Published:Updated:

வணிகத் தலைமை கொள் - 15

வணிகத் தலைமை கொள்
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமை கொள்

இறுதியாக ஒரு விஷயம். வாடிக்கையாளருக்கோ, அலுவலக சகாவுக்கோ, அடுத்த தலைமுறைக்கோ, முகம் தெரியாத ஒருவருக்கோ, சமூகத்துக்கோ, இப்படி யாருக்கேனும் நாம் செய்யும் நல்லது, ஒரு நாள் நமக்கும் நிச்சயம் கிடைக்கும்.

வணிகத்தின் அத்தனை நிமித்தங்களையும் கடந்த வாரங்களில் ஒவ்வொன்றாகப் பார்த்தோம். என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என வணிகத்தின் மொத்தப் பரிமாணங்களையும் அலசினோம்.

சரி. அவற்றின்படி அல்லது அதற்கும் மேலாகவே பரிணமித்த பின்னும், ‘‘சிறப்பான முறையில் வணிகம் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது'' என்று நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘‘பணமெல்லாம் வருது சார், ஆனா சந்தோஷம் இல்ல” என வருத்தப்படும் வணிகர்களும் உண்டு. இன்று என்பது நன்றாகவே இருந்தாலும், நாளையை நினைத்துக் கவலைப்படுவதை, நடுத்தர வயது வணிகர்களிடம் அதிகமாகவே கண்டிருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுதான். சில இலக்குகளை/வாழ்வியலை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். வணிகத்தில் மட்டுமல்ல, வாழ்விலும்! பொருளாதார இலக்குகள் குறித்து நான் அதிகம் பேசப்போவதில்லை. வணிகம் வளர வளர, அது மாறிக்கொண்டே இருக்கும்.

வணிகத் தலைமை கொள் - 15

1. அடிப்படை இலக்குகள்

நான் நாற்பது வயதில் வணிகம் தொடங்கியவன். கொஞ்சம் தாமதமாக வாழ்க்கையில் செட்டில் ஆனவன். குறையொன்றுமில்லை. நடுத்தர வயதில் வணிகம் தொடங்கியது எனக்கு நிறைய வகைகளில் நன்மையே தந்தது. வாழ்வின், வணிகத்தின் முதன்மைகள் எவை என்று புரிந்தது. பணத்தைக் கையாளும் பக்குவம் வந்திருந்தது. கவனச்சிதைவின்றிப் பணிகளைச் செய்ய முடிந்தது.

இருந்தும், இருபத்தைந்து வயதின்போதே, இன்னும் சொல்லப்போனால் திருமணமான போதிலிருந்தே இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கருதினேன். ஒன்று, 35 வயதில் கார் இருக்க வேண்டும். மனைவி, பிள்ளைகள் எனக் குடும்பம் விரிவடைந்த பிறகு, இன்றைய சூழலில் கார் என்பது அத்தியாவசியம் ஆகிப்போகிறது. அடுத்து, 40 வயதில் சொந்த வீடு இருக்க வேண்டும்.

இரண்டையுமே என்னால் அடைய முடிந்தது. சிலருக்கு வீடு முதன்மையாகவும், வாகனம் அடுத்ததாகவும் இருக்கலாம். சிலருக்கு இன்னும் சில வருடங்கள் முன்பே அவற்றை அடையவேண்டும் என்ற இலக்குகள் இருக்கலாம். ஆனால் வாழ்வில், வணிகத்தில் இந்த இரண்டின் இலக்குகள் மிகவும் அவசியம். நாம் மேலும் வளர அவை இரண்டும் நிச்சயம் துணைபுரியும்.

2. அடுத்த தலைமுறையின் வளர்ச்சி:

பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பது நம் கடமை. ஆனால் அதனினும் முக்கியமானது அவர்களுக்கு உலகத்தைக் காட்டுவது, உலகத்துக்கு அவர்களைக் காட்டுவது. ஆங்கிலத்தில் சொல்வார்களே Exposure, அதைப் பிள்ளைகளுக்கு முதலில் தரவேண்டும். கல்வியினும் மேலாக அதுவே பிள்ளைகளை உயர்த்தும், உறுதியாக்கும்.

