நடப்பு
Published:Updated:

ஜாமீன் கையொப்பம்... கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

உறவினர் வாங்கிய வீட்டுக் கடனுக்கு ஜாமீன் கையொப்பம் இட்டிருக்கிறேன். இது என்னுடைய கிரெடிட் ஸ்கோரில் எதிரொலிக்குமா, நான் வீட்டுக் கடன் வாங்கும்போது இதுவும் கணக்கில் வருமா?

ராஜகோபால், மதுரை

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“நிச்சயமாக வரும். ஜாமீன் கையொப்பமிட்டுள்ள உங்களை `கேரன்டர்’ என்று காட்டுவதுடன், நீங்கள் யாருக்கு உத்தரவாதக் கையொப்பமிட்டிருக்கிறீர்களோ, அவருடைய வீட்டுக் கடன் விவரத்தையும் காட்டும். ஒருவேளை, அந்த வீட்டுக் கடனைச் செலுத்துவதில் குறைபாடுகள் இருந்தால், ஜாமீன் கையொப்பமிட்ட உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும். எனவே, இதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.”

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், த.முத்துகிருஷ்ணன்
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், த.முத்துகிருஷ்ணன்

பணி ஓய்வு பெற்றுள்ள நான், என்னிடம் இருக்கும் பணத்தின் ஒரு பகுதியைக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஐந்து ஆண்டுகால இலக்கு வைத்து முதலீடு செய்ய விரும்புகிறேன். நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களைக் கூறவும்.

சேதுராமன், செங்கல்பட்டு

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

‘‘பணி ஓய்வு பெற்றுள்ள நீங்கள், லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஆனால், இவற்றிலிருந்து ஆண்டுக்கு 6-7 சதவிகிதத்தைத் தாண்டி வருமானத்தை எதிர்பார்க்க இயலாது. நீங்கள், சீனியர் சிட்டிசன் சேவிங் திட்டத்திலும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலும் முதலீடு செய்வது நல்லது. இவற்றிலிருந்து ஓரளவு நல்ல வருமானத்தையும் முதலீட்டுக்கு உத்தரவாதத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.’’

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டில் எந்தெந்தத் தகவல் களைப் பார்க்க வேண்டும்?

திருப்பதி, புதுக்கோட்டை

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

‘‘ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டில் மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன.

அஸெட்: ஒரு நிறுவனத்தின் பொருளாதார மதிப்பீட்டை உருவாக்கக்கூடிய / உயர்த்தக்கூடிய சொத்துகள்.

நிதிப்பொறுப்புகள்: ஒரு நிறுவனத்தின் வங்கிக் கடன் உள்ளிட்ட நிதி தொடர்பான விவரங்கள்.

பங்கு மதிப்பு: பங்குதாரர்களின் வசமுள்ள பங்குகளின் மதிப்புகளை உள்ளடக்கிய நிறுவனத்தின் நிகர கணக்கீட்டு மதிப்பு.

ரெஜி தாமஸ், ஏ.ஆர்.வாசுதேவன்
ரெஜி தாமஸ், ஏ.ஆர்.வாசுதேவன்

இவற்றை ஆய்வுசெய்து ஒரு நிறுவனத்தின் செயல்பாடு எப்படி யிருக்கிறது எனக் கண்டறியலாம். ஒரு நிறுவனத்தின் வருவாயில் பற்றாக்குறை ஏற்படுவது, ஒரு பங்கிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மதிப்பு குறைவாக இருப்பது மற்றும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைந் திருப்பது போன்றவை நிறுவனத்தின் செயல்பாடு சரியாக இல்லை என்பதையே குறிக்கும்.’’

பங்குகளை டிரேடிங் செய்வதற்கு புரோக்கருக்குக் கொடுத்திருக்கும் பவர் ஆஃப் அட்டர்னியை கேன்சல் செய்வது எப்படி?

ராஜலட்சுமி, சென்னை

ஏ.ஆர்.வாசுதேவன், மண்டல மேலாளர், சி.டி.எஸ்.எல்

‘‘டிரேடிங் செய்வதற்கு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்த விவரங்களைக் குறிப்பிட்டு, அதை கேன்சல் செய்ய வேண்டும் என்று கேட்டு புரோக்கிங் அலுவலகத்துக்குக் கடிதம் எழுத வேண்டும். அவர்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்தபிறகு கேன்சல் செய்துவிடுவார்கள்.’’

கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்கா வில் பணியாற்றிவருகிறேன். இந்தியாவில் சொந்த வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

சரவணன், இ-மெயில் வழியாக...

