நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வந்தாச்சு டிஜிட்டல் கரன்சி... யாரெல்லாம் பயன்படுத்தலாம்..?

டிஜிட்டல் கரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி

யு.பி.ஐ தொழில்நுட்பமானது ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில், நமது பொருளா தாரத்தைப் பல வகையிலும் முன்னேற்றம் காணச் செய்தது. இதன் அடுத்தகட்டமாக, இ-கரன்சியை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்திருக்கிறது நமது மத்திய ரிசர்வ் வங்கி.

முதலில் மொத்த விற்பனையில் இந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டு, பிற்பாடு சில்லறை வர்த்தகத்துக்கு நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இ-ரூபாய் குறித்த பல்வேறு விஷயங்களை நமக்கு விளக்கிச் சொல்கிறார் ஜியோட்டஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ஜுன் விஜய்.

வந்தாச்சு டிஜிட்டல் கரன்சி... யாரெல்லாம் பயன்படுத்தலாம்..?

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?

“மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency - CBDC) அல்லது டிஜிட்டல் ரூபாய் என்று அழைக்கப்படும் இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டு களின் டிஜிட்டல் வடிவம் ஆகும். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதைப் பயன்படுத்தலாம்.

நாம் தற்போது பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் மற்றும் உலோக நாணய வடிவில் உள்ளது. டிஜிட்டல் கோட்கள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவதுதான் டிஜிட்டல் ரூபாய். இந்தியாவில் 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப் படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

கிரிப்டோகரன்சி Vs டிஜிட்டல் ரூபாய்

இதை கிரிப்டோகரன்சி என்று தவறாக பலரும் நினைக்கிறார்கள். இதற்கும் கிரிப்டோ கரன்சிக்கும் சம்பந்தம் இல்லை. கிரிப்டோ கரன்சி என்பது பிளாக்செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பரவலான டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகும். இதை நாம் மற்றவருக்கு எளிதாக அனுப்ப முடியும். இருப்பினும், இது எந்தவொரு நாட்டின் அரசு கட்டுப்பாட்டிலும் இல்லை. அதாவது, கிரிப்டேகரன்சிகளின் செயல்பாடானது எந்தவொரு வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்குள் வராது.

ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது அறிமுகம் செய்துள்ளது டிஜிட்டல் நாணயம் ஆகும். அதாவது, ரூபாயின் டிஜிட்டல் வடிவமாகும். ‘டிஜிட்டல் ரூபாய்’ என்பது பிட்காயின், எத்திரியம் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளிலிருந்து வேறுபட்டது. இது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பானதாக ஒரு டிஜிட்டல் ரூபாய் என்பது நாம் பயன்படுத்தும் ஒரு ரூபாய்க்கு இணையான மதிப்பைக் கொண்டிருக்கும்.

மேலும், கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு எப்போதும் ஒரே மாதிரி அதாவது, ரூபாய் மதிப்புக்கு நிகராகவே இருக்கும். இதனால் டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்துவதில் எந்தவித பிரச்னையும் இருக்காது.

அர்ஜுன் விஜய்
அர்ஜுன் விஜய்

டிஜிட்டல் ரூபாய் எப்படி செயல்படும்?

டிஜிட்டல் பேமென்ட் முறைகளில் நாம் காணும் அனைத்து நன்மைகளையும் டிஜிட்டல் ரூபாயில் இருக்கும். இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒருபோதும் கிழிக்கவோ, எரிக்கவோ, சேதப்படுத்தவோ முடியாது. நோட்டுகளை இழப்பதுபோல, டிஜிட்டல் ரூபாயை இழக்க முடியாது.

இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. இந்தியா வில் நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய ஒன்பது வங்கிகள் மூலம் இன்று டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூடியவிரைவிலேயே இந்த டிஜிட்டல் ரூபாய் முழுப் பயன் பாட்டுக்கு வரும் எனவும், தற்போது அரசுப் பத்திரங்கள், கடன் பத்திரங்களை வாங்க இந்த டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனாலும், சோதனை அடிப்படையிலான காலத்தில் ஏதாவது பிரச்னை வருகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அப்படி பெரிய பிரச்னை எதுவும் வராத பட்சத்தில் இது இன்னும் பரவலான பயன்பாட்டுக்குக் கொண்டு வர ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கலாம்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாயைத் தற்போது எல்லோரும் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட சில தொழில்களில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். காரணம், இது சோதனை அடிப்படையில் மட்டும்தான் வெளியிடப் பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சோதனையில் நாம் வெற்றி அடைந்துவிட்டால் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் போல இதை நிரந்தரமாகவே எளிதாகப் பயன்படுத்த முடியும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் ரூபாயின் வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நாம் இப்போது பயன்படுத்தும் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகள் எல்லாமே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகை யில் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டுள்ளது. அந்த வகை யில், டிஜிட்டல் ரூபாயின் வளர்ச்சியும் இந்தியாவில் அதிகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

வந்தாச்சு டிஜிட்டல் கரன்சி... யாரெல்லாம் பயன்படுத்தலாம்..?

டிஜிட்டல் ரூபாயை எப்படிப் பயன்படுத்தலாம்?

டிஜிட்டல் ரூபாய் மதிப்பு களை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளும் எடுக்கப் பட்டு வருகிறது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு நமக்கு எந்த ஒரு இன்டர்மீடியேட்டரும் தேவையில்லை. நேரடியாக நாம் வங்கிகளில் இருந்து பயன்பாட்டாளர்களைக் கொண்டு சேர்க்கவும் முடியும். இதனால் யாருக்கு வேண்டுமானாலும் நாம் எளிதாகப் பணம் அனுப்ப முடியும்; அதே போல, பெறவும் முடியும்.

பணத்தை அந்த நாட்டின் ரூபாய் மதிப்புக்கு ஏற்றபடி வங்கியின் மூலம் மாற்றி அனுப்புவதில் பல படிநிலைகள் உண்டு. ஆனால், தற்போது அறிமுகப்படுத்திய டிஜிட்டல் ரூபாய்களில் பணத்தை பிற நாடுகளுக்கு அனுப்புவதோ, அந்த ரூபாய் நாட்டின் மதிப்புக்கு ஏற்ப மாற்றுவதோ மிகவும் எளிது என்பதுடன், மிகவும் பாதுகாப்பானதும் ஆகும்’’ என்று நீண்ட விளக்கம் அளித்தார் அர்ஜுன் விஜய்.

கறுப்புப்பணம் ஒழியும்...

ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட யு.பி.இ-ஆக இருந்தாலும் சரி, இப்போது கொண்டு வரப் பட்டுள்ள டிஜிட்டல் ரூபாயாக இருந்தாலும் சரி, கறுப்புப்பணம் புதிதாக உருவாகாமல் தடுக்க பெரிய அளவில் உதவி செய்வதாக இருக்கும். டிஜிட்டல் முறையில் அனைத்துப் பணமும் பரிவர்த்தனை செய்யப் படுவதால், எல்லாப் பரிவர்த்தனைகளும் கணக்கில் வந்துவிடும். அதனால், அரசுக்கு வர வேண்டிய வரி வருமானம் அதிகரிக்கும்.

யு.பி.ஐ பணப் பரிமாற்றம் வந்தபிறகு, நமது பொருளாதாரம் பெரிதாக மாறியிருக்கிறது. இந்த இ-கரன்சி வந்த பிறகு, நமது வாழ்க்கையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்ப்போம்!