விளையாடுவதற்கும் இடமில்லாத கான்க்ரீட் காட்டில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கேனும் சென்று விளையாடட்டும். அக்கம்பக்கப் பிள்ளைகளோடு பழகட்டும். வருடத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு நெடுந்தூரம் அல்லது பள்ளிச் சுற்றுலாவேனும் பயணிக்கட்டும். உலக இலக்கியங்கள் படிக்கட்டும். வீட்டின் வேலைகளைச் செய்யட்டும். அரசியல் அறியட்டும்.

என் பிள்ளைகள் எட்டாம் வகுப்பு வந்தபோது, நான் நிறைய விஷயங்களை அவர்களோடு விவாதிக்க ஆரம்பித்தேன். அவர்கள் பார்வை எனக்குப் புதிதாக இருந்தது. சில கோணங்கள் தவறாகவும் எனக்குப் பட்டன. ஆனால் ஒரு நாளும், ‘‘உனக்கு ஒண்ணும் தெரியாது, வாயை மூடு” எனச் சொன்னதில்லை. எழுந்து நின்று எதிர்த்துப் பேசியபோதும் சொன்னதில்லை. கருத்தைக் கருத்தால் எதிர்கொள் என மட்டும் குறுக்கிட்டிருக்கிறேன். ஆனால் விவாதத்தை எப்போதும் ஊக்குவித்திருக்கிறேன். அவர்கள் வளர வளர, உலகத்தை எதிர்கொள்வதற்கு அந்த விவாதச் சூழல் பெரிதும் உதவியது, உதவுகிறது.

அவர்களிடம் சொச்சப் பணம் அளித்து, கடைகளுக்கு, பெரிய அங்காடிகளுக்குச் சென்று வீட்டுக்கான மளிகைகளை, தின்பண்டங்களை வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருக்கிறோம். ‘ஒவ்வொரு பொருளின் விலை பார்த்து, தேவையைப் பார்த்து முடிவு செய்' எனச் சொல்வோம். பின்னாள்களில் பெரும் பணத்தைக் கையாள, அவர்களுக்கு இப்போதே இம்மாதிரி சிறு சிறு பொருள்களை வாங்குதல்/தவிர்த்தல் துணைபுரியும்.

வணிகத் தலைமை கொள் - 15

3. வணிகத்திலும் வளரட்டும் அடுத்த தலைமுறை:

வீட்டில் பிள்ளைகளைத் திறம்பட ஆக்கல் எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் அலுவலகத்தில் அடுத்த தலைமுறையை வளர்த்தல். என் நாற்பதுகளின் இறுதியில், என் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான அணியை நான் உருவாக்கிவிட்டேன். அனைவரும் ஏறக்குறைய பத்து வருடங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். ஒவ்வொருவரும் அவரவர் நிர்வாகத்தை, அடிப்படையிலிருந்து கற்றவர்கள். அவர்களைவிட, வேறு எவரிடம் என் நிறுவனத்தை நான் ஒப்படைக்க முடியும்? சிலரை இப்போதே நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் ஆக்கிவிட்டேன்.

நான் இப்போது ஐம்பது வயது கடந்தவன். என் நாற்பதுகளில் நான் இவர்களோடு செலவிட்ட நேரமும், அப்போது அவர்களுக்கு அளித்த பயிற்சிகளுமே என் நேரத்தை எனக்கு இன்று மிச்சப்படுத்துகின்றன. என் 80% பணிகளை இன்று அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். நான் வேறு பணிகள் செய்ய முடிகிறது. அதனால் நிறுவனம் மேலும் வளர்கிறது.

ஒரு கலைஞன், தன் கலை அழியாமலிருக்க, எப்படி அதைத் தன் அடுத்த தலைமுறைக்குக் கற்பித்து அவர்களையும் கலைஞன் ஆக்குகிறானோ, ஒரு வணிகனும் அப்படிச் செய்தால்தானே வணிகம் காலத்துக்கும் நிற்கும்!