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

‘‘நீங்கள் வெளிநாடுவாழ் இந்தியப் பிரஜையாக இருக்கும்பட்சத்தில், தாராளமாக இந்தியாவில் சொந்த வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் பெற முடியும். உங்களுக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க ஒருவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.’’

என் வயது 50. ஆறு மாதங்களுக்குமுன் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்துள்ளது. நான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

ராகவன், சென்னை

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

‘‘பைபாஸ் சர்ஜரி நடந்து ஆறு மாதமான சூழலில், ரிஸ்க்கைக் கருத்தில்கொண்டு பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் தருவதில்லை. டேர்ம் இன்ஷூரன்ஸ் தரலாம் எனக் கருதும் நிறுவனங்களும்கூட இதய நோய்க்கான ட்ரெட்மில்லில் ஓடுவது உள்ளிட்ட உடல்நலப் பரிசோதனைகளை நடத்தும். அந்தப் பரிசோதனை களில் தேறுவது மிகவும் கடினமானதாகவே இருக்கும். எனவே, டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைப்பதற்கு சாத்தியம் குறைவே.’’

ஆர்.செல்வமணி, கே.பி.மாரியப்பன், பி.கமலேசன்
ஆர்.செல்வமணி, கே.பி.மாரியப்பன், பி.கமலேசன்

பங்குகளை வாங்கி விற்பதன்மூலம் கிடைக்கக்கூடிய லாபத்தை மீண்டும் பங்குச் சந்தையிலேயே முதலீடு செய்தால் மூலதன ஆதாய வரி கட்டவேண்டி யிருக்குமா?

கிறிஸ்டோபர், நாகர்கோவில்

பி.கமலேசன், ஆடிட்டர்

‘‘பங்குச் சந்தையில் டிரேடிங் மூலம் கிடைக்கும் லாபத்தை மீண்டும் பங்குச் சந்தையிலேயே முதலீடு செய்வதற்கென தனிப்பட்ட வரிச் சலுகை எதுவும் கிடையாது. பங்கு வர்த்தகத்தின்மூலம் கிடைக்கும் வருமானம், உங்களின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, உங்களின் அடிப்படை வருமான வரி விகிதத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.”

ஹெல்த் பாலிசி எடுக்கும்போது மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு வயது வரம்பு உண்டா? குறிப்பிட்ட மருத்துவமனைகளில்தான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருக்கிறதா?

மணிகண்டன், திண்டிவனம்

எஸ். ஸ்ரீதரன், வெல்த் லேடர், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு 45 முதல் 50 வயது வரை நிறுவனங்களுக்கேற்ப வயதுக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

இதைவிடக் குறைந்த வயதிலேயே ஒருவருக்கு சர்க்கரை வியாதி போன்று ஏதாவது வியாதி இருப்பது தெரியவந்தால், அதைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதற்கென மருத்துவப் பரிசோதனைகள் செய்வார்கள்.

எஸ்.ஸ்ரீதரன், பி.ஆர்.டி. கோவர்தனன் பாபு
எஸ்.ஸ்ரீதரன், பி.ஆர்.டி. கோவர்தனன் பாபு

இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் சற்று அதிகரிக்கக்கூடும். மருத்துவப் பரிசோதனை மையங்களை அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமே குறிப்பிடும். அங்குதான் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.’’

டைவர்சிஃபைடு மற்றும் அக்ரசிவ் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் இந்த இரண்டுக்குமான வித்தியாசம் என்ன, இவற்றில் எது ரிஸ்க் குறைவானது?

ரஞ்சித், சென்னை

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

‘‘டைவர்சிஃபைடு ஃபண்டில் முழுமையாகப் பல்வேறு துறை நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும்.

முதலீட்டாளர்களின் நிதி பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பங்கு சார்ந்த ஆவணங்களிலும், கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்யப்படும். அக்ரசிவ் பேலன்ஸ்டு ஃபண்டில் பொதுவாக 65% பங்குகள், 35% கடன் சார்ந்த பத்திரங்கள் என்ற விகிதத்தில் முதலீடு செய்யப்படும்.

அக்ரசிவ் பேலன்ஸ்டு ஃபண்டுகள் இப்போது அக்ரசிவ் ஹைபிரீட் ஃபண்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ரிஸ்க் குறைவாக இருக்கும். வருமானமும் குறைவாகவே இருக்கும்.

எனினும், நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது என்றால், டைவர்சிஃபைடு ஃபண்டுகள் அதிக ரிஸ்க் என்றாலும், அதிக லாபம் தர வாய்ப்புள்ளது.’’

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com