புத்தாண்டு நெருங்கிவிட்டது, ஒவ்வோர் ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த ஆண்டுக்கான புதிய லாக்கர் விதி வழிகாட்டுதல்களை வெளியிடும். இதன்படி, சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2023-ம் ஆண்டுக்கான புதிய லாக்கர் விதி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது,
வங்கிகள் தங்களது லாக்கர் ஒப்பந்தங்களில் எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளை இணைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வங்கியின் ஒப்பந்த விதிமுறைகள் அதன் நலன்களை பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே தவிர, தேவைக்கு அதிகமான கடுமையுடன் இருக்கக் கூடாது.
வங்கிகள் ஏற்கெனவே தங்களுக்கு உள்ள வாடிக்கையாளர்களுடைய லாக்கர் ஒப்பந்தங்களை 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி அனைத்து வங்கிகளும், தங்களது வங்கிகளில் பாதுகாப்பு டெப்பாசிட் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய லாக்கர் ஒப்பந்தத்தை விநியோகிக்க வேண்டும்.
மத்திய வங்கியின்படி, கடன் வழங்கும் அனைவரும் ``IBA-வரைவு செய்யப்பட்ட மாதிரி லாக்கர்" ஒப்பந்தத்தைப் பயன்படுத்தலாம். அவர்களுடைய ஒப்பந்தம் புதிய அறிவுறுத்தல்களோடும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளோடும் இணங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் தங்களது பெட்டகங்களில் வைத்திருக்கும் அவர்களுடைய விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டாலோ, விபத்தால் சேதமடைந்தாலோ, அதன் வங்கிக் கட்டணத்தைவிட 100 மடங்கு கட்டணத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அனைத்து வங்கிகளும் தங்களது லாக்கர் அறையில் கண்டிப்பாக சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும். மேலும் சிசிடிவி பதிவுகளை வங்கிகள் 180 நாள்களுக்கு வைத்திருக்க வேண்டும். இது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில் உதவும்.

ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர்களைப் பயன்படுத்தும்போதும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில் அனுப்ப வேண்டும். இதன்மூலம் வங்கி மோசடிகளை தவிர்க்கலாம்.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புதியதாக லாக்கர்களை ஒதுக்கும்போதே டெர்ம் டெபாசிட்டை கோரலாம். இதை மூன்று ஆண்டுகளுக்கான லாக்கர் வாடகையாக வங்கிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், வங்கிகள் ஏற்கெனவே லாக்கர் வைத்திருப்பவர்களிடம் இந்த டெர்ம் டெபாசிட்டை கோர முடியாது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி 2023-ம் ஆண்டுக்கான புதிய லாக்கர் விதி வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.