4. உடல்நலம் மற்றும் மனநலம்:

வணிகத்தில், நாம் எப்போதும் அமரும் நாற்காலியின் எதிரில் Tension எனப்படும் மன உளைச்சலும் வந்து அமர்ந்து கொள்கிறது. நாட்பட நாட்பட அது நம் உடல், மனம் எனக் குடிகொண்டு நம் இயக்கத்தையே முடக்கிவிடும். எதிரில் இருக்கும் டென்ஷனை விரட்டும் வழிகளே உடல்நலம் மற்றும் மனநலம் பேணுதல்.

காலையோ, மாலையோ குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். இரவு உணவைக் குடும்பத்தோடு அமர்ந்து உண்ணுங்கள். இரவு ஏழு மணிக்குமேல் அலைபேசியை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள். மணிக்கு ஒருமுறை வேண்டுமானால் அழைப்பு/செய்தி இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் இன்று எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிடுகிறீர்களோ, அதுதான் நாளைக்கான பணிகளைச் செய்யப் புத்துணர்ச்சி தரும்.

கூடவே, ஏதேனும் ஒரு பொழுதுபோக்கோ, ஆர்வச்செயலோ கொள்ளுங்கள். புத்தகங்கள் வாசிக்கலாம். கவிதை/கட்டுரை எழுதலாம். பாட்டுப் பாடலாம். பியானோ வாசிக்கலாம். சிறிது நேரம் சமூக வலைதளங்களில் இயங்கலாம். பயணம் செய்யலாம். வாரக் கடைசிகளில், நாமே வீட்டில் சமைக்கலாம்.

இப்படி ஏதோ ஒன்று, நம் மனநலத்தைப் பேணுவதற்கு அவசியம். இல்லையெனில் ஆயிரமிருந்தும் வசதிகளிருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்தான்.

வணிகத் தலைமை கொள் - 15

5. சமூகப் பொறுப்பு:

நாம் பெற்ற அனைத்துமே சமூகம் தந்தவைதான். அதற்கு ஓரளவேனும் நன்றியோடு இருத்தல்தானே சரி! அந்த நன்றியை, நம் பிறந்தநாளின்போது, பண்டிகைகளின்போது ஓர் ஆசிரமம் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவளித்து நிறைவேற்றலாம். அருகிலிருக்கும் ஓர் ஏழைக் குழந்தையின் ஒரு வருடக் கல்விச் செலவை ஏற்கலாம். நம் இல்லப் பணியாளரின் பிள்ளையைப் படிக்க வைக்கலாம். இயற்கைப் பேரிடர் காலங்களில் இயன்ற நிதியுதவி மட்டுமன்றி, களத்தில் சென்று நம்மால் ஆனதைச் செய்யலாம். எதுவுமே செய்ய மாட்டேன் எனில், குறைந்தபட்சம் நமக்கு உதவியவர்களுக்கேனும் உதவலாம். சாதி, மத வேறுபாடுகளைத் தவிர்த்து நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான உதாரண மனிதனாக வாழலாம்.

இறுதியாக ஒரு விஷயம். வாடிக்கையாளருக்கோ, அலுவலக சகாவுக்கோ, அடுத்த தலைமுறைக்கோ, முகம் தெரியாத ஒருவருக்கோ, சமூகத்துக்கோ, இப்படி யாருக்கேனும் நாம் செய்யும் நல்லது, ஒரு நாள் நமக்கும் நிச்சயம் கிடைக்கும். இறை நம்பிக்கை, இயற்கை நம்பிக்கை எல்லாம் கடந்து இதைச் சொல்கிறேன். காரணம், நாம் செய்யும் நல்லவற்றை கடவுள் பார்க்கிறாரோ இல்லையோ, மனிதர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நல்லது செய்வார்கள். அது நாம் மற்றவருக்குச் செய்ததைவிடப் பன்மடங்கு அளவில் இருக்கும் என்பதுதான் நல்லவனுக்கு உலகம் அளிக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம்.

வணிகம் தொடரட்டும் இனி உங்களால், நன்றி!

- நிறைவு