
“சென்னையில் மிக ஏழ்மையான குடும்பம். அப்பா, மீன் கடைக் கூலி வியாபாரி.
பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம் பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்புத் தொடர் இது. இந்த இதழில், சென்னை, ‘இஃபா வின் மரைன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவன உரிமையாளர் ஃபெளஸியா.
படிப்பும் பின்புலமும் மட்டுமே வெற்றி பெறுவதற்கு அடிப்படைத் தகுதிகள் இல்லை என்பதற்கு மற்றுமோர் உதாரணம், ஃபெளஸியா. கணவரின் தொழிலுக்கு உதவ வந்தவர், கிடைத்த அனுபவங்களைக்கொண்டு தொழில்முனைவோராக தனிப்பாதையில் களமிறங்கினார். தடைகள் பலவற்றையும் கடந்து இரண்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்திருக்கும் ஃபெளஸியா, தனது வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
காதல் திருமணம்!
“சென்னையில் மிக ஏழ்மையான குடும்பம். அப்பா, மீன் கடைக் கூலி வியாபாரி. கூடப்பிறந்த ஒன்பது பேரில் நான் கடைக்குட்டி. அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். குடும்ப வறுமையால் ப்ளஸ் டூ-க்குப் பிறகு படிக்க முடியலை. இந்து மதத்தைச் சேர்ந்த நானும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இஸ்மாயிலும் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துக்கிட்டோம். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த என் கணவர், நாலு வயசுல தினக்கூலியாக மீன் வியாபாரத்தில் இறங்கினார். கல்யாணத்துக்குப் பிறகு, சொந்தமா மீன் கடையைத் தொடங்கி படிப்படியா உயர்ந்தார். ரெண்டு மகள்களையும் கவனிச்சுக்கிட்டு, பள்ளி ஒன்றைத் தொடங்கும் என் இளமைக்கால இலக்குக்காகத் தொலை நிலைக் கல்வியில் எம்.காம் படிச்சேன்.

கம்ப்யூட்டர், டைப்ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் உட்பட பல பயிற்சி வகுப்புகளுக்குப் போனேன். கூச்சம் பார்க்காம புதிய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒருகட்டத்துல பெரிய நஷ்டம் ஏற்பட்டு, கணவரின் நிறுவனத்தை மூடும் நிலை உருவானது. நான் அவருக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன் வீட்டிலிருந்தபடியே நிர்வாகப் பொறுப்புகளை கவனிச்சுக்கிட்டேன். மீன்களை நேரடியாகக் கொள்முதல் செய்கிற பொறுப்பை கணவர் கவனிச்சுக்கிட்டார். தினசரி வரவு செலவுகளை முறையாகப் பதிவு செய்ததுடன், தேவையற்ற செலவுகளையும் குறைச்சேன். நிறுவனத்தில் முன்பு ஏற்பட்ட தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்தேன். தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப, சிந்தாதிரிப்பேட்டையில புதுக் கடையைத் தொடங்கினோம்.
வெற்றி மட்டுமே இலக்கு!
12 வருஷங்களுக்கு முன்பு மீன் விற்பனை யாளர்களுக்குப் பெரிசா மதிப்பில்லை. ஆண்கள் சூழ்ந்த இந்தத் தொழிலில் பெண்கள் இருப்பது சரிவராதுன்னு பேசினாங்க. அப்போ, இந்தத் துறையில் நிர்வாகப் பொறுப்புகளிலும் ஆண்கள் மட்டுமே இருந்தாங்க. அதனால வாடிக்கையாளர்கள் உட்பட பல தரப்பிலும் எனக்கு மதிப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கலை. வருத்தமா இருந்தாலும், வெற்றி மட்டுமே என் இலக்காக இருந்தது. அதுக்காக சில விஷயங்களைத் திட்டமிட்டுச் செஞ்சேன்.
எங்க கடையில கடல் உணவுகளின் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டு வெச்சிருப்போம். வெரைட்டியான மீன் வகைகளை விற்பனை செய்வோம். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் இருக்கிற நேரத்துல வெளிமாநிலங்களில் இருந்து மீன்களை வாங்கி விற்பனை செய்து வியாபார வாய்ப்புகளை அதிகப்படுத்தினோம்.
