`ஷார்ட் டைம் மெமரி லாஸ்' என்பதை தமிழர்களின் `லாங் டெர்ம் மெமரி'யில் பதிவு செய்த படம் `கஜினி'. சஞ்சய் ராமசாமியாக நடிக்கும் அசலான சஞ்சய் ராமசாமியான சூர்யாவிடம் பார்ட்டியில் வைத்து மாதர் சங்கத்துக்கு நன்கொடை கேட்கும் காட்சி ஒன்றுண்டு...
அசின்: ``இப்ப அவர் பணம் எதுவும் எடுத்துட்டு வரல.”
மாதர் சங்கத்தினர்: ``பரவாயில்ல. செக்கு கொடுத்தா கூட வாங்கிப்போம்.”
அசின்: ``செக்கா? செக் புக்கை யாராவது கையில் வைத்திருப்பாங்களா?” என அசின் கேட்கும் அதே நேரத்தில் கோட் பாக்கெட்டில் இருந்து செக் புக்கை எடுத்து சஞ்சய் காசோலையை வழங்குவார்.
ஒருவேளை இன்று `கஜினி' ரீமேக் செய்யப்பட்டால் இந்தக் காட்சி எப்படி இருக்கும்?

மாதர் சங்கத்தினர்: ``மாதர் சங்கத்தில் இருந்து வர்றோம். ஏதேனும் உதவி செய்ய முடியுமா?”
சஞ்சய்: ``யுபிஐ யூஸ் பண்றீங்களா?”
மாதர் சங்கத்தினர்: ``ஆமா சார்.”
சஞ்சய்: ``உங்க விபிஏ, அல்லது போன் நம்பர் கொடுங்க பணம் அனுப்புறேன்.”
முடிந்தது.
யுபிஐ என்ற மூன்றெழுத்து, இந்தியாவின் மூலை முடுக்குகளில்கூட பரவிக்கிடக்கும் டிஜிட்டல் யுகம் இது. வங்கிக்குப் போய், வரிசையில் நின்று, பேனாவை இரவல் வாங்கி, சலானை நிரப்பி, பணத்தை டெபாசிட் செய்யும் சிரமங்கள் எதையும் கொடுக்காமல் வாட்ஸ்அப்பில் சாட் செய்வதுபோல் நொடியில் பணப் பரிமாற்றம் செய்வதை சாத்தியமாக்கிய தொழில்நுட்பம்தான் யுபிஐ.
`டிஜிட்டல் இந்தியா' கனவுடன் மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணப் பரிமாற்றம் தொடர்பான சேவைகளில்,
- யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பகிர்வு முறை (Unified Payment Interface - UPI),
- தேசிய மின்னணுப் பணப் பரிமாற்றம் (நெஃப்ட் - National Electronic Funds Transfer - NEFT),
- உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை (ஐ.எம்.பி.எஸ் -Immediate Payment Service -IMPS),
- இந்தக் கணமே செட்டில்மென்ட் (ஆர்.டி.ஜி.எஸ் - Real Time Gross Settlement- RTGS) ஆகிய நான்கும் மிக முக்கியமானவை. மேற்கூறிய விதங்களில் பணப் பரிமாற்றங்கள் சாத்தியம்தான் என்றாலும் சகஜமாக பெருவாரியான சாமானிய மக்களிடையே புழக்கத்தில் இருப்பது யுபிஐதான்.

சமீபத்தில், எங்கள் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் பத்தில் எட்டு பேர் யுபிஐ உபயோகப்படுத்துகின்றனர் என்பது தெரியவந்தது. குறிப்பாக யுபிஐ பயன்படுத்துவதில் பெண்கள் அதிக முனைப்புடன் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரம் சொன்னது. பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி, `பி டயர்' ஊர்களில் உள்ள உழைக்கும் மகளிர்களுக்கிடையில் யுபிஐ பரிவர்த்தனை மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்கான முக்கியக் காரணங்கள்...
1. கண்ணால் பார்த்து கையால் தொட்டு எண்ணி பணம் கொடுக்கும் பழக்கமே சிறந்தது என்ற நம்பிக்கை
2. யுபிஐ பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது
3. தொடர்ச்சியாக யுபிஐ மூலமாக நடக்கும் மோசடிகள் குறித்த பயம்
UPI - விளக்கம்
எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் யுபிஐ என்பது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் முறையாகும். இதன் மூலம் சில நொடிகளுக்குள் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங்கில் லாகின் செய்யாமலேயே எளிதாகப் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஸ்மார்ட் போன் மூலம் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனையைச் செய்ய முடியும். அதுமட்டுமல்ல... ரயில்வே / சினிமா டிக்கெட் வாங்கலாம்; பார்கோடு அடிப்படையில் கடைகளில் பணம் செலுத்தலாம்; உங்களின் அனைத்து வகை செலவினங்களையும் இதன் மூலமாகச் செய்யலாம்.

