Published:Updated:

வணிகத் தலைமை கொள் - 13

வணிகத் தலைமை கொள் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமை கொள் - 13

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஓர் அறையில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் எனில், ஒருவர் மட்டுமே சிந்திக்கிறார் எனப் பொருள்

சிறுதொழில் நிறுவனங்களுக்கும் இடைநிலை நிறுவனங்களுக்கும் இன்றிருக்கும் மிகப்பெரிய சவால்... Manpower retention எனப்படும் பணியாளர்களை நெடுங்காலம் நிறுவனத்தில் தக்க வைப்பதற்கு என்ன செய்வது என்பதுதான். நிறுவனத்தின் பணிச்சூழலைப் புரிந்துகொண்டு, நன்கு பயிற்சி பெற்றுப் பணியாற்றும் ஒருவர், அதிருப்தி காரணமாகவோ, அல்லது அதிக பலன்களுக்கு ஆசைப்பட்டோ வேறு நிறுவனத்துக்குத் தாவிவிடாமல் தக்கவைப்பது எப்படி?

1. நல்ல தலைவனாக இருங்கள்:

இன்று நூற்றுக்கு எழுபது பேர் அவர்கள் செய்யும் வேலையை விடுவதற்குக் காரணம் எது தெரியுமா? அதிக சம்பளம் வேண்டியா? இல்லை. தன் மேலாளரின் மீதான அதிருப்தி யாலேயே அவர்கள் பணி விலகு கிறார்கள். ‘My boss is the reason for my resignation' என்பதை நீங்களும் அல்லது உங்கள் நண்பர்களும், சகாக்களும், பணிவிலகிய பெரும் பாலான நேரங்களில் சொல்லி யிருப்பீர்கள்.

எனவே, நல்ல தலைவனாக இருப்பது நல்ல சகாக்களை வழிநடத்த மட்டுமல்ல, அவர்கள் என்றும் நம்மோடு பயணிக்கவும் உதவும். முதலில் உங்கள் சகாக்களுக்கு மரியாதை கொடுங்கள். நான் என் நிறுவனத்தில் பணிபுரிபவர்களைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது ‘colleague' (சகா) என்றே குறிப்பிடுவேன்.

வணிகத் தலைமை கொள் - 13

வாடிக்கையாளரோடு பேசும் போது, ‘‘எங்கள் ஆளை அனுப்பு கிறேன், பையனை அனுப்புகிறேன்'' என்றெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் டீக்கடை நடத்தவில்லை, அலுவலகம் நடத்துகிறீர்கள். அதனால் ‘என் colleague வருவார்' எனச் சொல்லுங்கள். அவரின் பெயரைக் குறிப்பிடுங்கள். நீங்கள் உரிய மரியாதை தந்தால்தான் பிறரும் தருவார்கள்.

அதேபோல் ஒரு நல்ல தலைவன், சம்பளம் தருகிறோம் என்பதற்காக யாரையும் கெட்ட வார்த்தைகளால் நிந்திப்பதையோ, Body shaming எனப்படும் உருவகேலி செய்வதையோ ஒருபோதும் புரிய மாட்டான். சம்பளம் என்பது ஒருவரின் உழைப்புக்கேற்ற ஊதியம், அவரின் விலையல்ல. நம் நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், நம் தலையாய பொறுப்பாகும். மகிழ்ச்சியோடு பணிபுரிபவர் ஒருநாளும் பணிவிலக மாட்டார்.

2. பணியாளர்களுக்குச் செவி கொடுங்கள்:

இன்று நிறைய நிறுவனங்களில் காணப்படும் பிரச்னை, அதன் நிர்வாகி அல்லது மேனேஜர் ஒரு முடிவெடுப்பார். மற்றவர்கள் அதைச் சரி என்று சொல்லிக் கடப்பார்கள். காரணம் அதை ஒருவர் தவறு என்று சொன்னால், அவர் நிர்வாகத்துக்குப் பிடிக்கதாவர்கள் பட்டியலில் சேர்ந்துவிடுவார். இம்மாதிரியான சர்வாதிகார நிறுவனங்களில் பணிவிலகல்கள் நடந்துகொண்டே இருக்கும். ஒரு சமயத்தில் பாதிக்குப் பாதி பேர் விலகி, அவர்கள் வேறு நிறுவனத்தில் சேர்ந்தோ, அல்லது அவர்களே போட்டி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியோ, இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாய் நலிந்து கடைசியில் காணாமல்போகும்.

