மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 13: மாமியார் சமையல் கற்றுக்கொடுத்தார்... நான் முதலாளி ஆனேன்!

 அனிதா சிவக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா சிவக்குமார்

அனிதா சிவக்குமார்

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்புத் தொடர் இது. இந்த இதழில், சென்னை ‘பாரம்பர்யம் உணவக’த்தின் உரிமையாளர் அனிதா சிவக்குமார்.

வசதியான குடும்பம். பிறந்த மற்றும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கை. இது மட்டுமே ஒரு பெண்ணுக்குப் போதுமா... இந்தக் கேள்வி அனிதாவுக்கும் அழுத்தமாக ஏற்பட்டதன் விளைவாக, தனக்குத் தெரிந்த சமையற்கலையைப் பயன்படுத்தி சமூகத்தில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தொழில்முனைவோராகக் களத்தில் இறங்கினார். இன்று, உணவகம் மற்றும் சோடா நிறுவனங்களின் முதலாளியாக உயர்ந்திருக்கிறார். சொந்தத் திறமையால் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் அனிதா, தனது வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

கேள்வியும் பதிலும்!

“என் பூர்வீகம் தர்மபுரி. அப்பா பிசினஸ்மேன். இளமைக்காலத்துல ஸ்கூல், வீடு மட்டுமே என் உலகம். வீட்டுவேலைகள்கூட என்னைச் செய்ய விடமாட்டாங்க. சென்னையில காலேஜ் முதலாம் ஆண்டு படிச்சுக்கிட்டிருந்தேன். அந்த 17 வயசுலேயே எனக்குக் கல்யாணமாகிடுச்சு. அடுத்த வருஷமே குழந்தை. தொலைதூரக்கல்வி முறையில் எம்.பி.ஏ படிச்சேன். பிறகு, என் ரெண்டு குழந்தைகளை வளர்ப்பதிலும், குடும்பப் பொறுப்புகளைக் கவனிச்சுக்கிறதுலயும் கவனம் செலுத்தினேன். அப்போதான் சமையலில் அதிக ஆர்வம் செலுத்தினேன்.

என் பிசினஸ் கதை - 13: மாமியார் சமையல் கற்றுக்கொடுத்தார்... நான் முதலாளி ஆனேன்!

கல்யாணத்துக்குப் பிறகு மாமியாரும் நாத்தனார்களும்தாம் எனக்குச் சமையல் கத்துக்கொடுத்தாங்க. எங்க கூட்டுக்குடும்பத்துல விதவிதமான உணவுகளைச் சமைப்பேன். நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் சமைச்சுக் கொடுப்பேன். இப்படியே பல ஆண்டுகள் ஓடிடுச்சு.

பெரிய பொண்ணுக்குக் கல்யாணம் முடிந்து, சின்னப் பொண்ணும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிட்டா. வீட்டுல சும்மாவே இருக்க விருப்பமில்லை. ‘இதுதான் நம்ம வாழ்க்கையா’ன்னு எனக்குள் எழுந்த கேள்விக்கு விடைதேடினேன். பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கக்கூடாதுன்னு நினைச்சு, தொழில்முனைவோராக முடிவெடுத்தேன். அப்போ எனக்குத் தெரிஞ்சது சமையற்கலை மட்டுமே. 2008-ம் ஆண்டு வீட்டுல இருந்த படியே சமையல் செய்து விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். கைப்பக்குவம் மாறாத பாரம்பர்ய குடும்பச் சமையல் முறையைத்தான் நாங்க கடைப்பிடிக்கிறோம். அதன்படி, ‘பாரம்பர்ய வீட்டுச் சாப்பாடு’ங்கிற பெயர்ல விற்பனையைத் தொடங்கினேன்.

பென்ஸ் காரில் டெலிவரி!

நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லியது தவிர, பேப்பர்ல நோட்டீஸ் விளம்பரம் செய்தேன். ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. அசைவ உணவுகளை மட்டும் சமைச்சு, டெலிவரியும் செய்தேன். ஒருநாள் டெலிவரி வேலையாள் லீவ். என்னோட பென்ஸ் கார்ல போய் நானே டெலிவரி செய்ய, வாடிக்கையாளர்கள் வியப்படைந்தாங்க. ‘வாடிக்கையாளர்களை இழந்திடக்கூடாதுன்னுதான் நானே வந்தேன். சமையலில் ஏதாவது குறை இருந்தா தயங்காம சொல்லுங்க. சரிப்படுத்திக்கிறேன்’னு அவங்க எல்லோர்கிட்டயும் சொன்னேன்.

