பண விஷயங்களில் தனிநபரின் ஒழுக்கத்தை கணக்கீடு செய்யும் முக்கிய அளவுகோலாக கிரெடிட் ஸ்கோர் விளங்குகிறது. இந்த கிரெடிட் ஸ்கோரை அளவீடாக கொண்டுதான் ஒருவருக்கு தற்போது நிதி நிறுவனங்கள் கடன், கடன் அட்டை போன்றவற்றை வழங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் ஸ்கோர் அறிமுகப்படுத்தப்பட்ட போது இதனை பற்றிய புரிதல் பெரும்பாலானவர்களுக்கு இல்லாமல் இருந்தது. இதனால் கடன்கள் வாங்கி சரிவர திரும்பி செலுத்தாமல் பலர் இருந்தனர். இதனால் பலரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது கணிசமான நபர்களுக்கு கிரெடிட் ஸ்கோருடைய முக்கியத்துவம் புரியத் தொடங்கியுள்ளது. பைசா பஜார் போன்ற தனியார் இணையதளங்கள் மற்றும் கிரெடிட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வலை தளமான www.cibil.com இணையதளத்தில் கேட்கப்படும் சரியான தகவல்களை கொடுத்து ஒருவரின் கடன் குறியீட்டு ரிப்போர்ட்டை பெற முடியும்.
பைசா பஜார் இணைய தளத்தில் கிரெடிட் ஸ்கோரை பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. பெரிய நகரங்களில் மட்டும் இல்லாமல் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கூட பலர் இந்த இணையதளத்தில் இருந்து தமது கிரெடிட் ஸ்கோரை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அந்த இணையதள தரவுகளின் படி 2016-ம் ஆண்டு 33% வாடிக்கையாளர்கள் மட்டுமே சிறு நகரம் மற்றும் கிராமங்களில் கிரெடிட் ஸ்கோர் விவரங்களை தரவிறக்கம் செய்திருந்தனர். ஆனால் அதுவே சென்ற ஆண்டின் புள்ளி விவரத்தின் படி 75% வாடிக்கையாளர்கள் சிறு நகரம் மற்றும் கிராமங்களில் தமது விவரங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் கிரெடிட் ஸ்கோருடைய முக்கியத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியத் தொடங்கியுள்ளது என்பதை நாம் உணரலாம்.
கிரெடிட் ஸ்கோர் என்பது பொதுவாக 300 முதல் 900 என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 500 வரை இருந்தால் அவர் கடந்த காலங்களில் பெற்ற கடனை அடைக்காமல் விட்டுவிட்டார் என்று அர்த்தம். இந்த வகை வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடைப்பது சிரமமானது.

ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 500 முதல் 700 என்று அளவிற்கு இருந்தால் அந்த வாடிக்கையாளர் சில தவறுகள் தமது கடன் செயல்பாடுகளில் செய்திருக்கிறார் என்று அர்த்தம். அதிகமாக கடன் பெற முயற்சிப்பது, கடனை முழுவதும் அடைக்காமல் ஒன் டைம் செட்டில்மெண்ட் மூலம் கடனை அடைத்தது போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் இந்த படிநிலைகளில் இருக்கலாம். இவருக்கு கடன் கொடுப்பது சற்று ரிஸ்க் அதிகம் என்று வங்கிகள் நினைக்கும். அதனால் கடன் கொடுக்கும் பொழுது மேலும் பல தகவல்களை கேட்டுப் பெற்று தகுந்த பரிசீலனைக்கு பிறகு மட்டுமே கடன் தொகை அளிக்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் கடனுக்கான வட்டியும் கூட சற்று அதிகமாக இருக்கலாம்.
ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் அவருக்கு கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. 700 முதல் 900 புள்ளிகள் வரை கடன் குறியீட்டு எண்ணை ஒருவர் வைத்திருந்தால் அவர் நம்பத்தகுந்த வாடிக்கையாளர் என்று வங்கியால் கருதப்படுவார். அதுவே நல்ல கிரெடிட் ஸ்கோர் ஆகும். இவ்வாறு நகரங்களில் வசிக்கும் 43% மக்கள் 700 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அதுவே சிறு நகரம் மற்றும் கிராமங்களில் 700 புள்ளிகளுக்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களின் அளவு 36% ஆக உள்ளது.

இதுபோன்று ஒவ்வொருவரும் தமது கிரெடிட் ஸ்கோரை தரவிறக்கம் செய்து கண்காணித்து வருவது நல்ல பலனைத் தரும். கடனை திரும்பச் செலுத்துவதில் செய்யும் சிறு தவறுகள் பெருமளவில் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அதுபற்றிய விவரங்களை அறியாமல் இருந்தால் ஒருவருக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவர் தனது கிரெடிட் ஸ்கோரை தரவிறக்கம் செய்து கண்காணித்து வருவது இதுபோன்ற தவறுகளில் இருந்து காப்பாற்றும்.
கிரெடிட் ஸ்கோர் குறையும்போது அதனை தெரிந்து கொள்வதால் விரைவாக அதனை சரி செய்துவிட முடியும். ஒருவரின் ஆரோக்கியத்திற்கு உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியமாகும். இத்தகைய முக்கியமான கிரெடிட் ஸ்கோரை கண்காணித்து சரியான முறையில் பேணி வருவது நம் அனைவரின் கடமையாகும்.