மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 10: ரிஸ்க் எடுத்தால் சாதனையாளராகலாம்!

அருண்யா சக்திவேல்
News
அருண்யா சக்திவேல்

அருண்யா சக்திவேல்

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், பொள்ளாச்சி ‘இந்தியன் கோகனட் புராடக்ட்’ நிறுவன உரிமையாளர், அருண்யா சக்திவேல்.

அப்பாவின் நிறுவனத்தில் ஊழியராகத் தனது பிசினஸ் கனவுக்கு அடித்தளமிட்டார் அருண்யா. சில ஆண்டுகளில் போதிய அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தத் தனி நிறுவனத்தைத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே வெற்றியையும் வசப்படுத்தியிருக்கிறார். இன்று பொள்ளாச்சியில் நம்பிக்கைக்குரிய இளம் தொழில்முனைவோராக அசத்திவரும் அருண்யா, தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

முதல் பட்டதாரி!

“பொள்ளாச்சியில் பாரம்பர்ய விவசாயக் குடும்பம். இளம் வயதில் மைசூர்ல வளர்ந்த அப்பா, பிறகு விவசாய வேலையோடு தேங்காய் டிரேடிங் தொழிலிலும் ஈடுபட்டார். மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்தவர் தொழிலை விரிவுபடுத்தினார். தேங்காயிலிருந்து பருப்பு எடுத்து அதையும் விற்பனை செய்தார். பிறகு, ‘சூப்பர் கோகோ’ என்ற தேங்காய் பவுடர் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அப்பாவின் முந்தைய தொழிலை அம்மா கவனிச்சுக்கிட்டாங்க. பிசினஸ் குடும்பமா இருந்தாலும், ஒவ்வொரு ரூபாயையும் உழைப்பு மற்றும் பணத்தின் அருமை தெரிஞ்சு செலவழிக்கணும்னு கத்துக்கொடுத்த பெற்றோர், அதைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கவும் பழக்கப்படுத்தினாங்க.

அருண்யா சக்திவேல்
அருண்யா சக்திவேல்

பள்ளிப் படிப்பையே முடிக்காத பெற்றோரின் பிசினஸ் திறமையைப் பார்த்து வளர்ந்ததால, எதிர்காலத்துல தொழில்முனைவோராகி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கணும்கிற எண்ணம் என் மனசுல தங்கிடுச்சு. 2013-ம் ஆண்டு, குடும்பத்துல முதல் பட்டதாரியாக படிப்பை முடிச்சதுமே அப்பாவின் நிறுவனத்தில் நானும் ஊழியராகச் சேர்ந்தேன். அடிப்படை வேலைகளிலிருந்து படிப்படியா எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். பிறகு, என் படிப்பறிவை பயன்படுத்தி நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தினேன். அதுவரை உள்நாட்டு விற்பனையில் மட்டுமே ஈடுபட்டுவந்த நிலையில, வெளிநாட்டு ஆர்டர்களைப் பிடிக்க முடிவெடுத்தேன். அடிப்படை விஷயங்களை நானே ஆன்லைன் வாயிலாகக் கத்துக்கிட்டேன்.

தனி பிசினஸ் பாதை!

ஏற்றுமதிக்கான முதலீடுகளை அப்பா நம்பிக்கையுடன் செய்தார். 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, துபாய் நாட்டுக்கான அந்த முதல் ஏற்றுமதி ஆர்டர் வெற்றிகரமா நடந்தது. தொடர்ந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, நிறுவனமும் வேகமா வளர்ந்துச்சு. சிறந்த ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருதை எங்களுக்கு வழங்கிப் பாராட்டியது தென்னை வளர்ச்சி வாரியம். அதனால, எனக்குத் தனிப்பட்ட முறையில பெரிய நம்பிக்கை கிடைச்சது. அதுவரை கத்துக்கிட்ட அனுபவத்தில் தனி நிறுவனத்தைத் தொடங்கி, என் திறமையை நிரூபிக்கணும்னு நினைச்சேன். பெற்றோரும் ஊக்கம் கொடுத்தாங்க. வங்கிக் கடன் பெற்று, பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள ஏரிப்பட்டி கிராமத்துல, 2016-ம் ஆண்டு, புதிய நிறுவனத்தைத் தொடங்கினேன்.

