இன்றைய சூழ்நிலையில் ஆன்லைனின் பண மோசடிகள் அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்போல் மக்களைத் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் வங்கிக்கணக்கின் விவரங்களைக் கேட்டு பணம் திருடப்படுகிறது. ஏ.டி.எம்-மில் செலுத்தப்படும் மக்களின் பணமும் கொஞ்சம் கவனம் குறைந்தால், வேறுவிதமாகக் கொள்ளையடிக்கப்படுகிறது.
இது போல் பல்வேறு விதமாக மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதைப்பற்றியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகையில், மக்கள் சுதாரிப்பதற்குள்... ஏமாற்றும் கூட்டம் தனது பாதையை வேறு விதமாக மாற்றி புதிய திட்டத்துடன் கொள்ளை அடிக்கிறது.
அந்தவகையில், இப்போது ஆன்லைனில் ஆர்டர் பண்ணாத பொருள்களுக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல வங்கியான ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் ஆன்லைன் ஆர்டர்களில் பண மோசடி செய்யப்படுவதாக எச்சரித்துள்ளது.
``வாடிக்கையாளர்களே, நீங்கள் ஆர்டர் செய்யாத பொருள்கள் உங்களுக்கு டெலிவரி செய்யப்படலாம். ஆர்டர் வந்திருப்பதாக யாராவது தொலைபேசியில் அழைத்து தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்று பேசுவார்கள்.
அப்போது, ``நாங்கள் எந்தப் பொருளும் ஆர்டர் செய்யவில்லையே" என்று நீங்கள் கூறினால், அந்த ஆர்டரை ரத்து செய்ய தங்களின் பிறந்த தேதி, கிரெடிட் கார்ட் காலாவதியாகும் தேதி, பாஸ்வேர்ட் ஆகிய விவரங்களை கேட்பார்கள். அப்படி கேட்டால் எந்தத் தகவலையும் அந்த நபரிடம் சொல்ல வேண்டாம். உடனே சைபர் கிரைமிடம் புகார் செய்யுங்கள். அல்லது 1930 ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொள்ளுங்கள். ஐசிஐசிஐ பேங்கின் பணியாளர்கள் தங்களுக்கு உதவுவார்கள்” என்று ஐசிஐசிஐ பேங்க் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.