என் பிசினஸ் கதை - 13: மாமியார் சமையல் கற்றுக்கொடுத்தார்... நான் முதலாளி ஆனேன்!

ஆர்டர்கள் அதிகரிக்கவே டெலிவரி செய்வது சிரமமானது. பிறகு, சென்னை ஷெனாய் நகர்ல சின்னதா கடை அமைச்சேன். சைவம் மற்றும் அசைவ உணவுகளை வீட்டுலயே சமைச்சு, அந்தக் கடையில மதியமும் இரவிலும் விற்பனை செய்தேன்.

ஒருகட்டத்துல ஒரே நேரத்துல பலருக்கும் வீட்டில் உணவு சமைப்பது சிரமமாச்சு. அதனால், ஒரு வாடகை வீட்டில் உணவுகளைச் சமைச்சு பேக் பண்ணி விற்பனை செய்தேன்.

வரவேற்பு அதிகரிக்கவே, நுங்கம்பாக்கம் இஸ்பஹானி சென்டர்ல 2010-ம் ஆண்டு ‘பாரம்பர்யம்' உணவகத்தை ஆரம்பிச்சேன். அந்த உணவகத்தை முழுக்க முழுக்க பாரம்பர்ய செட்டிநாடு வீடுகளின் சாயலில் வடிவமைச்சேன். எங்க குடும்பத்துல பெண்களுக்குக் கல்யாண சீதனமாக, முன்னோர்களின் பூர்வீகச் சமையல் பாத்திரங்களைக் கொடுப்பது வழக்கம். உறுதியாகவும் வேலைப்பாடுகளுடனும் இருக்கும் அத்தகைய பாத்திரங்கள் கடைகள்ல கிடைப்பதும் அரிதுதான். எனக்குச் சீதனமாகக் கிடைச்ச பாரம்பர்ய பாத்திரங்களை என் உணவகத்தில் காட்சிக்கு வைத்தேன். சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் அந்தப் பாத்திரங்கள் குறித்தும் ஆர்வமா விசாரிப்பாங்க.

அதிகாலையிலே மீன் ஷாப்பிங்!

உணவகத்தின் பெயருக்கேற்ப, பாரம்பர்ய கைமணம் மாறக்கூடாதுன்னு மசாலா தயாரிப்புக்கான தரமான பொருள்களைத் தேர்ந்தெடுத்துக் கைப்பட அரைச்சுப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கடைப் பிடிக்கிறேன். செயற்கைச் சுவையூட்டி உட்பட உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளையும் பயன்படுத்த மாட்டேன். என் உணவகத்துல நான் உட்பட என்னுடைய குடும்பத்தினர் பலரும் அடிக்கடி சாப்பிடுவோம். அதனால், வீட்டில் சமைப்பதுபோலவே உணவகத்துலயும் தரமான சமையலுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன்.

நடிகர்கள் விஷால், பார்த்திபன், ரகுமான், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் அடிக்கடி என் உணவகத்துக்கு வருவாங்க. மதுரையைச் சேர்ந்த சோடா நிறுவனத்திடமிருந்து தனி பிராண்டு பெயரில் ஹோல்சேலாக பன்னீர் சோடா உட்பட பல்வகை சோடாக்களை வாங்கி உணவகத்துலயே விற்பனை செய்தேன்.

தினமும் விடியற்காலை 4:30 மணிக்கு காசிமேடு மீன் மார்கெட்டுக்கு நானே போய் ஃப்ரஷ்ஷான மீன்களை வாங்குவேன். தினமும் வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் உணவின் தரம் குறித்துக் கேட்பதுடன், சாப்பிட்டுவிட்டு முழு திருப்தியுடன் அவங்க செல்வதை உறுதி செய்வேன்.

என் பிசினஸ் கதை - 13: மாமியார் சமையல் கற்றுக்கொடுத்தார்... நான் முதலாளி ஆனேன்!