என் நிறுவனத்துலயும் முதலில் தேங்காய் பவுடர் உற்பத்தியைத்தான் ஆரம்பிச்சேன். அப்பாவின் நிறுவனத்துல இடைத்தரகர்கள் மூலமாகத்தான் தயாரிப்புப் பொருள்களை விற்பனை செய்துவந்தோம். அதுபோல இல்லாம, வாடிக்கையாளர் நிறுவனங்களுடன் நேரடி நட்புறவுடன் என் நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்தேன். இதில் ரிஸ்க் அதிகம் என்றாலும், வருமானமும் கூடுதலாகக் கிடைச்சது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், சமீப காலங்களில் இலங்கையில் தேங்காய் விலை குறைவுதான். எனவே, அந்த நாட்டு நிறுவனங்களிடமிருந்து தேங்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்களை இறக்குமதி செய்யவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தின. இதனால என் இலக்குப்படி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சூழல்கள் அமையலை. கூடவே, என் நிறுவன வளர்ச்சியிலும் சிக்கல்கள் உருவாகின.

எனக்கான பொறுப்பு!

‘என் தொழிலில் தோல்வி ஏற்பட்டுடுச்சு’ன்னு கலங்கி உட்காருவதில் எனக்கு ஒருபோதும் விருப்பம் கிடையாது. என்னை நம்பி இருக்கும் தொழிலாளர்களைக் காப்பாத்துற பொறுப்பு எனக்கு இருக்கு. அதனால், எத்தகைய சிக்கல்களையும் எதிர்கொள்ளும் உறுதியுடன் இருந்தேன். தேங்காய்த் துருவல் விற்பனையைத் தொடங்கியது உட்பட என் நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்ய புதுப்புது யுக்திகளைக் கையாண்டேன். தவிர, இலங்கை நிறுவனங்களிடமிருந்து தேங்காய் பவுடர்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, அதை இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கும் டீலராக விற்பனை செய்தேன். இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்தது. தேங்காய் விளைச்சல் அதிகமுள்ள தென்னிந்தியாவில், தேங்காயை நேரடியாக வாங்கிப் பயன்படுத்த விரும்பும் மக்கள், அதன் இயல்பான சுவைக்குப் பழக்கப்பட்டவங்க. அதனால, விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்த நினைக்கிற நகரப் பகுதியினர்தான் ரெடிமேட் தேங்காய்த் துருவலை அதிகம் பயன்படுத்தறாங்க.

ரெடிமேட் தேங்காய் பவுடர் மற்றும் துருவலை சமையலில் நேரடியாகப் பயன்படுத்தலாம். இரண்டையும் வெந்நீரில் கலந்து 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்தும் பயன்படுத்தலாம். சட்னி அரைக்கலாம்.

தேங்காயின் சுவை தேவைப்படும் எல்லா உணவுப் பொருள் தயாரிப்புக்கும் தேங்காய் பவுடர் மற்றும் துருவலை விற்பனை செய்கிறேன். வடமாநிலங்களில் விளைச்சல் குறைவாக இருப்பதால், அந்த மக்கள் எங்கள் நிறுவனப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்தறாங்க. பிஸ்கட் மற்றும் பேக்கரி உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தேங்காய் பவுடர்களை அதிகளவில் வாங்குகின்றன.

ஒரு தேங்காயில் பல வருமானம்!