பணியாளர்கள் கருத்தைக் கேட்பது, செயல்படுத்துவது நிறுவனத்தில் மாற்றுச் சிந்தனைகளை மட்டுமல்ல! இருதரப்பு நம்பிக்கையையும் வளர்க்கும். பணியாளர்கள் நம்மோடு மட்டுமல்ல, அவர்களும் தங்களுக்குள்ளே கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும், விவாதிக்கும் வாராந்திர அலுவலகச் சந்திப்புகளை (Weekly meeting) நடத்துவது எல்லோருக்குமான இணைப்பையும் பலப்படுத்தும். மனிதர்கள் இயக்கமாக அல்லது குடும்பமாகச் செயல்படும்போது விலகல்களும் அரிதாகும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஓர் அறையில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் எனில், ஒருவர் மட்டுமே சிந்திக்கிறார் எனப் பொருள். அது அலுவலக அறையாய் இருப்பின், வெகு சீக்கிரத்தில் அந்த ஒருவர் மட்டுமே அந்த அறையில் அமர்ந்துகொண்டிருப்பார்.

3. பாரபட்சமின்றி நடங்கள்:

ஊழியர்களின் பணிவிலகல்களுக்கு மற்றுமொரு முக்கியக் காரணம், நிறுவனங்கள் அவர்களிடம் பாரபட்சம் பார்ப்பதுதான். ஒவ்வொருவரின் செயல்திறனைக் கணக்கிட்டு, அல்லது அவர்களின் வருவாய்ப் பங்களிப்பைக் கணக்கிட்டு நாம் அவர்களுக்குச் சம்பளம் தரலாம். ஊக்கத் தொகை தரலாம். அதில் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் வேறுபாடு இருக்கலாம். காரணம், அது செயல்திறன் சார்ந்தது.

ஆனால், ஆண்-பெண் பாகுபாடு, சாதிமதப் பாகுபாடு, நட்புப் பாகுபாடு, உறவுப் பாகுபாடு இவற்றையெல்லாம் கொண்டு ஊழியர்களை ஆதரித்தால், உயர்த்தினால், உண்மையான திறமைசாலிகள் வெளியேறிவிடுவார்கள், இது நமக்கான இடமில்லையென!

நான் எனது அலுவலகச் சந்திப்புகளில் நிறைய முறை சொல்லியிருக்கிறேன். என் சக இயக்குநரை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ, எந்த அளவுக்கு மதிக்கிறேனோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் என் ஓட்டுநரை நேசிக்கிறேன், மதிக்கிறேன். பதவிகள் வேறு, அதற்கான சம்பளங்கள் வேறு. ஆனால், மனிதராக எல்லோரும் சமம். அந்நெறியோடு வாழ்ந்தால் மனிதர்கள் நம்மை விட்டு ஒருபோதும் விலக மாட்டார்கள்.

4. அனைவருக்கும் வளர்ச்சி கொடுங்கள்:

ஒருவரை நேர்காணல் செய்யும்போது அவர் கேட்கும் ஊதியம், அவரின் அனுபவம் மற்றும் திறன்களுக்கு நிகராக இருக்கிறதெனில், அல்லது சிறிது அதிகமாகவே இருப்பினும், அவரிடம் சம்பள பேரம் பேசவே மாட்டேன். உடனே அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைத் தயார் செய்து கையில் தந்து விடுவேன். சில ஆயிரங்களுக்காக மூச்சுக்கட்டி பேரம் பேசி, ஏன் ஒரு திறமைசாலியை இழக்க வேண்டும்? அல்லது அந்தப் பேரத்தில் நீங்கள் வென்று, அவரை நிறுவனத்தில் அமர்த்தலாம். ஆனால், பேரத்தில் தோற்ற சங்கடம் அவருக்கு இருக்கும்.