இந்த நிலையில, சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் உணவகத்தைக் காலி செய்யும் சூழல் ஏற்பட்டுச்சு. அதன் பிறகுதான், அண்ணா நகரில் புது உணவகம் உருவானது. இங்கே லிஃப்ட், ஜன்னல் முதல் உள் அலங்கார வேலைப்பாடுகள் பலவற்றையும் பாரம்பர்ய முறையில் வடிவமைச்சேன்.

கலங்கி உட்காரக் கூடாது!

போட்டிகள் அதிகமாவது எப்போதும் பெரிய சவால்தான். அதனால, பிரபலங்கள் உட்பட பல தரப்பினருக்கும் இப்போ உணவுகளை டோர் டெலிவரி செய்வதுடன், விசேஷ ஆர்டர்களுக்கும் உணவு சப்ளை பண்றேன். ரெகுலர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்தாலும், இளைய தலைமுறையினரைக் கவர அடிக்கடி பல்வேறு தீம்களில் உணவுத் திருவிழாக்களை நடத்தறேன்.

உணவகம் சீராக இயங்கினாலும், தொழில் வளர்ச்சி இத்துடன் நின்றுவிடக்கூடாதுன்னு நினைச்சேன். சொந்தமா சோடா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணத்துல, அதுக்காக ஒரு வருஷம் மெனக்கெட்டு அனுபவங்களைக் கத்துக்கிட்டேன்.

2017-ம் ஆண்டு, ஶ்ரீபெரும்புதூர்ல சோடா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சேன். ‘ரோசோடா’ என்ற பெயரில் பன்னீர் சோடா, நன்னாரி சோடா உட்பட பல்வகையான சோடாக்களைத் தயாரிக்கிறேன்.

இப்போதைக்கு சென்னையிலுள்ள பல்வேறு கடைகளுக்கும் சோடாக்களை விற்பனை செய்கிறேன். விரைவில் வெளிநாடுகளுக்கும் சோடா ஏற்றுமதி செய்ய இருக்கிறேன்.

என் உணவகத்துக்குச் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் அதிகம் தேவைப்படுது. பெரு நகரங்கள்ல பாட்டில் குடிநீருக்கான தேவை அதிகமாகிட்டே இருக்கு. எனவே, சோடா நிறுவனத்துலயே ‘அக்வா’ என்ற பெயர்ல பல்வேறு அளவுகளில் பாட்டில் குடிநீரும் தயாரிச்சு விற்பனை செய்றேன். வேறு பிராண்டு பெயரில் மற்ற நிறுவனங்களுக்கும் குடிநீர் தயாரிச்சு விற்கிறேன்.

நிதானமாகவும் போதிய அனுபவத்துடனும் தொழிலை நடத்துறதால, இதுவரை பெரிய இடர்ப்பாடுகள் எதுவும் ஏற்பட்டதில்லை. மேலும், கலங்கி உட்கார்வதால் எந்தச் சிக்கலும் சரியாகாது என்பதைத் தீர்க்கமாக உணர்ந்து தினமும் உற்சாகமாகப் பயணிக்கிறேன்.

பணத்தின் அருமை தெரியணும்!

என் கணவர் சென்னையில ஆட்டோ மொபைல் நிறுவனத்தை நடத்துறார். தொழிலில் அவரவர் சொந்தத் திறமையால் முன்னேறி வருவதுதான் நீடித்த வளர்ச்சிக்குப் பயன்தரும்னு, ஒருவர் பிசினஸில் இன்னொருவர் தலையிட மாட்டோம். என் பெரிய பொண்ணு கிராஃப்ட் மற்றும் பெயின்டிங் நிறுவனத்தை நடத்துறாங்க. இன்றைய தலைமுறை இளைஞர்களைக் கவரும் வகையில, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சிந்தாமணி பகுதியில ‘The Hide out Bristo’ என்ற கான்டினென்டல் உணவகத்தை ஆரம்பிச்சு, அதன் நிர்வாகப் பொறுப்பை சின்னப் பொண்ணுக்கிட்ட ஒப்படைச்சுட்டேன். அந்த உணவகமும் நல்லா இயங்குது.