என் நிறுவனத்துக்கு ஒருநாளைக்கு 20 டன் தேங்காய்கள் தேவைப்படுது. பொள்ளாச்சி தவிர, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் நல்ல தரமான தேங்காய்களைத் தொடர்ந்து விலைக்கு வாங்கறேன். அவை குடுமி இல்லாத வடிவத்தில் எங்க நிறுவனத்துக்கு வரும். எல்லாப் படிநிலைகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் அரை கிலோவுல இருந்து அதிகபட்சம் 25 கிலோன்னு பல்வேறு எடை அளவுகளில் தேங்காய் பவுடர் மற்றும் துருவல்களை பாக்கெட் செய்வோம். இவற்றில் 3 சதவிகித ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே, தண்ணீர் மற்றும் காற்று புகாமல் வெச்சிருந்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். சுவை மற்றும் நிறம் உள்ளிட்ட தேவைக்காக எங்கள் தயாரிப்புகளில் ரசாயனங்கள் எதுவுமே சேர்க்க மாட்டோம். தேங்காயிலிருந்து கிடைக்கும் நீரைத் தனியே சேகரித்து ஃப்ரீஸர் யூனிட்டில் வைத்திருந்து விற்பனை செய்கிறோம். உணவுப் பொருள் தயாரிப்பில் சுவையூட்டுவதற்குத் தேங்காய் நீர் பயன்படுகிறது.

தேங்காயின் அடிப்பகுதியிலிருக்கும் பிரவுன் லேயரை தனியே எடுத்து உலரவைத்து விற்பனை செய்கிறோம். அவை சோப்பு ஆயில் தயாரிப்பில் பயன்படும். தேங்காய் சிரட்டை பவுடராக்கப்பட்டு ஊதுபத்தி மற்றும் கொசுவத்திகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பொருள்களின் விற்பனையிலும் குறிப்பிடத் தகுந்த வருமானம் கிடைக்குது.

இந்தியாவில் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கும் தேங்காயிலிருந்து ஏராளமான மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்கலாம். எனவே, பலருக்கும் பயன்தரக்கூடிய வகையில் என் பிசினஸை விரிவுபடுத்தணும். தேங்காய்ப்பால், தேங்காய் உணவுப்பொருள்கள் உட்பட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கேன்.

குடும்பத்தினரின் ஊக்கம்!

இப்போது இலங்கையிலும் தேங்காயின் விலை உயர்ந்து வருது. இதே நிலை தொடர்ந்தால், வெளிநாட்டினர் நம் நாட்டுத் தேங்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்களை வாங்க ஆர்வம் செலுத்துவாங்க. அந்தச் சூழலை எதிர்நோக்கி இருப்பதுடன், வெளிநாட்டு ஏற்றுமதிக்கான பணிகளிலும் கவனம் செலுத்தறேன்.

பட்டதாரி விவசாயியான என் கணவர் உட்பட புகுந்த வீட்டில் எல்லோருமே என் பிசினஸ் பயணத்துக்கு ஊக்கம் கொடுக்கறாங்க. ‘குடும்பம், பிசினஸ் ரெண்டுமே முக்கியம். ஒன்றினால் இன்னொன்றுக்குப் பிரச்னை வராமல் பார்த்துக்க’ன்னுதான் என் ரெண்டு குடும்பத்தினரும் சொல்வாங்க. அதன்படி திட்டமிட்டு செயல்படுவதுடன், பிறந்து ஐந்து மாதமாகும் என் குழந்தையைக் கவனிச்சுக்கிட்டு பிசினஸ்ல உற்சாகமா கவனம் செலுத்தறேன்.

இப்போ படிப்பை முடிச்சிருக்கிற என் தங்கையும், என்னைப் பார்த்துத் தொழில்முனைவோராக ஆசைப்படுறாங்க. அப்பாவின் நிறுவனத்துல முன்பு நான் வேலை செய்ததுபோல இப்போ தங்கச்சியும் தொழில் அனுபவங்களைக் கத்துக்கிறாங்க.