நெப்ட், ஆர்டிஜிஎஸ், யுபிஐ இடையிலான வித்தியாசம்?
நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ்-ஐ பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யும் பொழுது பணத்தை யாருக்கு அனுப்புகிறோமோ அவரின் பெயர், அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர், அதன் ஐஎஃப்எஸ்சி கோட், வங்கிக் கணக்கு எண் போன்ற பல விவரங்களைக் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் NEFT, RTGS-க்கு கட் ஆஃப் டைம் எனப்படும் இத்தனை மணிக்குள்தான் அனுப்ப முடியும் என்ற காலக்கெடு உண்டு.
ஆனால் யுபிஐ பயன்படுத்தும்பொழுது மேற்கூறிய எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்கு விர்ச்சுவல் ஐடி மட்டும் இருந்தால் போதுமானது. மேலும் UPI பல பரிமாற்றத்திற்கு காலக்கெடு என்று எதுவுமில்லை.
பயன்படுத்தும் முறை:
யுபிஐ பயன்படுத்த முக்கியமான தேவை இரண்டு உள்ளன.
ஒன்று, உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு. இரண்டு, ஒரு ஸ்மார்ட்போன்.
முதலில் ஏதேனும் ஒரு வங்கியின் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் உங்கள் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆப்பை திறந்ததுமே, எஸ்.எம்.எஸ் மூலமாக உங்கள் போன் எண் உறுதி செய்யப்படும். அதேபோல ஆப்பை பயன்படுத்த 4-6 இலக்கத்திலான பாஸ்வேர்டையும் செட் செய்துகொள்ள வேண்டும்.
பிறகு ஆப்பில் நமது வங்கிக் கணக்கு விவரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். உங்களது போன் எண் ஆனது எந்த வங்கிகளில் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளதோ, அந்தக் கணக்குகளை மட்டுமே இதில் இணைக்க முடியும். கணக்கு விவரங்களை இணைத்த பிறகு விர்ச்சுவல் ஐடி எனப்படும் தனிப்பட்ட ஐடி யை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
இது உங்கள் மெயில் ஐடி போன்றது. இந்த விர்ச்சுவல் ஐடிதான் நாம் பிறருக்கு பணம் அனுப்பவும், பிறரிடம் இருந்து பணத்தைப் பெறவும் பயன்படும் முகவரி.
UPI - மேலும் சில விவரங்கள்...
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் (NPCI) இந்தியா என்ற அமைப்புதான் இந்தியாவில் இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது. உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும். ஒரு ஸ்மார்ட்போன், ஆப்பின் மூலம் உங்கள் மொபைல் நம்பரை வைத்தே இதில் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.

இது 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது. இந்தச் சேவையைப் பயன்படுத்த எந்த ஒரு வங்கியின் யு.பி.ஐ ஆப்பை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி... மற்றொரு வங்கியின் ஆப்பையும்கூட பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அவரது வங்கிக் கணக்கு எண், IFSC கோட் என எதுவுமே வேண்டாம். பரிவர்த்தனைக்கென நாம் நமது கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு எண், ஆன்லைன் பேங்கிங் விவரங்கள் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.
யுபிஐ-ல் இ-மெயில் முகவரி போன்ற விர்ச்சுவல் ஐடியை உருவாக்கி, எளிதாகப் பணம் அனுப்பலாம். நம்மால் பணம் அனுப்ப முடிவதைப் போலவே மற்றொருவரிடம் இருந்தும் நம்மால் பணம் பெற முடியும்.
இந்தக் கட்டுரை யுபிஐ குறித்த சிறு அறிமுகம் மட்டுமே. யுபிஐ-ஆல் விளையும் நன்மைகள், அதில் இருக்கும் சாதக பாதகங்கள், எங்கெல்லாம் எப்போதெல்லாம் அதைப் பயன்படுத்தலாம், வங்கிகளைத் தாண்டி யுபிஐ சேவையை வழங்கும் பிற நிறுவனங்கள்... இன்னோர் அத்தியாயத்தில் பார்க்கலாம்!