பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக்... பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு ஜெயிப்பாரா?

ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷி சுனக்

லீடர்ஷிப்

லண்டனில் இருந்து செல்லமுத்து குப்புசாமி

பிரிட்டனின் பிரதமர் ஆகியிருக்கிறார் ரிஷி சுனக். ‘நம்மை ஆண்ட ஆங்கிலேயர் தேசத்தை இனி இந்தியர் ஒருவர் ஆளப் போகி றார்’ என்றெல்லாம் பேச்சுகள் எழுந்துள்ளன. ‘பெங்களூரின் மருமகன், இன்று இங்கிலாந்தின் பிரதமர்’ என்று பலரும் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது.

பஞ்சாப் வம்சாவழியினரான சுனக்கின் பெற்றோர், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த கென்யாவில் பிறந்து பிற்காலத்தில் இங்கிலாந் தில் குடியேறியவர்கள். அந்த வகையில் பார்த்தால், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் முதல்முறையாக பிரிட்டிஷ் பிரதமராகிறார் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். அவர். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது கூடுதல் அடையாளம்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

இவர் மீதான கவனத்தைப் பல மடங்கு அதிகரிக்க வைக்கும் இன்னுமொரு முக்கியமான காரணம், தீபாவளித் திருநாளில் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ரிஷி தேர்ந்தெடுக்கப் பட்டது அரசியல்ரீதியாக பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு மைல் கல். கூடவே பொருளாதார ரீதியிலும்தான்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், ரிஷி பிரதமராவதற்குக் காரணமே பொருளாதாரம்தான். போரிஸ் ஜான்சன் அமைச் சரவையில் 2022 பிப்ரவரி மாதம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிமிடம் முதல் கவனிக்கப்பட்ட நபராக ரிஷி விளங்கினார். கோவிட் காலகட்டத்தில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது மக்கள் பாதிக்கப்படாத வகையில் பொருளாதாரத்தைத் திறம்படக் கையாண்டார் ரிஷி.

ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் மீதான அதிருப்தியில் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 31 அமைச்சர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பதவி விலகினர். போரிஸ் வேறு வழியில்லாமல் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தார்.

அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷியும், லிஸ் (எலிசபெத்) ட்ரஸ்ஸும் மோதினர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், குறைந்த பட்சம் 100 எம்.பி-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பிரதமராகப் போட்டியிட முடியும். இது போட்டியிடுவதற்கான தகுதி மட்டுமே. இப்படிப் போட்டியிடும் வேட்பாளர்களை சுமார் 1,80,000 கன்சர் வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து வாக்கெடுப்பில் தேர்ந்தெடுப் பார்கள். எலிசபெத் ட்ரஸ்ஸைக் காட்டிலும் ரிஷிக்கு அதிக எம்.பி-க்கள் ஆதரவு இருந்தாலும் கட்சி வாக்கெடுப் பில் எலிசபெத் வெற்றி பெற்று பிரதமரானார். அவர் பிரதமரானதும் 70 ஆண்டுக் காலம் அரசாண்ட எலிசபெத் மகாராணி இறந்தது ஒரு பக்கம் நடந்தாலும், அது பொது மக்களை பாதிக்காத விஷயம். ஆனால், மக்களையும் தேசத்தையும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயங்கள் பொருளாதார ரீதியிலானவை.

அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு இந்த வருடம் 20 சத விகிதத்துக்கும் கீழே சரிந்தது. சர்வதேச முதலீட்டாளர்கள் பிரிட்டிஷ் பவுண்டில் வைத்திருந்த சொத்துகளை விற்று டாலராக மாற்றும் வேலையில் இறங்கினார்கள். பிரிட்டன் பெரும்பாலும் இறக்குமதியை மட்டுமே நம்பி யிருக்கும் தேசம். அப்படிப்பட்ட ஒரு நாட்டின் நாணயம் தனது மதிப்பை 20% இழந்ததால், அதிக அளவு பணம் தந்து பல பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம். ஏற்கெனவே இங்கிலாந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பணவீக்கத்தில் உள்ளது. விலைவாசி கட்டுக் கடங்காமல் ஏறி, ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 10 சதவிகிதமாக உயர்ந்தது. பொதுமக்களை இது வெகுவாக பாதித்துள்ளது.

பிரிட்டனின் பொருளாதாரப் பிரச்னை திடீரென முளைக்க வில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் (Brexit) நிகழ்வில் இருந்து தொடங்கியது.

பின்தங்கிய பீகார், உ.பி மாதிரியான மாநிலங்களில் இருந்து குறைந்த சம்பளத்தில் கட்டட வேலைக்கு சென்னை மாதிரியான ஊர்களுக்கு ஆட்கள் வருவதுபோல, ருமேனியா, போலந்து முதலிய பின்தங்கிய ஐரோப்பிய நாடு களில் இருந்து பிரிட்டனில் வந்து அடிமட்ட வேலைகளில் மக்கள் ஈடுபடுவது இயல்பு.

ஆங்கில மக்கள் மத்தியில் இதற்கு எதிரான ஒரு பொது மனநிலை நிலவியது. நாட்டின் வேலையின்மைக்கும், பொருளா தார மந்தநிலைக்கும் இந்த மலிவு விலை ஐரோப்பிய ஆட்களே காரணம் என்கிற பிரசாரம் முன்னெடுக்கப் பட்டது. ‘நாம் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து அங்கம் வகித்தால் நம்மை இவர்கள் சுரண்டிவிடுவார்கள், எனவே, நாம் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதே தீர்வு’ என முடிவெடுத்தார்கள். ‘பிரெக்ஸிட்’ தொடர்பான வாக்கெடுப்பில் அதற்கு பெரும் பான்மையினர் ஆதரவு தந்ததால் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவானது.

