
தங்கம்
மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் (Soverign Gold Bonds) விற்பனை இந்த மாதம் 8-ம் தேதி தொடங்குகிறது. இந்த கோல்டு பாண்டுகளில் ஜூலை 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்கேற்ற திட்டம் இது. இதில், ஒரு கிராம் அளவுக்குக்கூட முதலீடு செய்யலாம். ஒரு நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். இதனைக் காகித வடிவில் அல்லது டீமேட்மூலம் முதலீடு செய்யலாம். ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலையானது, 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையை ஒட்டியிருக்கும்.
ஆண்டுக்கு 2.5% வட்டி
இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 2.5% வட்டி கிடைக்கும். இந்த வட்டி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த வருமானத்துக்கு வரி உண்டு. ஆனால், முதலீட்டு நோக்கில் தங்க நகை அல்லது தங்க நாணயமாக வாங்கும்போதுள்ள செய்கூலி, சேதார இழப்பு இதில் இல்லை.
இந்தத் தங்கப் பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் (என்.எஸ்.இ) விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்த பாண்டின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள் என்றாலும் 5, 6, 7-வது ஆண்டுகளில் இதிலிருந்து வெளியேற முடியும். அப்போது ஆதாயத்துக்கு வரி கட்டவேண்டிவரும். பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, பாண்டுகள்மீது வர்த்தகம் நடப்பதால், நமக்குப் பணம் தேவைப்படும்போது விற்க முடியும். அப்போது லாபத்துக்கு வரி கட்டவேண்டிவரும்.
மூலதன ஆதாய வரிச் சலுகை
எட்டு ஆண்டு முதிர்வுக்கு விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு, தனிநபர்களுக்கு மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டாக்ஸ்) கிடையாது. இந்தத் தங்கப் பத்திரங்களைக் கடனுக்கு ஜாமீனாகக் கொடுக்கலாம்.
ரூ.20,000 வரையிலான முதலீட்டை ரொக்கப் பணம்மூலமும் மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட முதலீட்டைக் வரைவோலை, காசோலை, இணையவழிப் பரிமாற்றம்மூலம்தான் மேற்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் பாண்ட் முதலீட்டைத் திரும்பப் பெறும்போது தங்கமாகத் தரமாட்டார் கள். தங்கத்தின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால்தான் இந்த நிபந்தனை. தங்கப் பத்திரங்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தில் தங்கத்தின் சராசரியான விலை அடிப்படையில் பணமாகத் தருவார்கள்.
டீமேட் கணக்குமூலம் இதனை வாங்கி யிருந்தாலும் இந்த பாண்டுகளை அவசரத்துக்கு விற்றுப் பணமாக்குவது கடினம். காரணம், குறைவான எண்ணிக்கையில்தான் இந்த பாண்டுகள் விற்கப்படுகின்றன அல்லது வாங்கப்படுகின்றன. காகித வடிவில் முதலீடு செய்யும்போது எட்டு ஆண்டுகளில் கழித்தால்தான் அதிக லாபகரமாக இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், குறைந்தது எட்டு ஆண்டுகள் கழித்துத்தான் முதலீடு செய்த பணம் வேண்டும் என்கிறவர்கள் மட்டும் இந்தத் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது.
கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி
ஆன்லைன்மூலம் முதலீடு செய்யும்போது, கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் ஏதும் கிடையாது. ஜிஎஸ்டி கிடையாது. எட்டு ஆண்டுக் காலத்தில், தங்கத்தின் விலை ஏற்றத்துடன், ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கும் என்பதால், கோல்டு பாண்ட் இரட்டை ஆதாயத்தை அளிக்கிறது.