நடப்பு
Published:Updated:

ஒவ்வோர் இலக்குக்கும் ஒரு எஸ்.ஐ.பி முதலீடு!

எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி முதலீடு

நானும் எஸ்.ஐ.பியும்!

“முதலீடு செய்யவேண்டும் என்பதற்காக, நாம் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை ஒதுக்கி, ஏதோ சில ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது சரியான முதலீட்டு முறையல்ல. நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்போகும் இலக்கு களை வரிசைப்படுத்தி, அந்த இலக்குகளுக்கேற்ற ஃபண்டுகளைத் தேர்வுசெய்து முதலீடு செய்வதே சரி. நான் அப்படித்தான் செய்து வருகிறேன்” என மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 36 வயதான இளைஞர் எம்.எஸ்.செந்தில்குமார்.

ஒவ்வோர் இலக்குக்கும் ஒரு எஸ்.ஐ.பி முதலீடு!

ஆறு ஆண்டுகளுக்குமுன் சோதனை முயற்சியாக முதலில் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்ய ஆரம்பித்தார் அவர். இன்று மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறார். அவர் நம்மிடம் தொடர்ந்து பேசும்போது...

“நிதி ஆலோசகர் நாகராஜன் சாந்தன் என் பக்கத்து வீடு. அவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யச் சொன்னார். வருமான வரியைச் சேமிக்கும் நோக்கத்துடன் மாதம் 1,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் இ.எல்.எல்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். இதற்குமுன் என்னுடைய முதலீடுகள் ரிஸ்க் இல்லாதவையாகவே இருந்தன. முதலீட்டில் ரிஸ்க் எடுத்தால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக லாபம் பெறலாம் என்று எனக்கு உணர்த்தியவர் அவர்தான். என் மகள் திருமணம், மகன் மேற்படிப்பு எனப் பல்வேறு இலக்குகளை நிர்ணயத்து, எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன்.

எம்.எஸ்.செந்தில்குமார் குடும்பம்
எம்.எஸ்.செந்தில்குமார் குடும்பம்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என ரிஸ்க்கைக் குறைக்க முதலீட்டை மேற்கொள் கிறேன். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது முதலீடு செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே அந்த முதலீட்டினைத் தொடங்க வேண்டும். இடையில் பங்குச் சந்தையின் இறக்கத்தால் முதலீட்டுத் தொகை குறைந்தால், அதுபற்றி கவலைப்படக்கூடாது.

குறிப்பாக, தினமும் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பைப் பார்த்துப் பதற்றப்படக் கூடாது. சந்தை இறக்கத்தை முதலீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, விலகி ஓடக் கூடாது. நான் அப்படித்தான் செய்துவருகிறேன்’’ என்கிறார் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடியபடி.

‘‘அதேசமயம், நாம் முதலீடு செய்துவரும் ஈக்விட்டி ஃபண்டு களின் என்.ஏ.வி தொடர்ந்து இறங்கினால், அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். பங்குச் சந்தையின் இறக்கம்தான் அதற்குக் காரணம் என்றால், கவலைப்படத் தேவையில்லை. அந்த ஃபண்டில் இருக்கும் பங்குகளின் செயல்பாடு மாறியிருக்கிறது எனில், அந்த ஃபண்டிலிருந்து நம்முடைய முதலீட்டினைத் திரும்ப எடுக்கத் தயங்கக் கூடாது” என்கிறார்.

‘‘என் குழந்தைகளுக்கான இலக்குகளை நிறைவேற்றத் தேவையான நிதியை ஓரளவுக்குச் சேர்த்துவிட்டேன். இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமான தொகையைச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஆனால், ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை இன்னும் ஆரம்பிக்க வில்லை. விரைவில் ஓய்வுக் காலத்துக்காக ஒரு எஸ்.ஐ.பி-யை தனியாக ஆரம்பிக்கவிருக்கிறேன்’’ என்றார் செந்தில்குமார்.

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.