Published:Updated:

வணிகத் தலைமை கொள் - 14

வணிகத் தலைமை கொள்
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமை கொள்

இன்று நிறைய சிறுதொழில் நிறுவனங்களில், உரிமையாளர்களும் சரி, மேலாளர்களும் சரி, தாங்களே எல்லா வேலைகளையும் செய்வார்கள்

`திங்கட்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள்தான் உலகத்தின் தாத்தா பாட்டிகள் எந்த நோயுமின்றி இறந்துபோகிறார்கள்' என நான் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. ஆம், திங்கட்கிழமையன்று ஒரு வணிகனுக்கு அல்லது மேலாளருக்கு வரும் விடுப்பு விண்ணப்பங்கள் இதைத்தான் தெரிவிக்கின்றன.

இல்லாத பாட்டியின் இறப்பு, வராத காய்ச்சல் அல்லது இல்லாத வேறேதோ ஒரு காரணம் நம்மில் பலரை திங்கட்கிழமை அலுவலகம் செல்லாமல் இருக்க வைக்கிறது. சரி, நாம் ஏன் திங்கட்கிழமை அலுவலகம் செல்ல அப்படித் தயங்குகிறோம்? ஏன் தவிர்க்கிறோம்?

இடையில் வந்த ஞாயிறு எனும் விடுமுறைதான் முழுமுதற் காரணம். ஞாயிற்றிலிருந்து, அதன் ஓய்விலிருந்து, அதன் நிம்மதியிலிருந்து, அதன் மகிழ்ச்சியிலிருந்து எளிதில் வெளிவர முடியவில்லை. அதன் நீட்டிப்பே, இல்லாத ஒரு பாட்டியின் இறப்பு.

ஒருவேளை, நாம் பணிபுரியும் அலுவலகமும் மகிழ்ச்சியான இடமாக இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். திங்கட்கிழமை என்ன? எல்லாக் கிழமைகளிலும் உற்சாகமாகப் பணிக்குச் செல்வோம்தானே!

ஆம்! இந்த வாரம் இதுபற்றித்தான் பேசப் போகிறோம். ஒரு மகிழ்ச்சிகரமான அலுவலகம், எல்லோரையும் உற்சாகமாக அலுவலகத்துக்கு வரவழைக்கச் செய்வது மட்டுமல்ல, அவர்களின் செயலாக்கத்தையும் அதிகரிக்கும். யாவரும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக இயங்கவும் வழிவகுக்கும். ஒரு வணிகத் தலைவன் அதை எப்படிச் சாத்தியப்படுத்தலாம்?

வணிகத் தலைமை கொள் - 14

1. நோக்கம் காணுங்கள், உணர்த்துங்கள்:

ஓர் அலுவலத்துக்குப் பணிபுரிய வருபவர்கள் எல்லோருமே தம் இளம்பிராயத்தைக் கடந்து, வயதிலும் அறிவிலும் மேம்பட்ட பக்குவத்தோடு வருபவர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தனிப்பட்ட முறையிலான நோக்கங்கள் அவரவர் விருப்பம் சார்ந்தது. அலுவலகத்தின் நோக்கம் என்பது அனைவரின் விருப்பம் சார்ந்து அமைய வேண்டும். எல்லா அடுக்குகளில் உள்ள ஊழியர்களின் நலனையும் சார்ந்து அலுவலகத்தின் நோக்கம் அமையும்போது, அது எல்லா மட்டத்திலும் நிறைவு கொடுக்கும்.

என் நிறுவனத்தில், எட்டுப் பேர் எனக்கு ரிப்போர்ட்டிங் செய்கிறார்கள். அவர்களோடு நான் நிறைய நேரம் செலவிடுவதுண்டு. வணிக அறம், வாழ்வின் அறம், நன்னடத்தை, சமூகத்துக்கான பங்களிப்பு, அனைவரின் வளர்ச்சி என நிறைய விஷயங்கள் பேசுவதுண்டு. ஏன்? இதோ இந்த 14 வாரங்களாக எழுதி வருகிறேனே, இவை யாவுமே அவர்களோடு ஆண்டுக்கணக்கில் உரையாடிய துதான்.

