Published:Updated:

Doubt of Common Man: சிபில் ஸ்கோர் என்பது என்ன? இந்த ஸ்கோர் எதற்குப் பயன்படுகிறது? - முழு விளக்கம்

சிபில் ஸ்கோர்

சிபில் வழங்கும் கடன் மதிப்பெண் (CIBIL Score) என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களாக அமைந்திருக்கின்றன.

Published:Updated:

Doubt of Common Man: சிபில் ஸ்கோர் என்பது என்ன? இந்த ஸ்கோர் எதற்குப் பயன்படுகிறது? - முழு விளக்கம்

சிபில் வழங்கும் கடன் மதிப்பெண் (CIBIL Score) என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களாக அமைந்திருக்கின்றன.

சிபில் ஸ்கோர்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில், சிபில் ஸ்கோர் என்பது என்ன, இந்த ஸ்கோர் எதற்குப் பயன்படுகிறது போன்ற கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்தனர் அதற்கான முழுமையான பதிலைப் பார்ப்போம்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Credit Information Bureau (India) Limited எனும் நிறுவனம் (தற்போது இது TransUnion CIBIL Limited என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது) தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துக் கடன் தொடர்பான செயல்பாடுகளின் பதிவுகளைப் பராமரிக்கும் பணியைச் செய்துவரும் ஒரு கடன் தகவல் நிறுவனம் ஆகும். வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் கடன் தகவல்களை இந்நிறுவனத்திற்கு வழங்குகின்றன.

TransUnion CIBIL Limited
TransUnion CIBIL Limited

இந்தத் தகவல்களின் அடிப்படையில் இந்நிறுவனம், கடன் தகவல் அறிக்கையினை மாதந்தோறும் வெளியிடுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்குக் கடன் குறித்த மதிப்பெண்ணும் அளிக்கிறது. இந்தக் கடன் மதிப்பெண் இந்நிறுவனத்தின் சுருக்கப் பெயரான CIBIL எனும் பெயரில், அதாவது சிபில் ஸ்கோர் என்று அழைக்கப்படுகிறது.

Doubt of common man
Doubt of common man

சிபில் வழங்கும் கடன் மதிப்பெண் (CIBIL Score) என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களாக அமைந்திருக்கின்றன. இந்த மதிப்பெண் வெற்று எண்களாக இல்லாமல், விண்ணப்பதாரருடைய கடன் தகுதியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கிறது. கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடனுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் சிபில் கடன் மதிப்பெண்ணையே முதன்மைத் தகுதியாக எடுத்துக் கொள்கின்றன.

சிபில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடன் பெறும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர் அந்தக் கடனைத் திரும்பச் செலுத்தும் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டு சிபில் கடன் மதிப்பெண் வழங்கப்படுகிறது. கடனைத் திரும்பச் செலுத்தும் முறை, கடனின் வகை, கடனின் கால அளவு, சம்பளத்துக்கும் கடன் தொகைக்கும் இடையே உள்ள வேறுபாடு, கடன் அட்டையினை மாதந்தோறும் பயன்படுத்தும் அளவு, ஒரு கடனுக்கும் மற்றொரு கடனுக்குமான கால இடைவெளி என கடன் தொடர்புடைய ஒவ்வொன்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர்

சிபில் நிறுவனம் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை மட்டும் ஆராய்வதில்லை. வங்கிகளில் கடந்த காலங்களில் காலம் தாழ்த்திச் செலுத்திய சம மாதாந்தர தவணை (Equated Monthly Installment – E.M.I) நிலுவைத் தொகைகள், கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய நிகழ்வுகள், நகைக்கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன் திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்களை வங்கிகளிடமிருந்து பெற்று மதிப்பிட்ட பின்னரே கடனுக்கான மதிப்பெண்ணை வழங்குகிறது. 

சிபில் மதிப்பெண்  

சிபில் கடன் மதிப்பெண் 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இலக்க எண்ணில் 750-க்கு மேல் இருந்தால் மிக எளிதாகக் கடன் கிடைக்கும். வட்டியும் மிகக் குறைவாக இருக்கும். அதாவது, 750 மற்றும் 750-க்கு மேல் மதிப்பெண் வைத்திருந்தால், கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியுடைய சிறந்த வாடிக்கையாளர் என்று பொருள்.

700 முதல் 749 வரையிலான மதிப்பெண் உடையவர்களுக்குக் கடன் கிடைப்பதில் இடையூறுகள் எதுவும் இருக்காது. குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 650 முதல் 699 வரையிலான மதிப்பெண் உடையவர்களுக்குக் கடன் கிடைக்கும். வட்டி விகிதம் சிறிது கூடுதலாக இருக்கும். 550 முதல் 649 வரையிலான மதிப்பெண் உடையவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதற்குத் தயங்கும்.

ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கக்கூடும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமானதாகத்தான் இருக்கும். 300 முதல் 549 வரையிலான மதிப்பெண் உடையவர்களுக்கு வங்கிகள் மட்டுமன்றி தனியார் நிதி நிறுவனங்கள்கூட கடன் வழங்க முன்வராது. இம்மதிப்பெண் உடையவர்கள், கடன் பெறும் தகுதியற்றவர் என்பதாகவே பொருள்.

சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர்

மேலும் சில அமைப்புகள்

இந்தியாவில் ரிசர்வ் வங்கியால் டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (TransUnion CIBIL Limited) மட்டுமன்றி, ஈக்குயிபேக்ஸ் (Equifax), எக்ஸ்பீரியன் (Experian), சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க் (CRIF High Mark) என்கிற மூன்று நிறுவனங்களும், நுகர்வோர் கடன் மதிப்பெண் வழங்கும் அமைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தாங்கள் வழங்கும் கடன்கள் மற்றும் முன்பு வழங்கியிருக்கும் கடன்கள் குறித்த தகவல்களை ஒவ்வொரு மாதமும் மேற்காணும் நான்கு நிறுவனங்களுக்கும் வழங்கிட வேண்டும்.

இந்த நான்கு அமைப்புகளும் தாங்கள் பெற்ற அனைத்துத் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுடன், இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான கடன் தகவல் அறிக்கைகளை வழங்குகின்றன. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனி நபர் / நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் போது, இவ்வமைப்புகளின் வலைப்பக்கங்களிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றன. 

TransUnion CIBIL Limited
TransUnion CIBIL Limited

இந்த நான்கு அமைப்புகளில், டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (TransUnion CIBIL Limited) நிறுவனம் பழைமையானது என்பதுடன், அதிகமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்பதால், பெரும்பான்மையானவர்களால் சிபில் கடன் மதிப்பெண்ணே அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கிறது.  

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!