பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பாரத்பே நிறுவனர் பங்கை விற்று வெளியேற நினைப்பது ஏன்..?

அஷ்நீர் குரோவர்
பிரீமியம் ஸ்டோரி
News
அஷ்நீர் குரோவர்

நெருக்கடி

சிலர் தொடர் நெருக்கடிக்குள் சிக்கி இருப்பார்கள். அவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்தால், அத்தகைய நெருக்கடிகள் அனைத்துக்கும் காரணம் அவர்களாகவே இருபார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான், பாரத்பே நிறுவனத்தின் நிறுவனர் அஷ்நீர் குரோவர் (Ashneer Grover).

பாரத்பே நிறுவனம், கடந்த ஜனவரி மாதத்துக்கு முன்பு வரை பிரபலமான யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக எல்லோருக்கும் தெரிய வந்தது; இப்போது அந்த நிறுவனத்தின் நிறுவனர் களுக்குள் நடக்கும் சர்ச்சை காரணமாக எல்லோரும் பேசும் நிறுவனமாக மாறியுள்ளது. அதற்குக் காரணம் குரோவர்தான். யார் இந்த குரோவர், ஏன் இப்படி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்?

ஐ.ஐ.எம்மில் படித்தவர்...

டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் முடித்தவர். ஐ.ஐ.எம் அகமதா பாத்தில் எம்.பி.ஏ படித்தபின், கோட்டக் மஹிந்திரா வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பணியாற்றினார். ஸ்டார்ட்அப் நிறுவனமான குரோபர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். 2018-ம் ஆண்டு பாரத்பே நிறுவனத்தைத் தொடங்கினார். வேகமாக வளர்ந்த பாரத்பே நிறுவனம் யுனிகார்ன் நிலையை அடைந்தது. செக்யோயா கேப்பிடல், டைகர் குளோபல், ஸ்டெட் வியூ உள்ளிட்ட பல வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்தன.

சிக்கலில் மாட்டிய ஆடியோ...

இந்த நிலையில், கடந்த ஜனவரியில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் பணியாளர் ஒருவருடன் குரோவர் பேசியதாகக் கூறப்பட்ட ஆடியோ (நைகா ஐ.பி.ஓ தொடர்பாக) வெளியானது. அதில் அந்த வங்கிப் பணியாளர்களைக் குரோவர் கடுமையாகப் பேசியதாகக் கூறப் பட்டது. ஆனால், அந்த ஆடியோ போலியானது என குரோவர் மறுத்திருந்தார். தன்னிடம் இருந்து பணம் பறிக்க சிலர் திட்டமிடுவதாக அவர் சொன்னார்.

இதற்கு முன்பாகவே, கடந்த அக்டோபரில் குரோவர் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கோட்டக் மஹிந்திரா வங்கி மீது சட்ட நடவடிக்கையை எடுத்திருந்தார்கள். வங்கியும் இதைச் சட்டபூர்வமாக எதிர் கொள்ளும் என அறிவித்திருந்தது. இத்துடன் பிரச்னை முடியும் என நினைத்தால் அடுத்து வேறு ஒரு பூதம் வெளியானது.

அஷ்நீர் குரோவர்
அஷ்நீர் குரோவர்

முதலீட்டாளருடன் சண்டை...

பாரத்பே நிறுவனத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதில் செக்கோயா கேப்பிடல் நிறுவனத்தின் முதலீடு அதிகம். பாரத்பே நிறுவனத்தில் 19.6% பங்குகளை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செக்யோயா நிறுவனத் துடன் குரோவர் உரையாடிய மெயில் தற்போது வெளியாக, அதனால் மற்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இ-மெயிலில் சண்டை...