அதன்பிறகு ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வந்து வேலை செய்ய விசா வேண்டும். அந்த விசாவுக்கு ஒரு கம்பெனி விண்ணப்பிக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறை வந்தது. இதனால் மலிவு விலையில் பணியாளர்கள் கிடைப்பது நின்றுபோனது. வேலைகள் தேங்க ஆரம்பித்தன. ஆள் பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம் படிப்படியாக நடந்தது. இது ஊழியர்களை மட்டும் பாதிக்க வில்லை. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பொருள் களையும் பாதித்தத்து. முன்பு சரளமாக நடந்த சரக்குப் பரிமாற்றம் இப்போது சர்வதேச இறக்குமதியானது.

2020 ஜனவரி இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறி யது. (நல்ல வேளையாக) கோவிட் பெருந்தொற்று உருவெடுத்ததால் பாதகங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அல்லது அதன் விளைவுகளை அப்பட்டமாக அனுபவிப்பது தள்ளிப்போனது.

பிரெக்ஸிட் பாதகங்களை கோவிட் பாதகம் என செளகரிய மாக ஒதுக்கி நிம்மதியும் அடைந் தார்கள். காய்கறி, இறைச்சி, கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்ட எல்லாவற்றின் விலை யுமே ஏறிவிட்டது. மொத்தத்தில் பிரெக்ஸிட், அவர்கள் எதிர் பார்த்ததற்கு நேரெதிரான மோசமான விளைவுகளை உண்டாக்கியது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ரஷ்ய - உக்ரைன் யுத்தம் பிரிட்டனின் பிரச்னைகளை மேலும் ஆழமாக் கியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் ரஷ்யப் பொருள்களுக்கும், ரஷ்ய முதலீடுகளுக்கும் தடை விதித்தன. ஆனால், அவை மறந்துபோன விஷயம், பிரிட்டனின் பெருமளவு எரிபொருள் தேவையை ரஷ்யாதான் நிறைவு செய்து வந்துள்ளது என்பதைத்தான்.

பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக்... பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு ஜெயிப்பாரா?

தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் மற்றும் மின் தேவைகளுக்கான செலவும் பிரிட்டனில் வெகுவாக உயர்ந்தது. ஒரு சராசரி குடும்பத்தின் மின் மற்றும் எரிவாயு செலவு 2 அல்லது 3 மடங்கு ஏறியது. நவம்பர் தொடங்கி அடுத்து வரும் நான்கு மாதங்கள் கடுமையான குளிர்காலம். கோடைக்காலத்தில் இரவு 9 மணி வரை இருக்கும் சூரிய வெளிச்சம் குளிர்காலத்தில் இருக்காது. மாலை 4 மணிக்கே இருட்டிவிடும். வழக்கமாகவே, எரிபொருள் & மின்தேவை குளிர்காலத்தில் பெருகும். இவ்வருடம் எரிபொருள் தட்டுப் பாடு, கட்டுக்கடங்காத விலையேற்றம் என்ற பேரச்சம் நிலவுகிறது. இன்னொரு பக்கம், வங்கிக் கடன்களின் வட்டியும் பன்மடங்கு ஏறிவிட்டது. கோவிட் காலத்தில் 1.5% இருந்த வீட்டுக் கடன் வட்டிவிகிதம், இவ்வருட தொடக்கத்தில் 2.5% எனவும், தற்போது 6% எனவும் ஏறிவிட்டது.

இதைவிடப் பெரிய சிக்கல், பென்ஷன் முதலீடுகளை பாதிப்பது. பிரிட்டனின் பாதிக்கும் மேற்பட்ட தனியார் சேமிப்புகள் பென்ஷன் திட்டங்களில் உள்ளன. அவை பெரும்பாலும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. 2% வட்டி இருக்கும் பொதுக் கடன் பத்திரம் 98 பவுண்டுக்கு விற்கிறது எனில், 8% வட்டி சமயத்தில் அதே கடன் பத்திரத்தின் சந்தை மதிப்பு 92 பவுண்டாகக் குறைந்துவிடும். ஆக, வட்டிவிகிதம் ஏறுவது, கடன் பத்திரங்களின் மதிப்பு குறைவது எல்லாமே பல ஆண்டுக் காலம் மக்கள் சேமித்து வைத்த பென்ஷன் நிதியையும் பாதிக்கிறது.

இத்தனை பிரச்னைகளோடுதான் லிஸ் ட்ரஸ் பிரதமர் ஆனார். லிஸ் டிரஸ்ஸால் நிதி அமைச்சராக நியமிக்கப் பட்ட க்வாசி க்வார்ட்டெங் செப்டம்பர் 23-ம் தேதி அன்று ஒரு மினி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில், 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப் பட்டது. இந்த அறிவிப்பால், பங்குச் சந்தை தடுமாறியது. டாலருக்கு எதிராக பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதை அடுத்து, வருமான வரியைக் குறைக்க மேற்கொண்ட தமது முடிவை கைவிட முடிவு செய்ததுடன், நிதி அமைச்சர் க்வாசி க்வார்ட்டங்கையும் அந்தப் பதவியில் இருந்து விலக்கிய அடுத்த சில நாள்களுக்குள் லிஸ் ட்ரஸும் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

இப்போது ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். பிரிட்டனின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அவர் என்ன தீர்வு வைக்கப்போகிறார், அரசியல் எதிரிகளையும் எப்படி கையாளப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இனிவரும் காலத்தில் ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!