Published:Updated:

கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா? #DoubtOfCommonMan

கடன்

தற்போது மாணவர்களால் எளிதில் பல லட்சங்கள் வரை கல்விக் கடனாகப் பெற முடிகிறது. ஆனால், கல்விக் கடன் பெறும் மாணவர்கள் பலரும் முறையாகத் திரும்ப செலுத்துவதில்லை.

Published:Updated:

கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா? #DoubtOfCommonMan

தற்போது மாணவர்களால் எளிதில் பல லட்சங்கள் வரை கல்விக் கடனாகப் பெற முடிகிறது. ஆனால், கல்விக் கடன் பெறும் மாணவர்கள் பலரும் முறையாகத் திரும்ப செலுத்துவதில்லை.

கடன்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "வங்கியில் கல்விக் கடனைத் திரும்ப செலுத்தாமல் போகும்பட்சத்தில் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்... மேலும், வங்கிகளில் மீண்டும் புதிய கடன் வாங்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பி, அதற்குப் பதில் கேட்டிருக்கிறார் விகடன் வாசகர் சிந்துஜா. அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of common man
Doubt of common man

பொதுவாக வங்கியில் கடன் பெற்றுவிட்டு, அதை முறையாகத் செலுத்தாமலோ, ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டாலோ என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே அணுகுமுறை கல்விக் கடன் விவகாரத்தில் இருக்காது. பணம், வசதி இல்லாத காரணத்தால் மேற்படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் படிப்பைக் கைவிட்ட பலரைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். படிப்பு என்பது வசதி படைத்தோருக்கு மட்டும்தான் என்ற நிலை தற்போது மாறி, அடித்தட்டு மக்களுக்கும் சாத்தியமாகியுள்ளது. இதற்கு வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடனும் ஒரு காரணம்.

Education loan
Education loan

வங்கிகளில் கல்விக் கடன் பெற்று படித்தவர்கள் வேலைக்குச் சென்றவுடன் கடன் தொகையை வங்கிகளில் திரும்பச் செலுத்துவார்கள். வேலை கிடைக்காத சூழலில் பலரால் கடன் தொகையை அடைக்க முடிவதில்லை. கல்விக் கடனைத் திரும்ப செலுத்தாமல் போகும்பட்சத்தில் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்... கல்விக் கடனைச் செலுத்தாமல் போனால் வங்கி தரப்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிந்துஜா போலவே பலருக்கும் குழப்பம் இருக்கலாம்.

இது குறித்து அறிந்துகொள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி பொது மேலாளர் (ஓய்வு) கணேசனைத் தொடர்புகொண்டு பேசினோம், ``அரசு ஏழை எளிய மாணவர்களும் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் வங்கிகளின் மூலம் கல்விக் கடன்களை வழங்கிவருகிறது. பொதுவாக, வங்கியில் கடன் வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளன. ஆனால், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும்போது வங்கிகள் அத்தகைய முறையில் அவர்களை நடத்துவதில்லை. சொத்துகள் இல்லையென்றாலும் அவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கிவிடுகிறது. கல்விக் கடனுக்கு வட்டி விகிதமும் குறைவாகத்தான் விதிக்கப்படுகிறது.

இன்று மாணவர்களால் எளிதில் பல லட்சங்கள் வரை கல்விக் கடனாகப் பெற முடிகிறது. ஆனால், கல்விக் கடன் பெறும் மாணவர்கள் பலரும் முறையாகத் திரும்ப செலுத்துவதில்லை. கல்விக் கடன் செலுத்தாமல் போவதால் அவர்களால் எதிர்காலத்தில் வேறு எங்கும் எதற்கும் வங்கிகளில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு கல்விக் கடன் பெற்று படித்துவிட்டுத் திருப்பிக் கட்டாமல் விடுவது சட்டப்படிக் குற்றமாகக் கருதப்படுகிறது.

இப்படி, கடனைக் கட்டாமல் விட்டுவிட்டுப் பல வருடங்கள் கழித்து வட்டி இல்லாமல் வாங்கிய கடன் தொகையை மட்டும் திருப்பி செலுத்துவதற்கு 'ஒன் டைம் செட்டில்மென்ட்' என்று பெயர். கடன் தொகையை மீண்டும் செலுத்த தயாராக இருந்தாலுமேகூட அவர்கள் சிபில் புரொஃபைலில் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். உதாரணத்துக்கு 10 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய கல்வி கடன் தொகை ரூ.2,00,000 என்றால் இன்று வட்டியுடன் சேர்த்து அந்த கடன் தொகை ரூ.7,00,000-மாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இத்தனை வருடங்கள் கட்டாமல் இருந்துவிட்டு இப்போது வட்டியில்லாமல் கடன் வாங்கிய தொகையை மட்டும் செலுத்தும் பட்சத்திலும் பின் விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.

Education Loan
Education Loan

ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு தனிப்பட்ட கல்விக் கடன் கொள்கைகள் இருக்கும். அதன் அடிப்படையில்தான் வங்கிகள் மாணவர்களுக்குக் கடன் அளிக்கும். அப்படி இருக்கும்போது கடனைச் செலுத்தாமல் அல்லது பல வருடங்கள் இழுத்தடித்து பின்னர் செலுத்துவது போன்ற செயல்களுக்கு அந்தந்த வங்கிகள் தங்களின் கொள்கைகளின் அடிப்படையில் சமரசம் செய்துகொள்வதா அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதா என்பதைப் பற்றி முடிவெடுக்கும். மொத்தத்தில் வாங்கிய கடன் தொகையை வட்டியில்லாமல் திருப்பி செலுத்தினாலும்கூட பின்னாளில் வங்கிகளில் மீண்டும் கடன் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒருமுறை கட்டாமல் போகும்போது சம்பந்தப்பட்ட நபரின் புரோஃபைல் லாக் செய்யப்பட்டுவிடும். அடுத்து எந்த வங்கியில் கடனுக்கு அணுகினாலும் அவர்களுக்குக் கடன் கிடைக்காது. இந்த விஷயங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். எனவே சம்பந்தப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று அதிகாரிகளிடத்தில் சூழ்நிலையை விளக்கிக் கூறி உதவி கோரினால் மட்டுமே மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் கூறுவார்கள்" என்றார்.