லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மாற்றத்தை விதைப்போம்: இது பெருமைப்படக்கூடிய தொழிலாக மாறும்!

அர்ச்சனா ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா ஸ்டாலின்

- அர்ச்சனா ஸ்டாலின்

‘‘நம்ம மண்ணை நம்பி இறங்கினா, நிச்சயம் நாம பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம்” - உற்சாகமாகப் பேச தொடங்கினார், திருவள்ளூர் மாவட்டம், செம்பட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பி.இ பட்டதாரி அர்ச்சனா ஸ்டாலின்.

விவசாயிகளையும் இயற்கை உணவு ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கிற அர்ச்சனா தொடர்ந்தார்... ``சொந்த ஊர் தேனி. படிப்பு முடிச்சு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். படிக்கிற காலத்திலேயே நம்மாழ்வார் ஐயா வீடியோவில் அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு வளர்ந்தேன். அப்படித்தான் இயற்கைமீதும் விவசாயம்மீதும் ஆர்வம் வந்தது. நாமும் விவசாயம் செய்யணும்கிற எண்ணம் மனசு முழுக்க நிரம்பியது.

ஒருகட்டத்துல எங்க வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைச்சோம். இயற்கை உரங்கள் பற்றியும், அதை வெச்சு எப்படி பயிர்களை இயற்கையா வளர்க்கிறது என்பது பற்றியும் விவசாயிகள்கிட்ட கேட்டேன். பஞ்சகவ்யா, அடுக்குச்சாம்பல், பிண்ணாக்கு வெச்சு மாடித் தோட்டத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். எங்க வீட்டில் விளைந்த காய்கறிகளோட சுவை பிரமாதமா இருந்தது. தேவைக்குப்போக, மீதமான காய்கறிகளை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்தோம். ஒருகட்டத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைகிற காய்கறிகளை விலைக்குக் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் இயற்கை விவசாயத்தை முழுநேர தொழிலா செய்யலாம் என்கிற முடிவெடுத்தேன்.

பார்த்துட்டிருந்த வேலையை விட்டுட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ரெண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தேன். `பொழைக்க தெரியாதவள்'னு கிண்டல் செய்தாங்க. அதையெல்லாம் நான் கண்டுக்கலை.

அர்ச்சனா ஸ்டாலின்
அர்ச்சனா ஸ்டாலின்

முதல்ல தர்பூசணி, சுரைக்காய் சாகுபடி செய்யலாம்னு திட்டம் இருந்துச்சு. மண்ணைப் பக்குவப்படுத்துகிறதுக்காக பல தானியங்களை விதைச்சு, அது வளர்ந்ததும் மடிச்சு உழுது, மண்ணுக்கு உரமாக்கினோம். பிறகு மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு போட்டு பாத்தி அமைச்சோம். தர்பூசணி விதைகளை விதைச்சு, அமுதக் கரைசல் மட்டும் அப்பப்ப தெளிப்போம். நல்லா காய் பிடிச்சது. நிறைய பேர் தேடி வந்து வாங்கிட்டுப் போனாங்க. அப்ப கிடைச்ச வரவேற்பு, எங்களுக்கு ஊக்கமா இருந்துச்சு. அடுத்தகட்டமா புடலை, பாகல், பூசணி, தக்காளி, கத்திரி, வெங்காயம் நடவு செஞ்சோம். மிளகாய், கீரை, முள்ளங்கியை ஊடுபயிரா நடவு செஞ்சோம். வாடிக்கையாளர்கள் பெருக ஆரம்பிச்சாங்க.

அந்த நம்பிக்கையில் மேலும் மூணு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தோம். நிறைய பேர் கீரை வேணும்னு கேட்டதால் பல வகையான கீரைகளைப் பயிரிட்டிருக்கோம்.

கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்குகளை மலைப்பிரதேசங்களில் இருக்கிற இயற்கை விவசாயிகளிடமிருந்து வாங்கினோம். இப்போ, பல 20 வகையான கீரைகள், 25 வகையான காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம். இந்த 45 வகைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் விருப்பமான காய்கறிகளைத் தேர்வு செஞ்சுக்கலாம். தேர்வு செஞ்ச காய்கறிகளை வாரம் பத்து கிலோங்கிற ரீதியில் வாடிக்கையாளர்கள் வீட்டுல கொண்டுபோய் கொடுப்போம். அதுக்கு அவங்க, மாசம் 3,000 ரூபாய் கட்டணும்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்” என்கிற அர்ச்சனா அதில் வெற்றியடைந்து அடுத்த திட்டத்தை எப்படி நிறைவேற்றினார்?

அர்ச்சனா ஸ்டாலின்
அர்ச்சனா ஸ்டாலின்

‘`இயற்கை விவசாயத்தை விரும்புகிறவங்க கிட்ட, `நீங்களே விவசாயம் பண்ணுங்க. நாங்க வழிகாட்டுறோம்’னு சொன்னோம். ஆர்வம் இருந்தவங்க எல்லாம் சொன்ன பதில், `இடமில்லை' என்கிறதுதான். அப்போதான் `விவசாயிகளையும் மக்களையும் ஒருங்கிணைச்சா என்ன...' என்கிற எண்ணம் தோணுச்சு. விவசாயிகள் தங்கள் நிலத்துல ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு விவசாயம் பண்ண கொடுப்பாங்க. சிலர் விவசாயிகளையே விவசாயம் செய்து தர சொல்லுவாங்க. இதனால விவசாயிகளும் பயன் அடைஞ்சாங்க. இதன் மூலமாக 160 விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்தையும் 800 குடும்பங்களுக்குக் காய்கறிகளையும் கொடுத்துட்டிருக்கோம்” என்கிற அர்ச்சனா...

‘‘திண்டிவனம், மதுரையில்கூட இந்தத் திட்டத்துல விவசாயிகளைச் செயல்பட வெச்சிருக்கோம். வார விடுமுறை நாள்களில் குடும்பமா வர்ற வாடிக்கையாளர்கள் உரம் தயாரிப்பு, களை எடுப்பு, தண்ணீர் பாய்ச்சுவது மாதிரியான சின்னச் சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடு த்துவாங்க. அப்ப குழந்தைங்க முகத்துல வெளிப்படுற சந்தோஷமே தனி. அதுபோக இப்ப 1,000 கோழிகள், 20 வாத்துகள், 20 வான்கோழிகள் கொண்ட பண்ணை வளர்ப்பையும் ஆரம்பிச்சிருக் கேன். அதுகளோட கழிவுகளை நிலத்துக்கு உரமா பயன்படுத்தறேன். நம்முடைய பாரம்பர்யத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகும் சின்ன முயற்சிதான் இது. நிறைய விவசாயிகளை உருவாக்கணும் என்கிற திட்டமும் இருக்கு. இந்தத் திட்டத்தினால எனக்கு கை நிறைய லாபம் இல்லைனாலும் விவசாயம் நல்லாயிருக்காங்கிற சந்தோஷம் கிடைக்குது. வருங்காலத்தில் விவசாயம் பெருமைப்படக்கூடிய தொழிலா மாறும்” என்கிறவர் கொரோனாவால் சிக்கல்களையும் சந்தித்திருக்கிறார்.

அர்ச்சனா ஸ்டாலின்
அர்ச்சனா ஸ்டாலின்

‘‘வாடிக்கையாளர்கள் நேரிடையா வந்து விவசாயம் செய்ய முடியலை. அதனால எங்ககிட்ட என்ன காய்கறிகள் இருக்கோ அதை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து அதிலிருந்து அவர்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களைத் தேர்வு செய்யச் சொல்றோம். எதிர்காலத்தில் விவசாயம்தான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரப்போகும் தொழிலாக இருக்கும். மாற்றத்துக்கான நேரம் இது... மாற்றத்தை விதைப்போம்” - விடைபெறுகிறார் அர்ச்சனா ஸ்டாலின்!