வங்கிகளில் கடன் வாங்க பலரும் படாதபாடுபடுகிற வேளையில், ஒரே குடோனை முன்பக்கம் காட்டி பல கோடி ரூபாயும், பின்பக்கம் காட்டி பல கோடி ரூபாயும் கடனாகப் பெற்று, பெரும் மோசடி செய்திருக்கிறார், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கூகையூர் சாலை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர். எப்படி நடந்தது இந்த மோசடி என்று பார்ப்போம்.
இவர், `சரண்யா கடலை உடைப்பு மற்றும் ஆயில் மில்'லை சொந்தமாக வைத்து நடத்தி வந்திருக்கிறார். கள்ளக்குறிச்சி பகுதியில் 36 குடோன்களை வாடகைக்கு எடுத்த இவர், அப்பகுதி விவசாயிகளின் நிலக்கடலைகளை குடோன்களில் வைத்து ஆத்தூர் ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சின்னசேலம் லட்சுமி விலாஸ் வங்கியில் கோடிகளில் அடமானக் கடன் பெற்றுள்ளார். அவருடைய மனைவி தங்கம், மகன் பாலுசாமி, மகள் சரண்யா, தந்தை தங்கவேல், 15 உறவினர்கள் மற்றும் 28 பணியாளர்கள் மீது என மொத்தம் 46 நபர்களின் பெயர்களில் ரூ.24,33,64,251 ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார். இந்தக் கடன் தொகையைப் பெறுவதற்காகப் பல்வேறு ஏமாற்று வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

இது குறித்து, சின்னசேலம் பகுதிகளில் இயங்கிவரும் நேஷனல் கொல்லாட்டரல் மேனேஜ்மென்ட் சர்வீஸ் லிட்., (National Collateral Management Service Ltd) என்கிற தனியார் குடோனை நிர்வகித்து வரும் ஜெயராமன் என்பவர், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்.
மோசடி செய்யப்பட்ட தொகை அதிகமாக இருந்ததால், இந்த வழக்கு விசாரணையை சின்னசேலம் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ். அதைத் தொடர்ந்து, இவ்வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பாலசுப்ரமணியன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின்போது நூதன மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது, குடோன்களில் கடலை மூட்டைகளையே வைக்காமல், என்.சி.எம்.எல் (National Collateral Management Service Ltd) பணியாளர்கள் உதவியுடன் கடலை மூட்டைகளை குடோன்களில் வைத்ததாகச் சொல்லி வங்கிகளில் அடமானக் கடன் பெற்றிருக்கிறார். அதே போல், குடோன்களில் குறைவான மூட்டைகளை வைத்துவிட்டு, என்.சி.எம்.எல் பணியாளர்கள் உதவியுடன் அதிகமான மூட்டைகளை வைத்ததாகக் கூறி கடன் பெற்றிருக்கிறார். மேலும், குறைவான அளவீடு கொண்ட குடோன்களில் அதிகமான மூட்டைகளை வைத்ததாகவும் கூறி கடன் பெற்றிருக்கிறார்.
இது மட்டுமன்றி, சின்னசேலம் லட்சுமி விலாஸ் வங்கியில் பெற்ற கடனை முழுவதும் மறைத்து, அதே பொருள்களைக் கணக்கு காட்டி ஆத்தூர் ஆக்ஸிஸ் வங்கியில் கடன் பெற்றிருக்கிறார். சின்னசேலம் பகுதியில் உள்ள குடோன்களில் இருந்து வேர்க்கடலை மூட்டைகளைத் திருட்டுதனமாக எடுத்துச் சென்று வேறோரு குடோன்களில் வைத்து, அதன்மூலம் கடன் பெற்றிருக்கிறார் பெரியசாமி.
ஒரு குடோனின் முன்பக்க வாயிற்படியைக் காண்பித்து ஒரு கடனும், பின்பக்க வாயிற்படியைக் காண்பித்து மற்றொரு கடனும் பெற்றிருக்கிறார். இதே போல, குடோன்களில் நான்கு புறமும் அடுக்கி வைத்துள்ள மூட்டைகளை தனித்தனியாகக் கணக்கு காட்டி, கடன் பெற்றிருக்கிறார். முக்கியமாக, பெரியசாமி தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மட்டுமே அதிகமான தொகைகளை கடனாகப் பெற்றிருப்பது தெரிய வருந்திருக்கிறது.

இந்த குற்றச்செயலின் மூலமாக சுமார் 24,33,64,251 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறார். எனவே, பெரியசாமி, பாலுசாமி என்பவர்களையும், இவர்களுக்குத் துணையாக இருந்த கிருஷ்ணன், ரமேஷ் என்பவர்களையும் கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார், அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சிறப்பான முறையில் விசராணை செய்து, நான்கு குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்த குற்றப்பிரிவு டி.எஸ்.பி பாலசுப்பரமணியன் தலைமையிலான காவல் துறையினருக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.