவசாயம், சிறுதொழில், சுயதொழில் ஆகியவற்றுக்கு கடன் வழங்கப் பட்டது. மக்களின் சேமிப்பு பாதுகாக்கப்பட்டது.

சி.பி.கிருஷ்ணன்
சி.பி.கிருஷ்ணன்

ஆனால், அதன் பின்பும் 25 தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றைப் பொதுத்துறை வங்கிகள்தான் தங்களோடு இணைத்துக்கொண்டு காப்பாற்றின. பேங்க் ஆஃப் தஞ்சாவூர்- இந்தியன் வங்கியுடன், பேங்க் ஆஃப் தமிழ்நாடு - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன், பேங்க் ஆஃப் கொச்சின் - ஸ்டேட் வங்கியுடன், குளோபல் டிரஸ்ட் பாங்க் - ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸுடன் இணைக்கப் பட்டன. தனியார் வங்கிகள் ஏற்படுத்திய அத்தனை நஷ்டத்தையும் பொதுத்துறை வங்கிகள்தான் தாங்கின. இதன் காரணமாகவே திவாலான தனியார் வங்கிகளில் மக்களின் சேமிப்பு பணம் காப்பாற்றப் பட்டது. அந்த வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களின் வேலையும் காப்பாற்றப்பட்டது.

1992-ல் 10 புதிய தனியார் வங்கிகள், 2002-ல் 2 புதிய தனியார் வங்கிகள், 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்குப் பின்னர் 22 புதிய தனியார் வங்கிகள் தொடங்கப்பட்டன. இந்த வங்கிகள் எதுவும் குறைந்த வட்டியில், பிணை இல்லாமல் சாதாரண மக்களுக்குக் கடன் கொடுப்பதில்லை. மாறாக, புதிய சிறிய தனியார் வங்கிகள் ஆண்டுக்கு 24% வரை கடனுக் கான வட்டியாக வசூலிக்கின்றன. யெஸ் வங்கி திவால் நிலைக்குச் சென்று 2020 மார்ச் 5-ம் தேதி அதன் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யும்தான் அவ்வங்கியைத் தற்போது தூக்கி நிறுத்தி வைத்துள்ளன.

ஜன்தன் கணக்கு உட்பட மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் பொதுத்துறை வங்கிகள் மூலமே நிறைவேற்றப் படுகின்றன. இந்தத் திட்டங்களைப் பற்றி எல்லாம் தனியார் வங்கிகள் கண்டுகொள்வதே இல்லை.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் ஆக்குவதில் இருக்கும் ஆபத்துகள்..!

தனியார்மயமானால் என்னவாகும்?

அரசு வங்கிகள் தனியார்மய மானால் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு முழுமையான பாதுகாப்பு இருக்காது. அரசு வங்கிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை உள்ளது. அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டவை. ஆனால், தனியார் வங்கிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. அவற்றில் வெளிப்படைத்தன்மை கிடையாது. அத்துடன், வங்கிப் பணி நியமனத்தில் இப்போது பின்பற்றப்படும் எந்த நடை முறையும் பின்பற்றப்படாது.

கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயரும். ஏழை மக்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படும். சுயஉதவிக் குழுப் பெண்கள், சிறிய தனியார் வங்கிகள், கந்துவட்டிக் காரர்கள் ஆகியோரை நோக்கித் தள்ளப்படுவார்கள். சிறு, குறுந்தொழில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும். இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டுமானால், அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படக் கூடாது. மாறாக, அரசு வங்கிகள் பலப்படுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் வராக் கடன்கள் கறாராக வசூலிக்கப்பட வேண்டும்

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகிய மூன்று வங்கிகளை முதல் கட்டமாகத் தனியார்மயம் ஆக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. மத்திய அரசாங்கம் தனியார்மய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், வங்கித்துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராடவே செய்வார்கள்’’ என்றார்.

வங்கிகளைத் தனியார்மயமாக்கும் விஷயத்தில் மத்திய அரசாங்கம் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பதே நல்லது!

தாமஸ் ஃபிராங்கோ
தாமஸ் ஃபிராங்கோ

கடன் வழங்குவதில் முன்னிலை!

அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃபிராங்கோ, “தொழில் கடன், சுயதொழில் குழுக்களுக்கான கடன், கல்விக் கடன், விவசாயக் கடன் என மக்களுக்கான பெரும்பாலான கடன்களை வழங்குவது பொதுத்துறை வங்கிகள்தான். 2020-ம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியிருக்கும் மொத்தக் கடன் ரூ.63.71 லட்சம் கோடி. அதே காலகட்டத்தில், தனியார் வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்தக் கடன் தொகை ரூ.37.07 லட்சம் கோடி. அதேபோல, பொதுத்துறை வங்கிகளில்தான் மக்கள் தங்களின் பணத்தை அதிகமாக இருப்பு வைக்கிறார்கள். மார்ச் 2020-ம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி மக்கள் பொதுத்துறை வங்கிகளில் இருப்பு வைத்திருக்கும் தொகையின் மொத்த மதிப்பு ரூ.93.43 லட்சம் கோடி. அதே காலகட்டத்தில், தனியார் வங்கிகளில் மக்கள் இருப்பு வைத்துள்ள தொகையின் மொத்த மதிப்பு ரூ.40.40 லட்சம் கோடி. மேற்கண்ட அம்சங்களைப் பரிசீலிக்கும்போது, மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் தனியார் வங்கிகளைவிட, பொதுத்துறை வங்கிகளே சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்றார்.