அவர்களும் அவர்களுக்கு ரிப்போர்ட்டிங் செய்பவர்களோடு நேரம் செலவிட வேண்டுமென்றும், நிறுவனத்தின் பொது நோக்கமான அனைவரின் வளர்ச்சி எனும் சமூகத்துக்கான பங்களிப்பை இளநிலை வரை கடத்த வேண்டுமென்றும் ஆரம்பத்திலேயே உணர்த்தியும்விட்டதால், இன்று எங்கள் நிறுவனத்தின் எல்லா மட்டங்களிலும் நிறைவு என்பது பெரும்பாலும் சாத்தியமாகி யிருக்கிறது.

ஓரிரு சமயங்களில் சில அதிருப்திகள் வருவதுண்டு. அலுவலகத்தில் இளநிலையில் இருப்பவர்கூட இயக்குநர்களோடு நேரடியாகப் பேசலாம், படிநிலையைப் பின்பற்றத் தேவையில்லை எனும் அமைப்பு இருப்பதால், உடனுக்குடன் அவற்றுக்கான தீர்வுகள் காணப்படு வதுண்டு. ‘எல்லோருக்கும் வளர்ச்சி' எனும் நிறுவனத்தின் நோக்கம், எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தானே தரும். அதுதானே நிறுவனத்தையே வளர்க்கும்.

2. ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள், உணர்த்துங்கள்:

‘உங்கள் பணியை நீங்கள் ரசித்துச் செய்கிறீர்களா' என்று ஒருவரிடம் நீங்கள் கேள்வி கேட்கும்போது, ‘ஆம்' என்று பதில் சொல்கிறாரா? எனில், அவர் பணி செய்யுமிடத்தில் முக்கியமான நபராக இருப்பார்; அல்லது முக்கியத்துவம் தரப்படும் நபராக இருப்பார். முக்கியத்துவம் தரப்படவில்லையெனில், பதிலானது நிச்சயம் ‘இல்லை' என்றே இருக்கும்.

ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவரும், தாங்களும் நிறுவனத்தின் ஒரு முக்கிய உறுப்பினர் என எண்ணும்போது, தங்கள் பணியை மிகுந்த மகிழ்வோடு செய்வார்கள். ஒவ்வொரு படிநிலையில் உள்ளவர்களும், தங்களுக்கு அடுத்த படிநிலையில் உள்ளவர்களுக்கு அந்த முக்கியத்துவத்தைத் தரவேண்டும். தராத பட்சத்தில் அந்த இடம் மகிழ்ச்சியாய் இருக்காது. பணி ஆர்வம் குறைவாக இருப்பவர்களின் இடமாக அது மாறியிருக்கும்.

நான் முக்கியமான முடிவுகள் எதையுமே என் சகாக்களோடு கலந்தாலோசிக்காமல் எடுப்பதில்லை.

அலுவலக நேரத்தில் எங்கு செல்கிறேன் என்பதைக்கூட, அவர்களிடம் தெரிவித்து விட்டுதான் செல்கிறேன். இன்னொரு முக்கிய விஷயம், பணிபுரிபவர்களுக்குப் பள்ளி அட்டவணை போல எட்டு மணி நேர பரபரப்பான திட்டப் படிவங்களை நான் அளிப்பதில்லை. அவை ஒருவரைச் சோர்வடையவே செய்யும். அதேபோல, இரவு ஏழு மணிக்கு மேல் என் சகாக்கள் யாரையும் அலை பேசியில் அழைக்கவும் மாட்டேன். அது அவர்கள் நேரம், அவர்கள் குடும்ப நேரம்.

கடைசியாக, ஆனால் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது... அலுவலகம் மகிழ்வான சூழலுக்கு மாற, முதலில் நாம் மகிழ்வாக இருக்க வேண்டும். மற்றவர்களை மகிழ்விக்கவும் வேண்டும். நகைச்சுவையைத் தவிர வேறு எது அதைச் சிறப்பாகச் செய்ய முடியும்? நம் தேசத்தந்தை காந்தி சொல்லியிருப்பார், ‘எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.'

3. முழுத்திறனையும் வெளிப்படுத்த வாய்ப்பு தாருங்கள்:

இன்று நிறைய சிறுதொழில் நிறுவனங்களில், உரிமையாளர்களும் சரி, மேலாளர்களும் சரி, தாங்களே எல்லா வேலைகளையும் செய்வார்கள். அடுத்தநிலை ஊழியர்களுக்குப் பகிரமாட்டார்கள். காரணம், அடுத்த நிலை ஊழியர்கள் நம்மைப் போல் சரியாகச் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம்தான்.