வணிகத் தலைமை கொள் - 13

நான் அடிக்கடி சொல்வது, ஒருவருக்குத் தரும் ஊதியம் நிறுவனத்துக்குச் சிறியது. ஆனால் பணிபுரிபவருக்கு அதுதான் மிகப்பெரியது. ஆகவே அதில் அதிக பேரம் செய்யாதீர்கள். கேட்டதைக் கொடுத்துப் பாருங்கள். கிடைப்பது பெரிதாய் இருக்கும். என் நிறுவனத்தில் எட்டுப் பேர் எனக்கு நேரடியாக ரிப்போர்ட்டிங் செய்கிறார்கள். தங்கள் 25-30 வயதுக்குள் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள். தனி மனிதனாக /மனுஷியாக, பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சேர்ந்த அவர்கள் ஒவ்வொருவரும் இன்று திருமணமாகி நிறைவாக வாழ்கிறார்கள். காரணம், நிறுவனம் அவர்களுக்கு அளித்த வளர்ச்சி. நிறுவனம் எப்படி வளர்ந்தது? எந்தச் சந்தேகமுமின்றி அவர்கள் நிறுவனத்துக்கு அளித்த வளர்ச்சியால்தானே.

இன்றைய தலைமுறைக்குச் சென்ற தலைமுறைகளைவிட அதிக கனவுகள் உண்டு, இலக்குகள் உண்டு. 35 வயதில் வீடு, 40 வயதில் கார் வாங்க வேண்டும் என 15 வருடங்களுக்கு முன்பு ரயிலில் சந்தித்த இளைஞன் ஒருவன் என்னிடம் சொன்னான். அந்த வயது வரம்பு இப்போது இன்னும் குறைந்துவிட்டது. கார் வாங்கி, அப்பார்ட்மென்ட் வாங்கி, பிறகு கல்யாணம் செய்வேன் எனும் இளைஞர்கள் வந்துவிட்டார்கள்.

ஊழியர்களின் இலக்குகளுக்கான வளர்ச்சியை நாம் தரவில்லையெனில், தரும் இடத்துக்கு அவர்கள் சென்றுவிடுவார்கள்.

எனக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களின் வளர்ச்சிதான் என் வளர்ச்சி. என் இடத்துக்கு அவர்கள் வந்தால்தான், நான் அடுத்த நிலைக்குப் போக முடியும். அவர்களின் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் அது பொருந்தும். இப்படியாக வளர்ச்சி என்பது சுழற்சியாக ஆகிவிட்ட நிறுவனங்களில் பணிவிலகல்கள் அபூர்வம்.

5. பணிவிலகியவர்களையும் நேர்காணுங்கள்:

பணிவிலகியவர்களிடம் நேரடியாகவோ அல்லது அலைபேசியிலோ பணிவிலகலுக்கான காரணத்தைக் கேட்டறிவது, நம்மிடம்/நமது மேலாளர்களிடம் அல்லது நிறுவனத்தின் செயல்முறைகளில் உள்ள குறைகளை அறியவும் அவற்றைச் சரிசெய்யவும் நிச்சயம் உதவும். அதன்மூலமாக வருங்காலத்தின் பணி விலகல்களைத் தடுக்க முடியும்.

கடைசியாக, சிறு மற்றும் இடைநிலை நிறுவனங்களுக்குத் தேவைப்படுபவர்கள், Specific skill எனப்படும் அந்தந்த நிறுவனத்துக்கான தனிப்பட்ட நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களே! அதை ஒருவர் முழுமையாக அடையவே இரண்டு வருடங்கள் ஆகும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் பணிவிலகினால், இன்னொருவரை எடுத்து அவர் முழுமை ஆக, நாம் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

அதற்கான பயிற்சியும் தர வேண்டும். இது வீண்வேலைதானே! அதனால் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் பணிபுரிந்தவர்கள் விலகினால், எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள். காரணம் பெரிதெனில் தீர்வு காணுங்கள். அவர் வேலையைத் தொடர வேண்டும், அவ்வளவுதான்.

வாழ்க்கை மட்டுமல்ல, வணிகமும் உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் வெளிதான்.

- வணிகம் பெருகும்