அப்பாவின் பிசினஸில் இருந்தபடியே அவரின் நிழலிலும், பாதுகாப்பான சூழலிலும் இல்லாம, துணிஞ்சு தனியா பிசினஸைத் தொடங்கினேன். அதனாலதான் இன்னிக்கு எனக்கான அடையாளம் கிடைச்சிருக்கு. மேலும், பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கிறேன். கூட்டத்துல ஒருத்தராகவே இருக்கிறதும், ரிக்ஸ் எடுத்து சாதனையாளராக மாறுவதும் அவரவர் முடிவுகளில்தான் இருக்கு. நம் ஒவ்வொரு துணிச்சலான முடிவுகளுக்குப் பின்னும் சிறப்பான வெற்றி காத்துக்கிட்டிருக்கு!”

தேங்காய் பவுடர் மற்றும் துருவல்
தேங்காய் பவுடர் மற்றும் துருவல்

50 ஊழியர்கள்... ₹10 கோடி ரூபாய் டர்ன் ஓவர்!

தேங்காய் பவுடர் மற்றும் துருவல் தயாரிப்பில் ஒருநாளில் ஏழு டன் உற்பத்தி நடைபெறுகிறது. பல மாநிலங்களைச் சேர்ந்த 25 நிறுவனங்கள், இவர் நிறுவன வாடிக்கையாளர்கள். 50 ஊழியர்களுக்கு முதலாளியான அருண்யா, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார். விரைவில் தேங்காய் எண்ணெய் விற்பனையிலும் ஈடுபட இருக்கிறார். நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். இவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி கற்கும் வசதியையும் உருவாக்கிக்கொடுக்கிறார்.

தேங்காய்
தேங்காய்

என் அனுபவத்திலிருந்து...

வ்வொரு நாளும் நிறுவனத்தின் வளர்ச்சியைச் சரியா கண்காணிக்கணும். எதிர்கால இலக்குகளை முன்கூட்டியே துல்லியமா கணக்கிடணும். எதிர்பாராத ஏற்ற, இறக்கங்கள் வந்தால் அந்தச் சூழலில் விரைவாகவும் சரியாகவும் முடிவுகள் எடுக்கணும்.

மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்றவங்கள்ல தொடங்கி, உற்பத்தி முடிந்து நம் தயாரிப்புப் பொருள் வாடிக்கையாளரைச் சென்றடைவது வரை பலரின் ஒத்துழைப்பு அவசியம். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, நேர்வழிப் பாதையில் தொழில் நடத்தினால்தான் நீண்டகால வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.

பிராசஸ்
பிராசஸ்

இதுதான் பிராசஸ்!

தினமும் தேங்காய்களை கொள்முதல் செய்வோம். அவற்றிலிருந்து, சேதாரமான காய்களை நீக்கிவிட்டு, தரமான தேங்காய்களை மட்டுமே பயன்படுத்துவோம்.

தேங்காய் சிரட்டையைத் தனியாக எடுத்துவிட்டு, தேங்காயின் மீதிருக்கும் பிரவுன் நிற லேயரை நீக்கிவிடுவோம். அதனால், தேங்காய் பவுடர் மற்றும் துருவலில் கசப்புத் தன்மை இருக்காது. மேலும், தயாரிப்புப் பொருளில் வெள்ளை நிறமும் உறுதி செய்யப்படும்.

வெள்ளைப் பந்து வடிவத்தில் இருக்கும் தேங்காயைப் பல துண்டுகளாக உடைத்து, நல்ல காய்களை மட்டுமே பவுடர் மற்றும் துருவல் வடிவில் மாற்றுவோம். பிறகு, அதிலிருக்கும் ஈரப்பதத்தை உலர்த்தி, பின்னர் வெப்பநிலை குளிர்விக்கப்படும்.

தேங்காய் பவுடர் மற்றும் துருவலை தனித்தனியே எடை வாரியாக பாக்கெட் செய்து வாகனத்தில் அனுப்பி வைப்போம்.

நிறுவனத்துக்குள் வரும் தேங்காய், மேற்கண்ட அனைத்துப் படிநிலைகளையும் கடந்து 24 மணிநேரத்தில் மதிப்புக்கூட்டுப் பொருளாக மாறிவிடும்.