கணவரின் ‘ஏ.ஏ.ஏ ஸீ எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்தோம். இவ்வளவு அனுபவத்துடன் லோக்கல் மார்கெட்டிங்ல மட்டுமே கவனம் செலுத்தாமல், ஏற்றுமதியாளராகவும் ஆகணும்னு முடிவெடுத்தேன். முந்தைய நிறுவனத்தை கணவர் கவனிச்சுக்க, `அனிஷா மெரைன் எக்ஸ்போர்ட்’னு புது நிறுவனத்தைத் தொடங்கினேன். நான் கொள்முதல் செய்யும் கடல் உணவுகளை, இந்தத் துறையிலுள்ள மேனுஃபேக்சரிங் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் கொடுத்து பேக்கிங் செஞ்சு வாங்கி ஏற்றுமதி செய்யும் மெர்சன்ட் எக்ஸ்போர்ட்டராகச் செயல்பட்டேன். பெரிய பின்புலம் இல்லாததால், நிறைய புறக்கணிப்புகளையும் தொழில் போட்டிகளையும் எதிர்கொண்டேன்.
கடற்கரையில் கலக்கம்!
நானே கூகுள் பார்த்து வெளிநாட்டு நிறுவனங்கள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, ஏற்றுமதிக்கான ஆர்டர் கேட்டு விண்ணப்பிச் சேன். பல இடர்பாடுகளுக்குப் பிறகு, படிப்படியா சில நாடுகளின் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைச்சுது. 10 வருஷங்களுக்கு முன்பு, தைவான் நாட்டுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர் கிடைச்சுது. `தொடர் விடுமுறை வருவதால் ஆர்டரை அனுப்ப வேண்டாம்’னு கடைசி நேரத்துல அந்த வாடிக்கையாளர் சொல்லிட்டார். ‘இந்த ஆர்டரை அனுப்பாதீங்க’ன்னு என் ஊழியர்கிட்ட சொல்லிட்டு, வேலைப்பளுவில் விஷயத்தை மறந்துட்டேன். ஆனா, இந்த ஆர்டரை என் நிறுவன ஊழியர்கள் அனுப்பிட்டாங்க. பதறிப்போய் சென்னை விமான நிலையத்துக்கு ஓடினேன். ஆனால், அதுக்குள்ள சரக்கு போய் சேர்ந்திடுச்சு.

`ஏராளமானோரின் உழைப்பும் பணமும் வீணாகிடுச்சே’ன்னு வரும் வழியில் மெரினா கடற்கரையில் உட்கார்ந்து அழுததையெல்லாம் மறக்கவே முடியாது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாதுங்கிறதுல கவனமா இருந்தேன். அதுக்குப்பிறகு என் கவனத்துக்கு வராமல் எந்த ஆர்டரும் டெலிவரிக்குப் போகாது. அடுத்தடுத்த சவால்களை மீறி, என் நிறுவனத்தையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்தேன். மேனுஃபேக்சரிங் ஏற்றுமதி யாளர்களுக்குத்தான் பெரிய ஆர்டர்கள் கிடைப்பதுடன் மதிப்பும் அதிகம். எனவே, எட்டு ஆண்டுக் கால ஏற்றுமதியாளர் அனுபவத்தில், மேனுஃபேக்சரிங் ஏற்றுமதியாள ராக முடிவெடுத்தேன். அதுமாதிரியான நிறுவனங்களுக்கு நேரில் போய் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி, உள் கட்டமைப்புகளைத் தெரிஞ்சுக்க ரொம்பவே சிரமப்பட்டேன்.
வசமான வெற்றி!