செக்கோயா நிறுவனமானது பாரத் பே நிறுவனத்துக்கு சீரிஸ் ‘B’ முதலீட்டை வழங்கும்போது காலதாமதம் செய்ய, அந்தச் சமயத்தில் குரோவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

`குரோவரிடம் இருந்துவரும் மெயில் காயப்படுத்துவதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது’ என செக்யோயா நிறுவனத்தின் ஹர்சித் சேத்தி 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரத் பே நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு மெயில் அனுப்பியிருக்கிறார். 2020-ம் ஆண்டு பாரத்பே இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடைய நடந்த இந்தக் காட்டமான மெயில் பரிவர்த்தனை கடந்த ஜனவரி 17-ம்தேதி பொது வெளிக்கு வந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து (ஜனவரி 19) மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறையில் செல்ல இருப்பதாக குரோவர் அறிவித்தார். இவரின் மனைவி மாருதி ஜெயினும் பாரத்பே நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். இவரும் மார்ச் வரை விடுமுறையில் சென்றுவிட்டார்.

பாரத்பே நிறுவனர் பங்கை விற்று வெளியேற நினைப்பது ஏன்..?

ரூ.4,000 கோடி பங்கு மதிப்பு...

இந்த நிலையில், நிறுவனத்தின் நிலைத்தன்மையை உறுதிப் படுத்துவதற்காகத் தனிப்பட்ட ஆடிட் நடத்த இயக்குநர் குழு பணித்தது. இதன்படி தணிக்கையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தன்வசம் உள்ள 9.5% பங்குகளை விற்க குரோவர் திட்டமிட்டு வருகிறார் எனும் செய்தியும் வெளியாகியிருக்கிறது.

தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் ரூ.4,000 கோடி கொடுத்துவிட்டு நிறுவனத்தை யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என குரோவர் தெரிவித்திருக்கிறார். நிறுவனம் குறித்து ஆடிட்டிங் நடந்தால், குரோவரின் அனைத்து முறையற்ற நடவடிக்கைகளும் வெளிவரக்கூடும் என்பதால், நிறுவனத்திலிருந்து வெளியேற நினைக்கிறார் என்னும் யூகங்களும் வெளியாகியிருக்கின்றன. ஆனால், குரோவர் இதை மறுத்திருக்கிறார். ‘‘எங்களுடைய தணிக்கை நிறுவனம், டெலாய்ட். மேலும், எஸ்.பி.ஐ வங்கி மற்றும் யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர்கள் இயக்குநர் குழுவில் இருக்கின்றனர். முறைகேடு நடந்திருந்தால் எப்படி இவர்களிடமிருந்து தப்ப முடியும்’’ எனக் கேட்டிருக்கிறார் குரோவர்.

சி.இ.ஓ-தான் மோதலுக்குக் காரணமா?

பாரத்பே நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி சுஹில் சமீர், முதலீட் டாளர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படுகிறார். அவரை இயக்குநர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று குரோவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலை யில், ‘‘இன்னும் சில வாரங்களில் ஆடிட் முடிவடையும். அது வரையில் அமைதியாக இருப் போம். நிறுவனத்துக்குப் போது மான நிதி இருக்கிறது. நிறுவனம் சார்ந்த உண்மையான தகவல்கள் அனைவருக்கும் தெரிவிக்கப் படும். அதுவரை அனைவரும் இயக்குநர் குழு மீது நம்பிக்கை யுடன் இருக்கவும். தற்போது 500 மில்லியன் டாலர் இருக்கிறது.

அனைத்து முதலீட்டாளர் களும் நிறுவனத்தின் வசம் இருக்கின்றனர். அதனால் புதிதாக நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. பாரத்பே நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒவ்வொரு வாரமும் புதிய முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்’’ எனத் தலைமைச் செயல் அதிகாரி சுஹில் சொல்லியிருக்கிறார்.

வேகமாக வளர்ந்துவரும் ஸ்டார்ட்அப் துறையில் இது போன்ற ஒரு சிறிய சலசலப்பு கூட பெரும் பாதகங்களை உருவாக்கக்கூடும். நிறுவனத்தை நடத்துபவர்கள் சுமுகமாகச் செல்வதே நல்லது!