வேலைக்குப் போகணும்னு எனக்கு எந்த நிர்பந்தமும் ஏற்பட்டதில்லை. வீட்டில் முடங்கியிருந்தால், என்னோட திறமை என்னன்னு எனக்கே தெரியாமல் போயிருக்கும். ஆனா, இன்னிக்கு என்னை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அவங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன், மக்களுக்கு நல்ல உணவைக்கொடுக்கும் ஈடு இணையற்ற திருப்தி கிடைக்குது. என்னைப் பார்த்து மகள்களும் பிசினஸில் இறங்கியிருக்காங்க. வசதி வாய்ப்புகள் இருந்தாலும், பணத்தின் அருமை தெரிஞ்சு சுய அடையாளத்துடன் சரியான வழியில் செயல்படணும்னு மொத்தக் குடும்பமும் உறுதியா இருக்கோம். எல்லோருமே உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே உயர்வோம்!”

இதுதான் பிராசஸ்!

  • காய்கறிகள் மற்றும் இறைச்சியை உணவகத்தின் அன்றாடத் தேவைக்கான அளவில்தான் வாங்குவோம். எதிர்பாராத வகையில் உணவுப் பொருள்கள் மீதமாகிவிட்டால், பணியாளர்கள் கொண்டுசென்றுவிடுவார்கள்.

  • பன்னீர் சோடாவை மட்டும் சில நாள்களுக்குத் தொடர்ச்சியாகத் தயாரிப்போம். பிறகு, இயந்திரங்களைச் சுத்தம் செய்யப் பல மணி நேரம் ஆகும். அதன் பிறகு வேறு ஃப்ளேவர் சோடாவை சில நாள்களுக்குத் தயாரிப்போம். இப்படியே அடுத்தடுத்து பல்வேறு வகை சோடாக்களைத் தயாரிப்போம்.

  • முறையாக அனைத்துவித சான்றிதழ்களை யும் பெற்றிருக்கிறோம். அதன்படி எங்கள் நிறுவனத்திலேயே தரமான நிலத்தடி நீரை எடுத்து, தனி யூனிட்டில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீரைத் தயாரிக்கிறோம்.

  • தயாரிப்புப் பணிகள் முடிந்து பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடா மற்றும் தண்ணீரை மூன்று தினங்களுக்கு நிறுவனத்தின் சோதனைக் கூடத்தில் வைத்து பரிசோதனை செய்த பிறகே, விற்பனைக்கு அனுப்புவோம்.

என் அனுபவத்திலிருந்து...

  • வசதியானவங்களாலதான் பிசினஸ் பண்ண முடியும் என்ற எண்ணமே தவறானது. சில ஆயிரங்கள் முதலீட்டில் தொழில் தொடங்கி பெரிய தொழிலதிபர்களாக உயர்ந்தோர் பலர் உண்டு. போதிய அனுபவமும் திறமையும் மட்டுமே தொழில் தொடங்குவதற்கு அடிப்படைத் தேவைகள். இவை இருந்தால், தொழில் கடன் பெற்று தொழிலில் வெற்றி பெறலாம்.

  • குடும்பத்துல நாலு பேரும் தனித்தனித் தொழில்களில் பிஸியா இருக்கிறோம். ஆனா, குடும்பத்துக்கான நேரத்தையும், குடும்ப ஒற்றுமைக் கான முக்கியத்துவத்தையும் சரியாகக் கொடுக்கிறோம். அதனால் குடும்பம், பிசினஸ் என ரெண்டு தளத்திலும் எங்களால் சிறப்பாக இயங்க முடிகிறது.

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

“ரத்தன் டாட்டா... பல தொழில்களில் கவனம் செலுத்தினாலும், தன் ஊழியர்கள் அனைவரையுமே சிறப்பாக மதிப்பார். சரியான நபரை, சரியான பொறுப்பில் அமர்த்துவார். இந்த இரண்டு விஷயங்களாலும், அவர் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் ஒவ்வொரு தொழிலும் சரியாக நடக்கும். இதை நானும் கடைப்பிடிக்கிறேன். ரத்தன் டாட்டாவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, அவரின் பல நல்ல செயல்பாடுகளைக் பின்பற்றுகிறேன்!”

60 ஊழியர்கள்... ₹10 கோடி டர்ன் ஓவர்!

அனிதாவின் உணவகம் மற்றும் சோடா நிறுவனத்தில், 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். சோடா நிறுவனத்தில், தினமும் 2,000 லிட்டர் சோடாவும், 1,000 லிட்டர் குடிநீரும் தயாராகிறது. இரண்டு நிறுவனத்திலும் சேர்த்து ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஒவர் ஈட்டுகிறார்.