சென்னையை அடுத்த தானாகுளத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினேன். பல தடைகளை எதிர்கொண்டு, அந்த நிலத்தில் நவீன வசதிகளுடன்கூடிய, `இஃபா வின்' ஏற்றுமதி நிறுவனக் கட்டடத்தை 2018-ம் ஆண்டு கட்டினேன். இரவு பகலா மெனக்கெட்டு கட்டுமான டிசைனிங் பணிகளை நானே செய்தேன். கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய ‘யூரோப்’ மற்றும் ‘நான்-யூரோப்’னு இரு வகையான தரச்சான்றுகள் தரப்படுகின்றன. ‘யூரோப்’ சான்றிதழ் கிடைப்பது மிகவும் சிரமம். ஆனால், அந்தச் சான்றிதழ் கிடைத்துவிட்டால், ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ‘நான்-யூரோப்’ சான்று கிடைத்தால், ஐரோப்பிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.
என் புது நிறுவனத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், `இவ்வளவு சிறப்பம்சங்களுடன் உள்ள நிறுவனத்தைப் பார்ப்பது அரிது’ன்னு பாராட்டி, எனக்கு ‘யூரோப்’ அனுமதி கொடுத்தாங்க. இந்தச் சான்றிதழ் பெற்ற முதல் சென்னை ஏற்றுமதியாளரும் நானே. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஆர்டரில் குறைபாடுகள் இருந்தாலோ, ஆர்டர் சென்று சேரும்போது மீன்கள் கெட்டுப் போயிருந்தாலோ நம் நிறுவனத்தின் தரத்தைப் படிப்படியா குறைச்சுடுவாங்க. இதனால், நம் மீதான நம்பகத்தன்மையும் மதிப்பும் குறையும். எனவே, ஐரோப்பிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளைத் தெரிஞ்சுக்க ஒரு வருஷம் செலவிட்டேன். அதேநேரம் மற்ற நாடுகளுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தேன். சமீபத்தில்தான் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு 1,000 கிலோ மீன்களை ஏற்றுமதி செய்தேன். முதல் ஐரோப்பா ஆர்டர் வெற்றிகரமாக அமையவே, இப்போ இன்னொரு யூரோப் ஆர்டர் கிடைச்சிருக்கு.
ஊழியர்களில் ஒருத்தி!
சில நாள்களாவது கடலில் இருந்தால்தான் மீனவர்களுக்கு ஓரளவுக்கு மீன்கள் கிடைக்கும். ஆனால், பிடிக்கப்பட்ட மீன்கள்மீது சூரிய வெளிச்சம் படப்பட அதன் தரமும் சுவையும் மாறுபடும். எனவே, மீனவர்களிடமிருந்து மீன்களை வாங்கும்போதே, அது பிடிக்கப்பட்டு எத்தனை நாளாகுதுன்னு பார்த்தே கண்டு பிடிச்சுடுவோம். அதில் கடைசியாகப் பிடிக்கப்பட்ட ஃபிரெஷ் மீன்களை மட்டும் வாங்கி, முறையாகச் சோதித்து அதன் தரத்தை உறுதிசெய்துகொள்வோம். ஒவ்வொரு கடல் பரப்பைப் பொறுத்தும் அதில் வளரும் கடல் உணவுகளின் வளர்ச்சியும் சுவையும் மாறுபடும். எனவே, பல பகுதிகளில் இருந்து மீன்களைக் கொள்முதல் செய்தாலும் எல்லா மீன்களும் ஒரே தரத்தில் இருப்பதை உறுதிசெய்வோம். ஏற்றுமதி ஆர்டரில் மீதமாகும் மீன்களை மதிப்புக்கூட்டல் செய்து கருவாடாக விற்பனை செய்கிறோம். தவிர, மீன் கழிவுகளைக் கால்நடை தீவனங்களுக்காக விற்பனை செய்கிறோம்.

தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகள் மற்றும் தொழுகையை முடிச்சுட்டு, 5 மணிக்கெல்லாம் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் கணவரின் நிறுவனத்துக்குப் போவேன். காலை விடியலுக்குள் உள்ளூர் ஆர்டர்களை முடிச்சுட்டு, 10 மணிக்கெல்லாம் தானாகுளத்திலுள்ள என் நிறுவனத்துக்குப் போய்விடுவேன். ஊழியர்களுடன் இணைந்து க்ளீனிங், பேக்கிங் உட்பட எல்லா வேலை களையும் செய்வேன். பெரும்பாலான உணவுப் பொருள்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தரத்தில் உள்ளூர் மக்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, தரமான கடல் உணவுப் பொருள்களை நேரடியாகவும் ஆன்லைன் டெலிவரியில் விற்கவும் ‘ஏ.ஏ.ஏ ஃபிரெஷ் ஃபிஷ்’ என்ற நிறுவனத்தை விரைவில் தொடங்கப்போறோம். இந்தத் துறையில இப்போது நிறைய பெண்கள் வந்துட்டாங்க. ஏற்றுமதியாளராகவும் நிறைய பெண்கள் உருவாகணும். வாருங்கள் ஜெயிப்போம்!”
55 ஊழியர்கள்... ₹30 கோடி டர்ன் ஓவர்!
55 ஊழியர்களுக்கு முதலாளியான ஃபெளஸியா, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். இவரது இரண்டு நிறுவனங்கள் சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா உட்பட 15 நாடுகளுக்குத் தினமும் ஐந்து டன் அளவுக்கு மீன்கள், நண்டு, இறால் உள்ளிட்ட கடல் உணவுகளை ஏற்றுமதி செய்கின்றன. மத்திய அரசின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி அமைப்பு வழங்கிய, ‘இந்திய அளவிலான சிறந்த பெண் ஏற்றுமதியாளரு’க்கான விருதைச் சமீபத்தில் வென்றிருக்கிறார் ஃபெளஸியா. கணவரின் நிறுவனத்தையும் கவனித்துவருகிறார். அந்த நிறுவனத்தின் மூலம், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், கல்வி நிறுவனங்களுக்குத் தினமும் 1,000 கிலோவுக்கு மேல் கடல் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதான் பிராசஸ்!
தினமும் இந்தியாவில் பல துறைமுகங்களிலுள்ள மீனவர் களிடமிருந்து நேரடியாக மீன்களைக் கொள்முதல் செய்கிறோம்.
சோதனைக்குப் பிறகு, ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லாத 10 சதவிகித மீன்களைத் தவிர்த்துவிட்டு, தரமான மீன்களை மட்டும் குளிர்பதனக் கிடங்கில் வைப்போம். எந்தச் சூழலிலும் கடலுணவுகளில் எவ்வித ரசாயனங்களை யும் சேர்க்க மாட்டோம்.
பெரும்பாலும் வெளிநாட்டு விமானங்கள் சென்னையிலிருந்து இரவில்தான் கிளம்பும். அதற்கேற்ப பேக்கிங் செய்வோம்.
பிடிக்கப்பட்ட மீன்களை உடனே ஏற்றுமதி செய்துவிடுவோம். பெரும்பாலும் அடுத்த நாளே அவை வாடிக்கையாளருக்குச் சென்றுவிடும்.
நிறுவனத்திலிருந்து அனுப்பிய பொருள்கள், வாடிக்கையாளரைச் சென்றடையும் வரையிலான நகர்வுகளை இருந்த இடத்தில் இருந்தே கண்காணித்து தெரிந்துகொள்வேன்.
என் அனுபவத்திலிருந்து...
ஒரு செயலைச் செய்து முடிக்கவோ, செய்யும் செயலில் வெற்றி பெறவோ குடும்பச் சூழல் தடையாக இருப்பதாகச் சொல்லவே கூடாது. சாதித்த, சாதித்துக்கொண்டிருக்கும் பெண்கள் பலரும் குடும்பச் சூழல்களில் சாதக, பாதக சவால்களை மீறியே வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
எந்தத் தொழிலில் புதிதாகக் களமிறங்கி னாலும், ஆரத்தழுவி வரவேற்பு கொடுக்க மாட்டார்கள். சவால்கள், புறக்கணிப்புகள், தடைகளை உண்டாக்குவார்கள். அவற்றை யெல்லாம் எதிர்கொண்டு மேலே வந்தால்தான், வெற்றியை வசப்படுத்த முடியும்!