தவறுகளே இழைக்காமல், ஒருவர் எப்படி எல்லா வேலைகளையும் கற்கமுடியும்?! நாமுமே பல தவறுகள் புரிந்துதானே, பணியில் முழுத்திறனை அடைந்தோம். எப்போதுமே சரிகளைச் செய்துகொண்டு வருபவனைவிட, தவறுகளிலிருந்து மீண்டவனே தன் முழுவீச்சையும் தெரிந்தவனாகிறான். ஐன்ஸ்டீன் சொன்னதுபோல, ‘ஒருபோதும் தவறு செய்யாத எவரும், எதையும் புதிதாக முயன்றதே இல்லை.'

ஆகவே ஒருவர் சிலமுறை விழுந்தாலும், தோற்றாலும் பரவாயில்லை. நிறுவனம் விரிவாக வேண்டுமெனில் வாய்ப்புக் கொடுங்கள். நீங்கள் அடுத்த கட்டத்துக்கும், அவர் உங்கள் நிலைக்கும் வர அதுவே ஒரே வழி. அதுவே இருவரின் மகிழ்ச்சியும்.

வணிகத் தலைமை கொள் - 14

4. உங்கள் பதவிக்கல்ல, மனிதத்துக்கே நிரந்தர மதிப்பு:

தொண்ணூறுகளில் நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அங்கொரு சர்வ வல்லமை பொருந்திய மேனேஜர் இருந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த மரியாதை, சரியாகச் சொன்னால் அவர் கேட்டு வாங்கிக்கொண்டிருந்த மரியாதை, அவருக்கு அளவில்லாத ஆனந்தம் தந்தது. அவர் பெட்டியை இன்னொருவர் சுமக்க வேண்டும். கார் நின்றவுடனே இறங்க மாட்டார். யாராவது வந்து கார்க் கதவைத் திறக்கவேண்டும். மதுவகம் சென்றால், அவர் குடிக்கும் சிகரெட்டைக்கூட அங்கிருக்கும் பணியாளர் பற்றவைக்க வேண்டும்.

இப்படிப் பல பரிவட்டங்களையும், பற்பல முதல் மரியாதைகளையும் அனுபவித்து வந்த மேனேஜர் ஒருநாள் பணி விலகினார். அவர் எந்த நிறுவனத்தில் போய்ச் சேர்ந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாது. நான் பேச்சுவாக்கில் ஒரு சகாவிடம் கேட்டபோது, ‘‘ராம், அந்தாளு போன சந்தோஷத்தை அனுபவிப்பியா, இல்ல, அவர் எங்க போனார்னு தேடிக்கிட்டு இருப்பியா!'' எனச் சிரித்தார்.

ஆம், அப்படிப்பட்ட மேனேஜர்கள் போவதால்தான் மகிழ்ச்சி ஏற்படுமே தவிர, இருக்கும்போது அல்ல. சக ஊழியர்கள் எல்லோரிடமும் முதலில் நாம் சக மனிதனாக நடத்தலே, அவர்களுக்கு நிறைவு தரும்; மகிழ்ச்சி தரும்.

மேலும், சிறு மற்றும் இடைநிலை வணிகர்கள் இன்றுள்ள கார்ப்பரேட் முறையில் இயங்க முடியாது. இயங்கவும் கூடாது. இங்கு தோழமைப் பிணைப்பே வளர்ச்சியின் ஆதாரம். அந்தப் பிணைப்பால்தான் நான் இன்றும் என் சகாக்களின் நற்செய்கைகளை மனம் திறந்து பாராட்டுகிறேன். எதிர்க் கருத்தைப் பரிசீலனை செய்கிறேன். சரியெனில் ஏற்றுக்கொள்கிறேன். என் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இந்தத் தோழமைப் பிணைப்புதான் எல்லோரையும் வளர்க்கிறது.

ஒரு தலைவனின் வெற்றி என்பது, எல்லோரையும் வளர்ப்பதில்தான் இருக்கிறது.

- வணிகம் பெருகும்...