வீடு வாங்க, மனை வாங்க வீட்டை மேம்படுத்துவதற்கு, வீட்டைச் சீரமைப்பதற்கு இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் அதன் பயனர் களுக்குக் கடன் வழங்கி வருகிறது.
கடனுக்கான வட்டித் தொகையை இந்நிறுவனம் முதன்மைக் கடன் வட்டி விகிதத்தை வைத்தே நிர்ணயிக்கிறது. இந்நிலையில் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் `வீட்டுக் கடன்களுக்கான முதன்மைக் கடன் வட்டி விகிதத்தில்’ (Prime Lending Rate) மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் இணையதளத்தின் படி, சம்பளம் வாங்குபவர்களுக்கும், புரொஃபஷனல் நபர்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கும் பட்சத்தில், 15 கோடி வரையிலான கடனுக்கு, வட்டி விகிதமானது 8.30 சதவிகிதத்தில் இருந்து விதிக்கப்படும்.
750 முதல் 799 கிரெடிட் ஸ்கோர் கொண்ட சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் புரொஃபஷனல் நபர்களுக்கு, 5 கோடி கடனுக்கு 8.40 சதவிகிதம் வரை கடன் வட்டியும், 5 கோடிக்கு மேல் 15 கோடி வரையிலான கடனுக்கு, 8.60 சதவிகிதம் வட்டி விகிதமும் தொடங்கும்.
700 முதல் 749 சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 50 லட்சம் கடனுக்கு, வட்டி விகிதம் 8.70 சதவிகிதம் வரையும், 50 லட்சத்தில் இருந்து 2 கோடி வரையிலான கடனுக்கு 8.90 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது எல்.ஐ.சி.
இந்நிலையில், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் முதன்மைக் கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து எல்.ஐ.சி ஹெச்.எஃப்.எல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்தியாவின் முன்னணி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அதன் முதன்மைக் கடன் வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான முதன்மை வட்டி விகிதம் 8.65 சதவிகிதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதம் 2022 டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.